‘ஸ்போக்கன் தமிழ்’ வகுப்புகள் மூலம் மொரிஷியஸில் தமிழ் வளர்க்கும் ஜீவேந்திரன்! | Tamil people who teach tamil in Mauritius

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (19/12/2017)

கடைசி தொடர்பு:15:19 (19/12/2017)

‘ஸ்போக்கன் தமிழ்’ வகுப்புகள் மூலம் மொரிஷியஸில் தமிழ் வளர்க்கும் ஜீவேந்திரன்!

நமது மொழி பின்தள்ளப்பட்டபோது நாம் கிளர்ந்தெழுந்தோம். நமது அடையாளம் பறிக்கப்பட்டபோது, நாம் எதிர்ப்பைப் பதிவுசெய்தோம். நமது இனம் ஒடுக்கப்பட்டபோது, நாம் போராடினோம். சொந்த மண்ணில் இருந்து சாத்தியப்படுத்திய அனைத்தையும், அண்டை மண்ணில்  வந்து சாதித்திருக்கிறார்கள் மொரிஷியஸ் வாழ் தமிழர்கள். அந்த நாட்டில் வாழும் தமிழர்கள் குறித்தும் தமிழ்மொழி குறித்தும் அறிய, மொரிஷியஸ் தமிழ் பேசுவோர் ஒன்றியத் தலைவரும், மொரிஷியஸ் மகாத்மா காந்தி  கல்வி நிறுவனத்தின் மொழித் துறைத் தலைவருமான ஜீவேந்திரன் சேமெனைக் கோவையில் சந்தித்தேன்.

மொரிசியஸ்

“மொரிஷியஸில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு, தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?''

“என்   முன்னோர்,  தமிழகத்திலிருந்து மொரிஷியஸுக்கு  இடம்பெயர்ந்தவங்க. நான் பள்ளிப் படிப்பை முடிச்சவுடன், ஸ்காலர்ஷிப் மூலம் மேல்படிப்புப் படிக்க தமிழகம் வந்தேன். அந்த ஸ்காலர்ஷிப்பின் விதிப்படி, நான் தமிழ்மொழியிலதான் படிக்கணும். தமிழ்மொழியில படிக்க எனக்கு ஆரம்பத்திலிருந்தே விருப்பமில்லை. முதல் மூணு மாசம், கடமைக்கு வகுப்புல உட்கார்ந்திருந்தேன். `பேராசிரியர்கள் எல்லோரும் எதுக்காக வகுப்புல பாடுறாங்க?'னு  குழப்பமா இருக்கும்.

ஒருநாள், வகுப்புல இருக்கப் பிடிக்காம மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போயிட்டேன். வர வழியில வழக்கமா சாப்பிடுற சாப்பாட்டுக் கடைக்குப் போனேன். நான் வருத்தத்துல இருந்ததைப் பார்த்த அண்ணனுங்கதான் என்னைத் தேத்தினாங்க. அதுக்கப்புறம், என்ன நடந்ததுன்னு தெரியலை. உடனே கல்லூரிக்குப் போய், தேவையான புத்தகங்களை எடுத்தேன். அன்னிக்கு வந்த ஆர்வம்தான், தமிழ் மொழியை இன்னிக்கும் நேசிக்கிறேன். நான் இப்ப இந்த நிலையில இருக்கேன்னா, அதுக்கு முழுக் காரணம் மதுரைப் பேராசிரியர்கள்தான். எத்தனையோ இரவுகள் எனக்காக சிறப்பு வகுப்புகள் எடுத்திருக்காங்க. மஞ்சக்காமாலை நோயால் நான் பாதிக்கப்பட்டப்போ, என்னை மூணு மாசம் அவங்க வீட்டுலேயே வெச்சுப் பார்த்துக்கிட்டாங்க. அவங்களுக்கும் இந்த நாட்டுக்கும்  நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.''

“மொரிஷியஸில்  தமிழ் இனத்தின் நிலை என்ன?''

“அடிமை ஒழிப்பு இயக்கத்துக்குப் பிறகு, இந்தியாவிலிருந்து ‘skilled labours’-ஆகத் தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து மக்கள் மொரிஷியஸுக்கு இடம்பெயர்ந்தாங்க. மொரிஷியஸின் உருவாக்கத்தில் தமிழர்களோட உழைப்பு அதிகம். மொரிஷியஸின் மக்கள்தொகையில் எங்கள் சதவிகிதம் குறைவா இருந்தாலும், எங்களின் இனத்தை நாங்கள் சிறுபான்மையாகக் காட்டிக்கொண்டதே இல்லை. குட்டித் தீவான மொரிஷியஸில், தமிழ்க் கோயில்கள் அதிகம் இருக்கு. அரசியல் அமைப்பிலும் தமிழர்கள் அதிகம் இருக்காங்க. எங்க துணை ஜனாதிபதி தமிழ்தான். தமிழ்ப் பண்டிகைகளுக்குத் தேசிய விடுமுறை, பல்கலை மத்தியில் திருவள்ளுவர் சிலை என எங்கள் நாடு, எம்  இனத்தைக் கொண்டாடுகிறது.”

“மொரிஷியஸின் மொழி, பண்பாடு எப்படிப்பட்டவை?”

“எங்கள் நாட்டின் பூர்வகுடி மக்களின் மொழி கிரியோல். அரசாங்க ரீதியான தகவல் பரிமாற்றம் ஆங்கிலத்தில் இருக்கும். ஊடகங்கள் அனைத்திலும் பிரெஞ்சு, பாலிவுட் படங்களின் தாக்கத்தால் இந்தியும் பரவலாக இருக்கு. இப்படி பன்மொழிக் கலப்பில் வளரும் எங்கள் பிள்ளைகள் மட்டுமல்லாமல், எங்கள் வயதினருக்கேகூட தமிழ்மொழி ஆற்றல் குறைவுதான். ‘எங்கட மொழிய இழந்துட்டா, எங்கட இனத்தையும் இழந்திருவோம்னு  எங்களுக்குத் தெரியும். அதனாலதான், பெரும் முயற்சி எடுத்து எங்க மொழியை அடுத்த தலைமுறைக்குக் கத்துகொடுக்குறோம். மொரிஷியஸ் அரசாங்கமும் இதை ஊக்கப்படுத்துது.”

“தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்க, எந்த மாதிரியான திட்டங்களை முன்னெடுக்கிறீர்கள்?''

“நாங்க கவனம் செலுத்துறது ஸ்போக்கன் தமிழ்தான். எங்க மக்களுக்குப் பேச்சுமொழியைக் கத்துக்கொடுத்துட்டா, எப்படியாச்சும் எங்கட மொழியைத் தக்கவெச்சிருவாங்கங்கிற நம்பிக்கை இருக்கு. எங்க பேச்சுத்தமிழ் வகுப்புகள்ல எல்லா வயதுக்காரர்களும் இருப்பாங்க. படிப்புக்குத் தேவையான புத்தகங்களை நாங்களே வடிவமைச்சிருக்கோம். ஆங்கிலத்துல எழுதப்பட்டிருக்கும் வாக்கியத்தைத் தமிழ்ல படிப்பாங்க. தினமும் நம்ம வாழ்க்கையில பயன்படுத்தும் சாதாரணமான சூழ்நிலைக்குத் தேவைப்படும்  மொழியைத்தான் கத்துக்கொடுக்குறோம். பயன்பாட்டுல இருக்கும் மொழிதான் உயிர் பிழைக்கும்.''

தமிழ்

“இளம் தலைமுறையின் மொழிப்பற்று எப்படி இருக்கிறது?”

“எங்கட பிள்ளைகளுக்கு அவர்கட இனத்து மேலயும் மொழி மேலயும் பிடிப்பு அதிகம். குறிப்பா, எங்கட பெண்கள்தான் இன அடையாளங்களைப் பாதுகாக்கிறதுல முக்கியப் பங்கு வகிக்கிறாங்க. கோயில்களுக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கும் பாரம்பர்ய உடை உடுத்துறதை கட்டாயம் பின்பற்றுவாங்க. தாலி, மிஞ்சி போன்ற அடையாளங்களை விட்டுக்கொடுக்கவே மாட்டாங்க. நீங்க மொரிஷியஸுக்குப் புதுசா வந்து, எங்க கோயில்களுக்குப் போனீங்கனா, உங்களுக்குத் தவறான எண்ணம் வந்துரும். எங்கட பிள்ளைகள் தேவாரம், திருவாசகம் எல்லாம் தெளிவா ஓதுவாங்க. அவங்களை நெருங்கிப் பார்த்தால்தான், தேவாரப் பாடல்களை  ரோமன் ஸ்க்ரிப்ட்ல எழுதிப் படிக்கிறது தெரியும்.

சமயம்தான் மொழியைத் தாங்கி நிக்குது. மொரிஷியஸ் ரூபாய் நோட்டுல ரெண்டாவது இடத்துல  இருந்த தமிழ், நான்காவது இடத்துக்கு மாத்தினதை எதிர்த்துப் பெரிய போராட்டம் நடந்துச்சு. தமிழர்கள் எல்லோரும் ஒண்ணாப் போராடினோம். `எங்கள் மொழிக்கு இடம் இல்லை என்றால், போராட அண்ணன் வருவார்' என்ற வாசகங்களோடு உணர்வுபூர்வமா நடந்த போராட்டத்துல நின்ன 8,000 பேர்ல, 500 பேருக்குத்தான் அங்கே எழுதியிருந்த தமிழ் வாசகங்களைப் படிக்கத் தெரியும். இப்படி எங்கட மக்களோட மொழி உணர்வு, இன உணர்வோடு கலந்தது.''

“ஸ்போக்கன் தமிழ் வகுப்புகளின் விளைவு எப்படி இருக்கிறது?”

“வகுப்புகளுக்குப் பிறகு, எங்கட மக்கள் பொது இடங்கள்ல சந்திக்கும்போது முடிந்த அளவுக்குத் தமிழ் பேசுறாங்க. ஒரு நிகழ்வைச் சொல்றேன். `வயதான அம்மா ஒருத்தரைக் கோயில்ல சந்திச்சேன். அவங்க ஸ்போக்கன் தமிழ் படிச்சவங்க. என்னை இனம் கண்டு, என்னோட பேசினாங்க. `தம்பி, என் ஒரு கால் வீட்டுலயும் மறு கால் இடுகாட்லயும் இருக்கு. நான் வகுப்புக்குப் போறதுல என்ன பயன்னு எல்லாரும் கேட்டாங்க. நானும் மரணத்தைப் பத்தின பயத்தோடு இருந்தேன். ஆனா, இப்ப சந்தோஷமா இருக்கேன். நான்  இறக்கும்போது என் மொழி என்னோடு இருக்கும்'னு சொன்னார். இதுதான் எங்க வெற்றி. உலகின் முன்னோடி  இனத்துக்கு, அதன் மொழியை அடையாளம் காட்டும் அதிர்ஷ்டம் யாருக்குக் கிடைக்கும்?"


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close