“நிதியில்லைப்பா..!” - கைவிரிக்கும் அமெரிக்கா... என்ன ஆகும் சர்வதேச விண்வெளி நிலையம்? | International Space Station to be closed? How NASA is going to respond?

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (19/12/2017)

கடைசி தொடர்பு:15:33 (19/12/2017)

“நிதியில்லைப்பா..!” - கைவிரிக்கும் அமெரிக்கா... என்ன ஆகும் சர்வதேச விண்வெளி நிலையம்?

சர்வதேச விண்வெளி நிலையம்

பூமியின் கடற்பரப்பிலிருந்து 330-450 கிலோமீட்டர் உயரத்தில் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station - ISS). மனிதர்கள் வசிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெரிய செயற்கைக் கோள் பூமியின் கீழ் வட்டப்பாதையில் மணிக்கு 27,724 கிலோமீட்டர் வேகத்தில் பயணம்செய்து ஒரே நாளில் 15.54 முறைகள் தன் நீள்வட்டப்பாதையை முழுவதும் சுற்றிவருகிறது. மற்ற கோள்களை விட பூமிக்கு மிக அருகிலேயே இருப்பதால், அவ்வப்போது இதை சாதாரண கண்கள் கொண்டே வானில் பார்க்கலாம். பல அழுத்தப்பட்டத் தொகுதிகள், வெளிப்புறத் தட்டுகள், சோலார் தகடுகள் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இது ரஷ்யாவின் புரோட்டோன் மற்றும் சோயுஸ் ராக்கெட்டுகள், மற்றும் அமெரிக்காவின் ஸ்பேஸ் ஷட்டில்கள் கொண்டு விண்ணில் 1998ம் ஆண்டு முதல் சிறிதுசிறிதாக விண்ணில் ஏவப்பட்டது. 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 ஆண்டுகளாக இங்கே ஆராய்ச்சியாளர்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

இந்தச் சர்வதேச விண்வெளி நிலையம் உலகின் ஐந்து முன்னணி விண்வெளி நிறுவனங்களான அமெரிக்காவின் நாசா (NASA), ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் (Roscosmos), ஜப்பானின் JAXA, ஐரோப்பாவின் ESA மற்றும் கனடாவின் CSA போன்றவற்றின் ஆராய்ச்சிகளை நடத்திக்கொள்ளப் பயன்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி ரஷ்ய சுற்றுப்பாதை பிரிவு (ROS), மற்றொரு பகுதி ஐக்கிய அமெரிக்க சுற்றுப்பாதை பிரிவு (USOS) என்று பிரிக்கப்பட்டாலும், வெவ்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல நாடுகள் இதைப் பயன்படுத்தி வருகின்றன. இவ்வாறு பல நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பயன்படுத்தி வந்தாலும், நாசாதான் அதிக அளவில் அதன் பராமரிப்பிற்காக நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த 1985 முதல் 2015ம் ஆண்டு வரை மட்டும் நாசா அமெரிக்கா அரசு மூலம் 58.7 மில்லியன் டாலர்களைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்காகச் செலவு செய்துள்ளது. 2010ம் ஆண்டின் போது இதன் மதிப்பு 72.4 பில்லியன் டாலர்களாக ஆகிப்போனது. ரஷ்யா 12 பில்லியன், ஐரோப்பா மற்றும் ஜப்பான் தலா 5 பில்லியன், கனடா 2 பில்லியன் என்று மற்ற நாடுகளின் டாலர் கணக்கு இருக்கிறது.

சர்வதேச விண்வெளி நிலையம்

இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா, இன்னும் 10 ஆண்டுகளில், அதாவது 2024ம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்காகக் கொண்டுவரப்பட்ட நிதி ஒதுக்கும் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாகத் தெரிவித்தது. அதன் பிறகு, நாசாவிற்கு எனப் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் நிதி மட்டும் தொடரும் என்றாலும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து வாய் திறக்கவில்லை. சமீபத்தில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், நாசாவிற்கும் அதன் சந்திரன், செவ்வாய் மற்றும் அதைத் தாண்டிய ஆராய்ச்சிகளுக்கும் நிதி ஒதுக்குவதாக அறிவித்தார். அவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு என்று எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒருவேளை, நிதி எதுவும் கிடைக்காத பட்சத்தில், இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மூடு விழாதான் நடத்தவேண்டியிருக்கும். ஏனென்றால், மற்ற நாடுகள் அளிக்கும் நிதியைவைத்து அவ்வளவு பெரிய சர்வதேச விண்வெளி நிலையத்தை நிச்சயம் பராமரிக்க முடியாது.

சர்வதேச விண்வெளி நிலையம்

Photos Courtesy: NASA

ஒருவேளை, நாசா தனக்கு அரசு அளிக்கும் நிதியிலிருந்து ஒரு பெரிய தொகையை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தியாகம் செய்தால், அதன் பணிகள் தொடரலாம். ஆனால், அப்படிச் செய்தால், நாசாவின் தற்போதைய கனவான செவ்வாய் கிரகம் தாண்டிய பயணம் நிஜமாகவே கனவாகிப் போய்விடும். ஒருவேளை, நாசா நிதி ஒதுக்க முடிவு செய்தாலும், அதை அனுமதிக்கும் உரிமை காங்கிரஸின் விஞ்ஞானம், விண்வெளி மற்றும் தொழில்நுட்பத்தின் ஹவுஸ் கமிட்டி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பலரின் விருப்பம் செவ்வாய் தாண்டிய பயணம்தான் என்றாலும், சர்வதேச விண்வெளி நிலையத்தால் நிறையப் பயன்கள் உண்டு. அந்த இடம் தற்போது விண்வெளி தாண்டி பயணம் செய்ய விரும்புபவர்களுக்குப் பயிற்சியளிக்க ஏதுவான இடம். மைக்ரோ கிராவிட்டி எனப்படும் ஜீரோ கிராவிட்டி அங்கு இருப்பதால், பயிற்சி வகுப்புகள் எடுக்க இதுதான் சரியான இடமாக இருக்கும்.

எனவே, ஒப்பந்தம் முடிந்தபின்பு இதற்கு மூடுவிழா நடத்தாமல், எலான் மஸ்க் அவர்களின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அல்லது விர்ஜின் கலாக்டிக் போன்ற நிறுவனங்களுக்குக் கொடுத்துவிட்டால், அவர்கள் அதைப் பராமரிக்கலாம். எப்படியிருப்பினும், தற்போது முடிவு எடுக்க வேண்டியது நாசாவும், காங்கிரஸூம்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்