‘‘சிறிய கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்” - நோட்டா குறித்து ஞாநி | What people try to speak by voting NOTA

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (19/12/2017)

கடைசி தொடர்பு:17:28 (19/12/2017)

‘‘சிறிய கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்” - நோட்டா குறித்து ஞாநி

நடந்துமுடிந்த குஜராத் தேர்தல் மிக முக்கியமான ஒரு தேர்தலாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. மோடி பிரதமரான பிறகு குஜராத்தில் நடந்த முதல் தேர்தல் இது. அதேபோல, ராகுல் காந்தி அதிகாரபூர்வமாக காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்ட பின் வந்திருக்கும் முதல் தேர்தல் முடிவு. இவற்றைத் தாண்டி மொத்தம் பதிவான வாக்குகளில் 5,18,235 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். பல இடங்களில் வெற்றி வாய்ப்பைக் கட்சிகளிடமிருந்து பறித்ததில் நோட்டாவுக்கு முக்கியப் பங்குண்டு.

நோட்டா

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக டிசம்பர் மாதம் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் மொத்தம் 68.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன மொத்தம் பதிவான வாக்குகளில் பா.ஜ.க 49.1 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 41.4 சதவீத ஓட்டுகளையும் பெற்றது. நோட்டாவுக்கு 1.8 சதவித மக்கள் வாக்களித்திருந்தனர்.

பா.ஜ.க 99 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய பழங்குடி கட்சி இரண்டு தொகுதிகளிலும் வெல்ல, சுயேச்சைகள் மூன்று தொகுதிகளைக் கைப்பற்றினர். பல தொகுதிகளில் சில ஆயிரம் ஓட்டுகளே வெற்றி வித்தியாசம். நோட்டாவுக்குக் கிடைத்த ஓட்டுகள் வெற்றியை மாற்றி அமைத்திருப்பதாகவும் பலரும் கருத்துக் கூறினர். நோட்டா முறைகொண்டு வரப்பட்ட பிறகு நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் நோட்டாவுக்கான வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டு 3 ஆண்டுகளே ஆன நிலையில் நோட்டாவை பற்றிய விழிப்புஉணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளது. 

NOTA- None Of The Above. மேலே குறிப்பிடப்பட்டுள்ள யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என பொருள்படும் நோட்டா, வாக்குப் பதிவு எந்திரத்தின் கடைசி பொத்தானாகப் பொருத்தப்பபட்டிருக்கும். 2014 ம் ஆண்டு நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியாவிலேயே முதன் முறையாக இம்முறை பயன்படுத்தப்பட்டது. நோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இளைஞர் பலரும் நோட்டாவுக்கு வாக்களிக்கும் படி மக்களிடம் அறிமுகப்படுத்தினர். தமிழகத்தில் நோட்டா குறித்து பத்திரிகையாளர் ஞாநி பல தளங்களில் பேசி வந்தார். அரசியல் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வரும் அவரிடம் பேசியதிலிருந்து...

Gnani

குஜராத் தேர்தலில் நோட்டாவுக்கு 1.8 சதவித வாக்குகள் கிடைத்ததைப் பற்றி...? 

கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையற்ற தன்மையையே காட்டுகிறது. மொத்தமே 68 சதவித மக்கள்தான் வாக்களித்துள்ளனர். வாக்களிக்காத மக்களுக்கும் ஒருவேளை கட்சிகளின் மீதான அதிருப்தியே காரணமாக இருந்ததால் எதிர்ப்பு இன்னும் அதிகம் என்றுதான் அர்த்தம்.

எல்லாக் கட்சிகளின் மீதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறதா?

ஆம். மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாகத்தானே நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். சிறிய கட்சிகளின் செயல்பாடுகளும் கூட, மக்களுக்கு திருப்தி அளிக்காத நிலையிலேதான் மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இது நிரந்தரத் தீர்வாக இருக்குமா?

இது ஒரு விதமான எதிர்ப்புதானே. மாற்றத்துக்கு மக்கள் விரும்பும்போது தங்களை மாற்றாக நினைக்கும் கட்சிகளின் செயல்பாடின்மையும் இதற்கு ஒரு காரணம். மேலும், மொத்தமாக அதிக மக்கள் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தால் தேர்தல் ஆணையம் அதை பரிசீலனை செய்திருப்பார்கள்.

ஜிக்னேஷ் மேவானி போன்ற புதியவர்களின் வெற்றியை மாற்றத்துக்கான ஆரம்பமாகப் பார்க்கலாமா?

சுயேச்சையான அவருக்குக் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததே, அவரின் வெற்றிக்கு முக்கிய காரணம். மாற்றம் நிகழ வேண்டுமானால் டெல்லியில் ஆம் ஆத்மி உருவானதுபோல, வலுவான செயல்பாடுகளால்தான் உருவாக முடியும்.

மக்கள் மாற்றங்களை விரும்புவதுதான் நோட்டாவை நோக்கி அவர்கள் விரல்களைக் கொண்டு செல்ல வைக்கிறது.’’


டிரெண்டிங் @ விகடன்