விபரீத வேலை... பிரத்யேக உடை... விவசாயிக்குத் தோள் கொடுக்கும் கழுதை!

தன்னுடைய உதவிக்கு எவையெல்லாம் பயனுள்ளதாக இருக்குமோ அவற்றையெல்லாம் தனக்குச் சாதகமாக மாற்றுவதில் மனிதன் படுகில்லாடி. குதிரையில் ஆரம்பித்து யானை, மாடு, ஒட்டகம், கழுதை எனப் பல விலங்குகளை தன்னுடைய பயன்பாட்டுக்கு லாகவமாக பயன்படுத்திக்கொண்டான். இன்னும் அந்த விலங்குகளை எப்படியெல்லாம்  பயன்படுத்தலாம் என யோசித்தவனின் 21-ம் நூற்றாண்டின் வினோத கண்டுபிடிப்பு  “BEEKEEPING DONKEY” 

BEEKEEPING DONKEY


மானுவல் ஜூராசி வியரா என்பவர் பிரேசில் நாட்டில் உள்ள இடதிரா என்கிற ஊரில் வசித்துவருகிறார். அங்கிருக்கிற மக்களின் முக்கியத் தொழிலாக தேனீ வளர்ப்பு இருந்துவருகிறது. தேனீ வளர்ப்பின் மூலம் வருகிற தேனை தள்ளுவண்டி போன்ற ஒரு வண்டியில் தேனை சேகரித்து விற்பனை செய்துவருகிறார். இருபது பேர் அவருடைய தேனீ பண்ணையில் பணிபுரிந்துவருகின்றனர். 

ஜூராசி வியரா தன்னுடைய வீட்டில் “போனிகோ” எனப் பெயரிட்ட ஒரு  கழுதையை வளர்த்துவருகிறார். அவருடைய பண்ணையில் பணிபுரிகிற ஒரு சிலர் “இந்தக் கழுதையை தேன் சார்ந்த ஏதாவது ஒரு வேளையில் பயன்படுத்தலாமே என யோசனை சொல்கிறார்கள். இரண்டொரு நாள் கழித்து கழுதைக்கான ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக சொல்கிறார். அதாவது தேனீ வளர்க்கும் இடத்தில் இருந்து தேனை சேகரிக்கக் கழுதையை பயன்படுத்தப்போவதாகச் சொல்கிறார். ஆனால் அவரோடு பணி புரிகிறவர்கள், "கழுதையை எப்படிப் பயன்படுத்த முடியும்? தேனீ இருக்கிற இடத்துக்கு கழுதை வரநேர்ந்தால் தேனீக்கள் கொட்டுமே!” எனச் சந்தேகப்படுகிறார்கள். 

BEEKEEPING DONKEY

 

பத்து நாள்கள் இடைவெளியில் தேனீ இருக்கிற பண்ணைப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு வினோதமான விலங்கு வருவதைத் தோட்டத்தில் இருக்கிறவர்கள் பார்க்கிறார்கள். உடன் ஜூராசி வியரா வருவதையும் பார்க்கிறார்கள். சற்று கூர்ந்து கவனித்ததில் ஜூராசி வியராவுடன் வருவது அவருடைய  கழுதை போனிகோ  என்பதை உணர்கிறார்கள். “கழுதையைப் பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாதா என்கிற ஒரு கேள்வி எழலாம்” அவர்கள் குழம்பிப் போவதற்கும் ஒரு காரணம் இருந்தது. 

ஏனெனில், தேனீக்கள் இருக்கிற பகுதிக்கு எந்த விலங்குகளும் செல்வதற்குப் பயப்படும். காரணம் கூட்டமாக சேர்ந்து தேனீக்கள் கொட்ட ஆரம்பித்துவிடும். தேனீக்களின் சத்தமே பல விலங்குகளை அச்சமடையச் செய்யும். ஆப்ரிக்கா நாடுகளில் யானைகளிடமிருந்து பயிர்களை காக்கத் தேனீ வேலி என்கிற முறை இப்போதும் வழக்கத்தில் இருந்துவருகிறது. அப்படியான ஒரு பகுதிக்கு போனிகோவை ஜூராசி வியரா அழைத்து வந்திருந்தார். அதுவும் சேகரிக்கிற மொத்த தேனையும் வீட்டுக்குச் சுமந்து செல்ல கழுதையைப் பயன்படுத்துவதற்காக அழைத்துவந்திருந்திருந்தார்.  

கழுதையின் உடல் முழுமைக்கும் பிரத்யேக உடை தயாரித்து அதைக் கழுதைக்கு அணிவித்திருந்தார். தலையிலிருந்து வால் பகுதி வரைக்கும் கழுதையின் உடல் மறைக்கப்பட்டிருந்தது. கழுதையின் முகப்பகுதிக்கு வலை போன்ற ஒரு துணியைப் பயன்படுத்தியிருந்தார். கழுதையின் எந்த உடல் பாகத்தையும் தேனீக்கள் தீண்டாத வண்ணம் அந்த உடை தயாரிக்கப்பட்டிருந்தது. 

கழுதை


உடையைத் தயாரிக்க 15 நாள்கள் ஆனது எனக் கூறும் ஜூராசி வியரா, 2014-ம் ஆண்டிலிருந்து தேன்  சேகரிக்கக் கழுதையைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கிறார். முதல்முறை அந்த உடையை போனிகோவுக்கு அணிவிக்கும்பொழுது அந்த உடை அதற்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது; அந்த உடை அணிவித்ததற்காக எந்தத் தடையும் தெரிவிக்கவில்லை என்கிறார். மூன்று வருடங்களாகத் தேனீ சேகரிப்பில் இருக்கிற போனிகோ உலகின் முதல் தேன் சேகரிக்கும் விலங்கினம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. 

தேனீ பண்ணையில், போனிகோ சீருடை அணிந்து ஜூராசி வியராவுடன் ஒய்யாராமாய் நடந்துவருவதைப் பார்க்கும்போது, நிலவில் விண்வெளி வீரர்கள் நடப்பதைப் போலவே இருக்கிறது; அந்த அழகிலும், மிடுக்கிலும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!