பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! - #MotivationStory | Happiness Is Everywhere #MotivationStory

வெளியிடப்பட்ட நேரம்: 07:08 (20/12/2017)

கடைசி தொடர்பு:08:53 (20/12/2017)

பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! - #MotivationStory

கதை

`ம்மிடம் மாற்றத்தை உருவாக்குவது ஆசிரியர்தானே தவிர, வகுப்பறை அல்ல’ என்று சொல்லியிருக்கிறார் ஆங்கில எழுத்தாளரும் கவிஞருமான மைக்கேல் மோர்புர்கோ (Michael Morpurgo). பள்ளி நாள்களை நாம் அசைபோடும்போதே நமக்குள் அழுத்தமாக வந்துவிழும் உருவம் நமக்குப் பிடித்த ஆசிரியராகத்தான் இருப்பார். ஆசிரியர் நமக்கு நல்ல முறையில் சொல்லிக் கொடுத்த ஒரு பாடம் வாழ்நாளெல்லாம் நம் நினைவுக்கு வரும். எல்லோருக்குமே பள்ளி நாள்களும், அங்கே கற்றுக்கொண்ட மறக்க முடியாத பாடங்களும் நிச்சயம் நினைவில் நிற்கும். ஒரு வகுப்பறையில் மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியை ஒருவர் நடத்திய இரு பாடங்கள், அவை உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்களை விவரிக்கிறது இந்தக் கதை.

அது ஒரு பள்ளிக்கூடத்தின் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் நிறைந்திருந்த அறை. நாளின் முதல் வகுப்பு. மாணவர்கள் வகுப்பு ஆசிரியை வருவதற்காகக் காத்திருந்தார்கள். அன்றைக்கு ஏனோ அவர் வருவதற்கு தாமதம் ஆகிக்கொண்டிருந்தது. ஆசிரியர் இல்லாத வகுப்பறை அதகளம்தானே... அதுதான் அங்கும் நடந்துகொண்டிருந்தது. மாணவர்கள், உரத்தக் குரலில் பேசி, சிரித்துக்கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும், சிலர் பொருள்களை வீசியபடியும் இருந்தார்கள். ஆசிரியை வந்தார். வகுப்பு கப்சிப்பென அடங்கிப்போனது.

அந்த ஆசிரியை மிக மென்மையானவர். அதிர்ந்த குரலில் பேச மாட்டார். மாணவர்களை அரவணைத்துச் செல்வார். வெறும் பாடங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை எளிமையாக உணர்த்துவதில் வல்லவர். உள்ளே வந்தவர், வகுப்பறையை ஒரு நோட்டம்விட்டார். பிறகு, போர்டில் எழுத ஆரம்பித்தார்.

வகுப்பறை

1 x 5 = 3

2 x 5 = 10

3 x 5 = 15

4 x 5 = 20

5 x 5 = 25

6 x 5 = 30

7 x 5 = 35

8 x 5 = 40

9 x 5 = 45

10 x 5 = 50

இந்த வாய்ப்பாட்டை எழுதி முடித்துவிட்டு, மாணவர்களைப் பார்த்தார். பல மாணவர்களின் முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொண்டிருந்தது. அவர்களில் ஒரு மாணவனைக் கூப்பிட்டார். ``உங்களுக்கெல்லாம் ஏன் சிரிப்பு வருது...’’

``அது வந்து...’’

``பயப்படாம சொல்லு...’’

``இல்லை டீச்சர்... இது ரொம்ப எளிமையான வாய்ப்பாடு. நீங்களே மத்த எல்லாத்தையும் சரியா எழுதியிருக்கீங்க... ஆனா, `1 x 5 = 3’னு எழுதியிருக்கீங்களே... தப்பு இல்லையா?’’

``தப்புதான். காரணத்தோடதான் அப்பிடி எழுதினேன். நாம ஆயிரம் விஷயத்தை சரியா செஞ்சிருப்போம். அதையெல்லாம் இந்த உலகம் கவனிச்சாலும் மறந்துடும். ஏதோ ஒண்ணைத் தப்பா செஞ்சிருப்போம். அதை ஞாபகத்துலவெச்சிருந்து கேள்வி கேட்கும். அதனால முடிஞ்சவரைக்கும் தப்பு செய்யாம இருக்கப் பாருங்க.’’

***

இன்னொருநாள்... அதே வகுப்பறை. ஆசிரியை மாணவர்கள் எல்லோருக்கும் ஆளுக்கொரு பலூன் கொடுத்தார். ஒரு மார்க்கர் பேனாவால், ஒவ்வொரு பலூனிலும் அவரவருடைய பெயரை எழுதச் சொன்னார். மாணவர்கள் அப்படியே செய்தார்கள். எல்லா பலூன்களையும் சேகரித்து, பள்ளி உதவியாளரை அழைத்து வேறோர் அறையில் கொண்டுபோய் போடச் சொன்னார் ஆசிரியை.

சிறிது நேரம் கழித்து ஆசிரியை சொன்னார்... ``இப்போ எல்லாரும் பலூன் இருக்குற ரூமுக்குப் போங்க. உங்க பேரை எழுதிவெச்சீங்கள்ல... அந்த பலூனைப் பார்த்து எடுத்துட்டு வாங்க... அஞ்சு நிமிஷம்தான் டைம்.’’

மாணவர்கள் அந்த அறைக்கு ஓடினார்கள். ஆனால், அந்த 50 மாணவர்களில் ஒருவரால்கூட தங்களுடைய பலூனை 5 நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை. பதிலாக, கூச்சலும் குழப்பமும்தான் எழுந்தன. ஆசிரியை விசில் ஊத, எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.

``சரி... இப்போ மறுபடியும் அந்த ரூமுக்குப் போங்க. யாருக்கு எந்த பலூன் கிடைக்குதோ, அதுக்கு உரிய மாணவனைக் கூப்பிட்டுக் குடுங்க. 5 நிமிஷம் டைம்...’’ என்றார் ஆசிரியை.

மாணவர்கள் மறுபடியும் ஓடினார்கள். கையில் ஒரு பலூனை எடுத்ததும் ஒருவன், `சுரேஷ்...’ என்று கத்தினான். சுரேஷ் வந்து பலூனை வாங்கிக்கொண்டான். இன்னொருவன். `பிரகாஷ்’ என்றான். பிரகாஷ் வந்து வாங்கிக்கொண்டான். நான்கு நிமிடங்களுக்குள் அவரவர் பலூன் அவரவர் கைகளில் இருந்தது. எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.

வகுப்பு

ஆசிரியர் சொன்னார்... ``இந்த பலூனைப் போலத்தான் நம்ம வாழ்க்கையிலயும் நடக்குது. நாம் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை சுத்தி எங்கெங்கேயோ தேடுறோம். அது எங்கே இருக்குன்னுதான் யாருக்கும் தெரியறதில்லை. நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவரிடம்தான் இருக்குது. மத்தவங்களோட மகிழ்ச்சி நம்மகிட்ட இருக்குது. மத்தவங்களுக்கு நீங்க சந்தோஷத்தைக் குடுத்தீங்கன்னா, உங்களோட சந்தோஷமும் உங்களுக்கு மத்தவங்ககிட்டருந்து கிடைச்சே தீரும்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்