இரண்டு பேர் செஸ் தெரியும்... மூன்று பேருடன் செஸ் ஆடியிருக்கிறீர்களா? | Have you ever played three person chess

வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (22/12/2017)

கடைசி தொடர்பு:16:18 (22/12/2017)

இரண்டு பேர் செஸ் தெரியும்... மூன்று பேருடன் செஸ் ஆடியிருக்கிறீர்களா?

செஸ்

செஸ் விளையாடியிருக்கிறீர்களா? பொதுவாக இரண்டு பேர் விளையாடும்போது மூன்றாவதாக இன்னொருவர் எப்படியும் பக்கத்தில் இருப்பார். வடிவேலு சீட்டுக்கட்டு விளையாட சொல்லித் தருவது போல “குதிரையை நகர்த்து”, “ராணியைத் தூக்கு” என இரண்டு பக்கமும் ஐடியாக்களை அள்ளித் தெளிப்பார். மூன்று பேர் இருக்கும்போது செஸ் விளையாடாமல் இருப்பதே நல்லது என்பதுதான் பல சதுரங்க சாம்பியன்களில் விருப்பமாக இருக்கும். ஒருவேளை, செஸ் விளையாட்டை மூன்று பேர் விளையாட முடிந்தால்???

ஆம். மூன்று பேர் விளையாடும் செஸ் போர்டு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அவ்வளவு பிரபலம் இல்லையென்றாலும், இதற்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. செஸ் போர்டு ரொம்ப வித்தியாசம் இல்லாமல் இருந்தாலும், பார்க்கவே சுவாரஸ்யமாய் இருக்கிறது. 
செஸ் போர்டின் வடிவம் அறுகோணத்தில் இருக்கிறது. மூன்று பக்கங்களில் மூன்று நிறக் காய்களை அடுக்கிக்கொள்ளலாம். கட்டங்கள் மற்றும் காய்கள் வழக்கமான சதுரங்கத்தைப் போலவே இருக்கிறது. அதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஒவ்வொரு காயும் எப்படி நகரும் என்பதிலும் மாற்றங்கள் இல்லை. போர்டு சதுரமாக இருக்காது என்பதுதான் வித்தியாசம். யானைய நகர்த்தினால் அது நேர்க்கோட்டில் நகரமால் கொஞ்சம் வளைந்து செல்லும். அவ்வளவுதான்.

அறுகோணம் மட்டுமில்லாமல், வட்டமாகவும் முக்கோண வடிவத்திலும் கூட சில செஸ் போர்டுகள் இருக்கின்றன. ஆனால், அறுகோண போர்டுதான் அதிக பேரால் விளையாடப்படுகிறது.

செஸ்

இதன் விதிமுறைகள் எப்படி இருக்கும்?

இந்தப் போட்டியில் யார் முதலில் செக்மேட் செய்கிறார்களோ அவர்தான் வின்னர். எந்த ராஜாவுக்கு செக் வைக்கப்பட்டதோ அவர் கடைசி. மற்றொருவர் இரண்டாமிடம். மூன்று பேர் விளையாடும் எந்தப் போட்டியிலும் ஒரு சிக்கல் உண்டு. இரண்டு பேர் சேர்ந்துகொண்டு மூன்றாமவரை கார்னர் செய்யலாம். இதைச் சமாளிப்பதுதான் இந்த விளையாட்டை வடிவமைத்தவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், அப்படி நடக்குமெனில் மூன்று பேர் செஸ்ஸில் எந்த சுவாரஸ்யமும் இருந்திருக்காது.

அதற்காக சேர்க்கப்பட்டதுதான் இந்த விதி. வெள்ளை, கருப்பு, நீலம் என மூன்று நிறங்களை வைத்துக்கொள்வோம். இப்போது, வெள்ளைக்காய் நகர வேண்டும். அவரால், நீல நிறக் குதிரையை வெட்ட முடியும். ஆனால், முந்தைய நகர்த்தலில் நீல நிற டீம் வெள்ளைக்காயை வெட்டியிருந்தால் மட்டுமே, இப்போது வெள்ளை டீமால் நீலக் குதிரையை வெட்ட முடியும். அல்லது, கறுப்புக்காயால் முந்தைய நகர்த்தலில் நீல நிறம் வெட்டுப்பட்டிருக்கக் கூடாது. இரண்டு பேர் சேர்ந்து ஒருத்தரை கார்னர் செய்யக்கூடாது என்பதற்காகவே இந்த விதி 2000ம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.

செஸ் விளையாட்டில் ஒரு ஸ்பெஷலான விஷயம் ஸ்டேல்மேட். எந்தக் காயையும் நகர்த்த முடியாமல் போனால் ஆட்டம் டிராவில் முடியும். மூன்று பேர் செஸ்ஸில் ஒருவர் ஸ்டேல்மேட் ஆனால் ஆட்டம் முடியாது. மற்ற இருவரும் விளையாடுவார்கள். அவர்களின் நகர்த்தலால், ஸ்டேல்மேட் ஆனவருக்கு நகர்த்தும் வாய்ப்பு கிடைக்கலாம்.

கட்டங்களும் அதிகம். ஆபத்துகளும் அதிகம். விதிமுறைகளும் அதிகம். அதனால், இரண்டு பேர் செஸ்ஸை விட மூன்று பேர் செஸ் ரொம்பவே சிக்கலானது. ஆனால், அதுதான் சுவாரஸ்யமும் என்கிறார்கள் இதன் ரசிகர்கள்.

Threechess.com இணையதளம் இந்த விளையாட்டில் பிரபலமாக இருக்கிறது. நீங்கள் செஸ் ஆர்வலர் என்றால் ஒருமுறை விளையாடிப் பாருங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்