சாகித்ய அகாடமி யூமா வாசுகி... எளிமை, கவித்துவம், நெகிழ்வான மொழிநடையின் அடையாளம்! | Yuma Vasuki... New face of Tamil Poetry

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (22/12/2017)

கடைசி தொடர்பு:15:28 (22/12/2017)

சாகித்ய அகாடமி யூமா வாசுகி... எளிமை, கவித்துவம், நெகிழ்வான மொழிநடையின் அடையாளம்!

விருது அறிவித்தவுடன் சர்ச்சைகளும் புறப்படுவது இயல்பு. ஆனால், மிகச்சிலருக்கு அளிக்கப்படும் விருதை, ஊரே கொண்டாடத் தொடங்கிவிடும். அந்தச் சிலரில் முதன்மையானவர் எழுத்தாளர் யூமா வாசுகி. கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனும் பன்முகத் திறன்கொண்டவர் யூமா வாசுகி. மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய `கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை ‘கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, 2017-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

பட்டுக்கோட்டையில் பிறந்த யூமா வாசுகி, கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர். `தோழமை இருள்', `இரவுகளின் நிழற்படம்', `அமுத பருவம்', `வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், `உயிர்த்திருத்தல்' எனும் சிறுகதைத் தொகுப்பும், `ரத்த உறவு', `மஞ்சள் வெயில்' ஆகிய நாவல்களும் எழுதியவர். கனிந்த, நெகிழ்வான தனித்த மொழிநடையால் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்தவர். 

யூமா வாசுகி

‘ரத்த உறவு' நாவலில், குடும்பச் சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நேரிடும் வன்முறை குறித்த வாழ்க்கைப் பதிவுகளைப் பகிர்ந்திருப்பார். `மஞ்சள் வெயில்' நாவலில், ஓர் உறவின் பிரிவு வலியைத் தனக்கு மட்டுமே உரியதாக்கிக்கொண்டு, மிக மென்மையாக தன்னை நேசித்தவருக்கு விடை தரும் ஒருவரின் மனப் பதிவுகளை நேர்த்தியுடன் படைத்திருப்பார்.

யூமா வாசுகியின் படைப்புகளில், குழந்தைகள் தாங்கள் வளரும் வீட்டில் புழங்குவதைப்போல இயல்பாக உலவுவார்கள். குழந்தைகள்மீது அளப்பரிய நேசம்கொண்ட இவர், குழந்தைகள் குறித்து எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘சாத்தானும் சிறுமியும்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது.

அவரது கவிதை ஒன்றில்,

`ஏதொரு குழந்தையும் 
எங்கோ கனவில் துடித்தழுதால்  
எப்படிப் போய்த் தேற்றுவேன் கர்த்தரே'  என்று எழுதியிருப்பார். 

யூமா வாசுகி, மலையாள மொழியை மிகவும் நேசித்துப் பழகினார். அந்த மொழியில் மிகச்சிறப்பான படைப்புகளை கவனத்துடனும் நேர்த்தியுடனும் தமிழில் மொழியாக்கம் செய்துவருகிறார். மலையாளச் சொல் ஒன்றுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் தன்வசம் இல்லை என்றால், அதற்காக அவர் பலரிடமும் பல்வேறு அகராதிகளிலும் தேடிக் கண்டடைவார். பெரியவர்களுக்கான படைப்புகளை மொழியாக்கம் செய்வதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சமும் குறைவில்லாமல், சிறார் இலக்கியத்துக்கும் காட்டுவார். தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என அவர் விரும்பும் நூலாக, `அந்த்வான் து செந்த் எக்சுபெரி எழுதிய `குட்டி இளவரசனை'க் குறிப்பிடுவார். எளிமையும் அழகுமாக அவர் மொழியாக்கம் செய்த படைப்புகள் ` தமிழில் நேரடியாக எழுதியதோ!' எனும் எண்ணத்தை, படிப்பவருக்குள் உருவாக்கும். 

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூலான `கசாக்கின் இதிகாசம்', 1969-ம் ஆண்டு மலையாளத்தில் எழுதப்பட்டது. கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள கசாக் எனும் ஊருக்குச் செல்லும் ஆசிரியர், அங்கு பின்பற்றப்படும் பண்பாட்டுச் சூழலை எதிர்கொள்ளும்விதமாகச் செல்லும் இந்தக் கதை, பிரபல மலையாள இதழான `மாத்ரூபூமி'யில் 28 பகுதிகள்கொண்ட தொடராகப் பிரசுரமானது. அந்தத் தொடர், வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. `கசாக்கின் இதிகாசம்' ஓ.வி.விஜயனின் முதல் நாவல் என்றாலும், தெற்காசியாவில் அதிகமாக விற்பனையான நாவல்களில் இதுவும் ஒன்றாக இடம்பிடித்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது. இந்த நாவல் யூமா வாசுகியின் மொழியாக்கத்தில் 2015-ம் ஆண்டுத் தொடக்கத்தில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நாவல் தமிழிலும் பரவலாகப் பேசப்பட்டது. 

‘கசாக்கின் இதிகாசம்’ நாவலுக்கு, 2015-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விகடன் விருது வழங்கப்பட்டது. யூமா வாசுகியின் இந்த விருதுப் பயணம் தொடரட்டும்!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close