வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (24/12/2017)

கடைசி தொடர்பு:10:15 (24/12/2017)

இந்தக் கிராமத்தில் பிணக்குழி தோண்ட 3 நாள்கள் தேவைப்படும்...காரணம்?!

"அப்டியே அந்தக் குளிரு... சில்லுன்னு தோல குத்திக் கிழிச்சு, நரம்பெல்லாம் அறுத்து எறிஞ்சு எலும்புக்குள்ளப் போய் ஒரு குத்தாட்டம் போடும் பாருங்க... ச்ச்சசப்பாபாபா... மனுசன் செத்துருணும். அப்படி ஒரு குளிர் அது..." இந்த வர்ணனை ஏதோ ஊட்டி, கொடைக்கானல் குளிருக்கானது அல்ல. அதுக்கும் மேல... காஷ்மீரா?...இல்ல அதுக்கும், அதுக்கும் மேல... 

உலகின் அதிக குளிரான கிராமம்

Photo Credits: Amos chapple

ரஷ்யாவின் வடகிழக்கில், சைபீரியாவின் ஒரு மூலையில் அமைந்திருக்கிறது "ஓய்மியகன்"(Oymyakon) எனும் இந்தக் கிராமம். இங்கிருந்து ஆர்க்டிக் துருவத்திற்கு சில நூறு கிலோமீட்டர்கள் மட்டுமே. இன்றைய தேதிக்கு, உலகிலேயே மக்கள் நிரந்தரமாக வாழும் மிகவும் குளிரான சில பகுதிகளில் இது முக்கியமான இடம். இவ்வளவு குளிரான பகுதியில் மக்கள் நிரந்தரமாக வாழ்கிறார்கள் என்றால், அவர்களின் வாழ்க்கை எப்படியானதாக இருக்கும்? அந்த இடமும், அந்த வாழ்க்கையும் எந்த மாதிரியானதாக இருக்கும்?
குளிர்காலங்களில் மிகச் சாதாரணமாக வெப்பநிலை (-) 50 டிகிரி  செல்ஷியஸாக இருக்கும். அப்படியான அந்தக் குளிர்காலங்களில் பகல் வெளிச்சம் என்பது அதிகபட்சமாக 3 மணி நேரம் வரை மட்டுமே இருக்கும். அதிகபட்ச குளிராக 1933ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 6ம் தேதி (-) 71 டிகிரி செல்ஷியஸை எட்டியுள்ளது இந்தக் கிராமம். 

உலகின் அதிக குளிரான கிராமம்

Photo Credits: Amos chapple

இந்தக் கிராமத்தில் மொத்தம் 500 பேர் வரை வாழ்கிறார்கள். 1920களில் கலைமான் (Reindeer) மேய்ப்பர்கள் இந்தப் பகுதியில் நிறுத்தி மான்களுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். இந்தக் கிராமத்தில் ஒரு வெந்நீர் ஊற்று (Thermal Spring) இருக்கிறது. நாடோடிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் அந்த மேய்ப்பர்களைக் கட்டுப்படுத்தி, அரசின் ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டும் என்றால் அவர்களை முதலில் ஒரு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று நினைத்தது அன்றைய சோவியத் அரசு. அதன் அடிப்படையில்தான் இந்தக் கிராமம் உருவாக்கப்பட்டது. 

கோடைக் காலங்களில் ஒரு நாளைக்கு 21 மணி நேரம் வரை வெளிச்சம் இருக்கும். 2010 ன் ஒரு கோடைக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்ஷியஸை எட்டியுள்ளது. 

உலகின் அதிக குளிரான கிராமம்

Photo Credits: Amos chapple

இந்தப் பகுதிகளில் விவசாயத்திற்கு வாய்ப்பில்லை என்பதால் பெரும்பாலும் கறிதான் இவர்களின் முக்கிய உணவாக இருக்கிறது. மீன், மான், குதிரை ஆகியவற்றை சாப்பிடுகிறார்கள். 

இந்தப் பகுதி மக்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள். அடிப்படை தேவைகளை விற்பனை செய்ய ஒரேயொரு கடை இந்தக் கிராமத்தில் இருக்கிறது.

உலகின் அதிக குளிரான கிராமம்

அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரே கடை... (Photo Credits: Amos chapple)

பெரும்பாலானோர் வீட்டிற்குள் கழிவறை வைப்பதில்லை. ப்ளம்பிங் வேலைகளைச் சரிவர செய்ய முடிவதில்லை, பைப்கள் எல்லாம் உறைந்து செயலற்று போய்விடுகின்றன. ஆதலால், வீட்டிற்கு வெளியில் இவர்களுக்கான கழிவறை.

உலகின் அதிக குளிரான கிராமம்

வீட்டிற்கு வெளியே இருக்கும் கழிவறை... (Photo Credits: Amos chapple)

பேனாவில் இங்க் உறைந்துவிடும். கண்ணாடிகள் பனியால் உறைந்துவிடும். செல்போன், கேமரா உட்பட எந்த கேட்ஜெட்களும் சரியாக வேலை செய்யாது. பேட்டரி பவர் வெகு விரைவிலேயே குறைந்து விடும்.

 கார்களைப் பெரும்பாலும் "சூடேற்றப்பட்ட ஷெட்களில்" (Heated Garage) பார்க் செய்கிறார்கள். சமயங்களில் வெளியில் நிறுத்த வேண்டியிருந்தால், நாள் முழுக்கக் கூட காரை ஆஃப் செய்யாமல் ஓடவிட்டபடியே வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கிராமத்திற்கு வரும் சாலையின் பெயர் "M56 கொலிமா நெடுஞ்சாலை". இதை "தி ரோடு ஆஃப் போன்ஸ்" (The Road of Bones) என்றும் சொல்கிறார்கள். சாகச விரும்பிகள் இந்தச் சாலையில் பைக்குகளையும், கார்களையும் ஓட்ட ஆசைப்படுகிறார்கள்.

"ஈஸ்ட் சைபீரியன் லைக்காஸ்" (East Siberian Laikas) மற்றும் "சைபீரியன் ஹஸ்கி" (Siberian Husky) (அடப்பாவிங்களா?! இந்தக் குளிர்ல இருக்குற நாயவாடா சென்னை வெயில்ல வாக்கிங் கூட்டிப் போறீங்க?!) ஆகிய இரண்டு வகை நாய்கள் இந்தப் பகுதிகளில் அதிகம் இருக்கின்றன. 

உலகின் அதிக குளிரான கிராமம்    உலகின் அதிக குளிரான கிராமம்   உலகின் அதிக குளிரான கிராமம்

Photo Credits: Amos chapple

காய்கறிகளைச் சாப்பிடாவிட்டாலும் கூட இந்த மக்களுக்கு நியூட்ரிஷன் குறைபாடு பெரிதாக ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் அந்த மிருகங்களின் பாலை இவர்கள் அருந்துவதுதான் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

இவர்கள் படும் பெரும்பாடு இறந்தவர்களைப் புதைப்பதற்குத்தான். ஒருவர் இறந்துவிட்டால், அவரைப் புதைக்க, குழி தோண்டுவதற்கு குறைந்தது மூன்று நாள்கள் தேவைப்படும். பனியால் இறுகியிருக்கும் அந்த நிலத்தில் கரி போட்டு நெருப்பு மூட்டி, நெகிழச் செய்து கொஞ்சம், கொஞ்சமாகக் குழியைத் தோண்டுகிறார்கள். 

உலகின் அதிக குளிரான கிராமம் - 3

Photo Credits: Amos chapple

இந்தக் கிராமத்தின் புகைப்படங்கள் இதுவரை பெரியளவில் வெளிவந்தது கிடையாது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் பற்றிக் கேள்விப்பட்ட நியூசிலாந்து புகைப்படக்காரர் அமோஸ் சாப்பல் (Amos Chapple) என்பவர் இந்த மக்களின் வாழ்வை போட்டோவாக்கியிருக்கிறார். அது அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. பனிக்காலத்தில் வெளியில் வரும்போது தன் ஆடைக்குள், தன் உடலை ஒட்டி கேமராவை அணைத்து வைத்திருப்பார். அது கேமராவிற்குக் கொஞ்சம் வெதுவெதுப்பைக் கொடுக்கும். 
கேமராவை க்ளிக் செய்யும்போது, மூச்சை இழுத்து பிடித்தபடியே இருப்பார். மூச்சை விட்டுவிட்டால் அந்தப் புகை லென்ஸில் படர்ந்துவிடும். 

அந்தக் கிராமத்தின் Top Angle போட்டோவை எடுக்க, ஒரு உயரமான கம்பத்தில் மீது ஏறியிருக்கிறார். கைகளின் க்ளவுஸைக் கழற்றிவிட்டு கேமரா பட்டனை அழுத்தியிருக்கிறார். அந்த சில நொடிகளிலேயே , அவரின் விரல் விறைத்து, உறைந்துப் போய்விட்டது. கிட்டத்தட்ட விரலே உடைந்து விழுந்துவிடும் நிலைக்குச் சென்றுவிட்டது. இப்படியாக, பெரும்பாடு பட்டுதான் இந்தப் புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்