ஃபேப்ரிக் பெயின்ட்டிங் பழகினால், ஒரே புடவையில் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்! #FabricPainting | Now, learn to do fabric painting and earn upto 10k!

வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (24/12/2017)

கடைசி தொடர்பு:17:01 (24/12/2017)

ஃபேப்ரிக் பெயின்ட்டிங் பழகினால், ஒரே புடவையில் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்! #FabricPainting

ஃபேப்ரிக் பெயின்ட்டிங்

''என்னதான் ஃபேஷனில் அப்டேட்டாக இருந்தாலும், பெண்களுக்குப் புடவை வாங்குவதில் உள்ள ஆர்வம் என்றைக்குமே குறைவதில்லை. கடை கடையாக ஏறி இறங்கி புடவை எடுப்பது, ஒவ்வொரு இடத்துக்குத் தகுந்த மாதிரி உடுத்திச் செல்வது எனப் புடவைக்கான வரவேற்பும் பெண்களின் மெனக்கெடலும் அலாதியானது. எனவே, புடவைகளுக்கான ஃபேப்ரிக் பெயின்ட்டிங் கற்றுக்கொண்டால், அழகான பிஸினஸாக லாபம் சம்பாதிக்கலாம்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த  துளசி. இவர் 15 ஆண்டுகளாக அஜந்தா ஆர்ட்ஸ் என்னும் சிறிய நிறுவனம் மூலம் ஃபேப்ரிக் பெயின்டிங் கற்றுத்தந்து வருபவர். 

''பட்டு, காட்டன் தொடங்கி பனியன் கிளாத் வரை எல்லா வகையான துணிகளிலும் ஃபேப்ரிக் பெயின்ட்டிங் செய்ய முடியும். ஒரு புடவைக்கு பெயின்ட் செய்ய குறைந்தது இரண்டு நாள்கள் தேவைப்படும். சுடிதார், ஜீன்ஸ் டாப்ஸ், மேசை விரிப்புகள் வரை இந்த பெயின்டிங்கால் அசத்தலாம். ஆரம்பத்தில், என் கிரியேட்டிவிட்டியால் சாரீஸ் டிசைன் பண்ணிட்டிருந்தேன். பலரும் குறிப்பிட்ட. டிசைனைக் கொடுத்து, அதுபோல பெயின்ட் பண்ணித்தர கேட்டார்கள். பிறகு, மணமகளுக்கான ரிசப்ஷன் புடவையும் கொடுக்க ஆரம்பிச்சேன். அதில் என் தனித்துவத்தைப் பார்த்து, நிறைய ஆர்டர் வந்துச்சு. வெளியூரிலும் என் பிஸினஸ் விரிவடைந்தது. புடவை ஒன்றுக்கு 1000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை கட்டணம் வாங்கலாம். நல்லா டிராயிங் வரையத் தெரிஞ்சவங்கதான் இதைச் செய்யமுடியுமோனு தயக்கம் வேண்டாம். இதுவரை டிராயிங் தெரியாதவங்களும் ஆர்வம் இருந்தால், ஃபேப்ரிக் பெயிட்டிங்கை ஒரு மாசத்தில் கத்துக்கலாம். இதில், தொழிலுக்கான முதலீட்டைவிடச் செலவிடும் நேரமும் நுணுக்கமும்தான் முக்கியம்'' எனப் புன்னகைக்கும் துளசி, 3டி மியூரல் பெயின்டிங் என்பது பற்றியும் சொல்கிறார். 

thulasi

''ஃபேப்ரிக் பெயின்ட்டிங் செய்யறவங்க, மியூரல் பெயின்டிங்கையும் ஈஸியா கத்துக்கலாம். மியூரல் பெயின்டிங்கில் இடம்பெறுபவை, நளினமான பெண் ஓவியங்களாக இருக்கும். ஆரம்பத்தில் கோயில் சுவர்களிலும், மகாராஜாக்களின் அரண்மனைகளிலும் இயற்கைச் சாயங்களால் இந்த ஓவியம் வரையப்பட்டது. சுவர்களில் வரையப்பட்ட இந்த பெயின்டிங்கை இப்போ ஆர்டிபிசியல் அக்ரிலிக் கலர்ஸ் மூலம் கான்வாஸ் துணிகளிலும் வரையலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில் இது. ஓவியத்தின் அளவு மற்றும் வேலைப்பாடு பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கலாம். சிறிய தாளில் ஓவியம் தீட்டிப் பயிற்சி பெற்று இதில் ஈடுபடலாம். புது வீடு கட்டுபவர்கள், அடிக்கடி வீட்டின் சுவர்களை அலங்காரம் செய்யறவங்க என மியூரல் பெயின்டிங்கை ஆர்டர் கொடுக்கிறாங்க. அலுவலகங்கள், பெரிய பெரிய ஷோ ரூம்களிலும் அலங்கார ஓவியங்களா என் பெயின்ட்டிங்ஸ் மிளிருது. இப்போதெல்லாம் கல்யாண போட்டோஸையும் மியூரல் ஓவியமாக செஞ்சு, வீட்டுச் சுவரில் அலங்கரிக்கறாங்க'' எனக் கண் சிமிட்டுகிறார் துளசி.

பெண்களின் முன்னேற்றத்துக்கான பாதைகளை நாம் வெளியில் மட்டுமே தேட வேண்டும் என்பது இல்லை. நாம் புழங்குற பொருள்களில் ஏதேனும் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முயன்றால் எளிதில் உயர்ந்து விட முடியும். துளசியும் புடவையில் தன் கற்பனையோடு உருவாக்கும் ஃபேப்ரிக் பெயின்ட்டிங் டிஸைன்கள் பார்ப்பவரைக் கவருவதோடு, விற்பனையையும் அதிகரிக்கிறது. வழக்கமான முறையிலிருந்து சின்னஞ்சிறிய மாற்றங்கள் கூட பெரிய வளர்ச்சியைத் தந்துவிடக் கூடும். அதற்கு விடா முயற்சி மட்டுமே முதல் மூலதனம்.


டிரெண்டிங் @ விகடன்