கொரியரில் கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள்! #AnimalTrafficking - அத்தியாயம் 4 | Star tortoise trafficking in India

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (23/12/2017)

கடைசி தொடர்பு:15:33 (23/12/2017)

கொரியரில் கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள்! #AnimalTrafficking - அத்தியாயம் 4

தினம் தினம் செய்திகளில் பார்த்தும் படித்தும் சாதாரணமாக கடந்து போகிற “நட்சத்திர ஆமை கடத்தல்” பற்றிய செய்திகள் நமக்குப் பத்தோடு பதினொன்று அவ்வளவே. அதற்கு பின்னால் இருக்கிற அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன்கள் பற்றிய கதைகள் எல்லாம் இதுவரை யாரும் சொல்லாதது... இந்த வார அத்தியாயம் “ஆப்பரேஷன் ஆமை” 

டிசம்பர் 11, 2017 - சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து பாங்காங்கிற்கு புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் பயணிகள் ஏறுவதற்குத் தயாராக இருந்தனர். ஷாஃபுர் அலி, முகமது தமீம் அன்சாரி ஆகிய இருவரும் பாங்காக் புறப்படவிருந்த விமானத்தில் ஏறச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களது உடைமைகளைச் சோதனை செய்தனர். பாங்காக்கில் இருக்கிற உறவினர்களுக்கு சாக்லேட் கொண்டு செல்வதாக இருவரும் கூறினர். சாக்லேட் பையை ஸ்கேன் செய்ததில் அதில் உயிருடன் நட்சத்திர ஆமைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். உயிருடனிருந்த 210 நட்சத்திர ஆமைகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் எனக் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளின் சந்தை மதிப்பு ரூபாய் 10 லட்சம் என்று கூறப்படுகிறது. மீட்கப்பட்ட நட்சத்திர ஆமைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆமை

2016-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஹாங்காங்கிற்கு சுற்றுலாப் பயணியாகச் சென்று திரும்பினார். அவரிடம் விசாரித்த போது, சுங்கத் தீர்வை செலுத்துவதற்கான எந்தப் பொருளும் தன்னிடம் இல்லை எனக் கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். ஆனால், அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சதீஷ்குமாரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மற்றொரு பையைத் திறந்து சோதனை செய்தனர் அதில், சிவப்புக் காது அலங்காரக் கடல் ஆமைகள் ஏராளமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் மொத்தம் 3,019 ஆமைகள் இருந்தன. இதன் மதிப்பு 6 இலட்சத்து 3 ஆயிரத்து 800 ரூபாய். அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, அவர் பலமுறை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பாங்காக் உள்படப் பல நாடுகளுக்குச் சுற்றுலாப் பயணியாகச் சென்று வந்துள்ளதாகத் தெரியவந்தது. இதில் பாங்காக் விலங்குகள் கடத்தலின் மையப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நள்ளிரவு 12.30 மணிக்குச் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஹபீஸ் என்பவர், சுற்றுலாப் பயணியாக மலேசியாவுக்குச் சென்று திரும்பினார். அவரை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதனால், அவர் வைத்திருந்த 2 பைகளைச் சோதனையிட்டனர். அதற்குள் சிவப்பு காது ஆமை 400  உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது மிகவும் சிறிய அளவில் இருக்கும்; அலங்கார மீன் தொட்டிகளில் போட்டு வைத்திருப்பார்கள். பெரிய நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களில் வளர்க்கப்படும். இந்த ஆமை இந்தியாவில் ₹1200க்கு விற்பனை செய்யப்படும்.

இந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கக் கூடிய நட்சத்திர ஆமைகள் வறண்ட நிலங்களிலும் புதர்க்காடுகளிலும் வசிக்கக் கூடிய தாவர உண்ணிகள். சாதுவான இவ்வகை ஆமைகளை எதற்குக் கடத்துகிறார்கள்? உணவு, மருந்து தயாரிப்புக்காகக் கடத்தப்படும் இந்த ஆமைகள், வீட்டில் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் இவை நல்ல விலை போவதால், இந்தியாவில் இவற்றின் கடத்தல் வணிகம் அதிகரித்துள்ளது. சென்னையின் ஆவடிப் பகுதியில் கடத்தலுக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 2,500 நட்சத்திர ஆமைகள் சமீபத்தில் ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டன. விசாரணையில் அவை மருத்துவ தேவைக்காக சீனாவிற்குக் கடத்தவிருந்தது தெரியவந்தது. ஆண்மை விருத்தி, அதிர்ஷ்டம் தொடர்பான நம்பிக்கைகளால் நட்சத்திர ஆமைகள் கடத்தல் சந்தையில் தவிர்க்க முடியாத உயிரினமாக இருந்து வருகிறது.

கடத்தல்

சமீப காலமாக, உலகின் சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும், அதிகரித்து வரும் தீய பழக்கவழக்கங்களாலும் மனிதர்களின் இனவிருத்தி மற்றும் ஆண்மைத் தன்மை குறைந்துகொண்டே வருகிறது. அயல்நாடுகளில் இதை ஒருபெரிய குறையாகவே எடுத்துக்கொண்டு அதற்குண்டான தீர்வை பல ஆண்டுகளாகத் தேடி வருகின்றனர். மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலம் மீண்டும் இழந்த திறனை பெற முடியும் என நம்பி பல்வேறு மருந்து மாத்திரைகளை முயற்சி செய்தனர். ஆனால் பலனில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட கடத்தல்காரர்கள் விலங்குகளின் உடலில் அந்தச் சக்தி இருக்கிறது, இந்தச் சக்தி இருக்கிறது எனக் கிளப்பி விட ஆரம்பித்தார்கள்.   மலேசியா, சிங்கப்பூர் சீனா, தாய்லாந்து  போன்ற வெளிநாடுகளில் ஒரு கூட்டம் நட்சத்திர ஆமைகளின் ஓட்டிலிருந்து ஆண்மைக்குறைவைப் போக்கும் மருந்தைத் தயாரிக்கிறது.

இந்திய நட்சத்திர ஆமைகளின் ஓடுகளுக்கு மருத்துவக் குணம் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். சீனர்கள்தாம் அதன் ஓட்டினை முதன்முதலாகப் பஸ்பம் ஆக்கி உணவில் கலந்து பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள நட்சத்திர ஆமைகள்தாம் இன்றைய அளவில் உலகிலேயே பிரசித்தி பெற்றவை. அதன்பலனாக இன்றைய அளவில் நட்சத்திர ஆமையின் வர்த்தகத்தை உச்சத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் கடத்தல்காரர்கள்.

கடந்த 1990 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில், 2,074 ஆமை கடத்தல்கள் பிடிபட்டுள்ளன என்றும்,  இந்தக் கடத்தல் எண்ணிக்கை 2000 முதல் 2013 காலகட்டத்தில் 20,500 ஆக அதிகரித்துள்ளது என்றும், ஆமை வகைகளில் ஆண்டுக்கு 10,000 முதல் 15,000  ஆமைகள்  இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

நட்சத்திர ஆமைகள் எங்கிருந்து எப்படிக் கடத்தப்படுகின்றன என்கிற ஆய்வில் கிடைத்த தகவல்கள் எல்லாம் மாஸ்டர் ஆப் கிட்டினாப்பிங் தகவல்கள். ஆமைகள் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள், காடுகளில் இருக்கிற மக்களிடம் ஆமைகள் பிடித்துக் கொடுக்க சொல்லி விடுகிறார்கள். மக்களும் குறிப்பிட்ட மாதங்களில்  கிடைக்கிற ஆமைகளை வீடுகளில் குளுமையான இடத்தில் சேகரித்து வைக்கிறார்கள். ஆரோக்கியமான ஒரு ஆமை உணவில்லாமல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்கள் கழித்து காடுகளில் மக்களைச் சந்திக்கிற கடத்தல்காரர்கள் அந்த மக்களிடம் 50 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிவருகிறார்கள். 

நட்சத்திர

கடத்தல்காரர்களிடம் 2000 முதல் 3000 ஆமைகள் சேர்ந்ததும் அவற்றைக் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து தொலைதூர இடங்களுக்குக் கடத்தி விடுகிறார்கள். குளிர்சாதன வசதியில் வைத்துக் கடத்தப்படும் ஆமைகளால் அசைய முடியாது என்பது கடத்தலுக்கு வசதியாக இருக்கிறது. இந்தியாவில் கடத்தலுக்கு கொரியர் சேவையை முக்கியப் போக்குவரத்தாகப் பயன்படுத்துகிறார்கள். ஆமைகளை வாங்குகிறவர்கள் யாரும் விற்பவரை  நேரடியாகச் சந்திப்பதில்லை. கொரியர் கடத்தலில் சம்பந்தப்பட்ட யாரும் நேரில் வர வேண்டிய அவசியமுமில்லை. இந்தக் கடத்தலில் முழுக்க முழுக்க கொரியர் தொடர்பான ஆட்களே உதவியாக இருப்பதால் கடத்தலுக்கான முக்கிய புள்ளிகள் வெளியே தெரிவதில்லை. கொரியர் மூலம் பெறப்படுகின்ற ஆமைகள் சூட்கேஸ் பெட்டிகளின் மூலம் விமான நிலையம் கொண்டுவரப்படுகிறது. விமான நிலைய அதிகாரிகளின் கவனிப்பில் சில பெட்டிகள் பத்திரமாகப் பயணித்துவிடுகின்றன. சில மட்டுமே சிக்கிக் கொள்கின்றன.

சென்னை விமான நிலையத்தில் கோலாலம்பூர், மலேசியா வழி செல்லும் விமான வழித்தடத்திலும்  திருச்சியிலிருந்து இலங்கை வழியாகச் செல்லும் வழித்தடத்திலும் கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள் அதிகம் பறிமுதல் செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் பகுதியிலிருந்து படகுகளில் இலங்கைக்கு ஆமைகள் கடத்துவதும் சமீபத்தில் அதிகரித்திருக்கிறது. தரை, வான், கடல் வழி  எனக் கடத்தப்படும் ஆமைகள் பெரும்பாலும் உயிருடன் இருப்பது ஆச்சர்யமாகவே இருக்கிறது. உலக விலங்குகள் கடத்தல் சந்தையில் விற்பனையாகிற 90 சதவிகித நட்சத்திர ஆமைகள் இந்திய ஆமைகள். ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் நட்சத்திர ஆமைகள் உலகின் முக்கியமான பல விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்திய வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி 1990-ம் ஆண்டு முதல் 1999 வரை சர்வதேச நாடுகளில் 8000 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, சீனா, பாங்காங், மலேசியா கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டவை. 

tortoise

இந்தியாவில் நட்சத்திர ஆமை பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களின் பட்டியலில் நான்காவது பட்டியலில் இருக்கிறது. அதனால் அதற்கான பாதுகாப்பும் இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது. நட்சத்திர ஆமையை வைத்திருந்தோ கடத்தலில் ஈடுபட்டுக் கண்டுபிடித்தாலோ 25,000 ரூபாய் அபராதமும் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைக்கும். ஆனால் கடத்தல்காரர்கள் அதிகாரிகளிடம் சிக்கினால் லட்சங்களில் லஞ்சம் கொடுத்தே தப்பித்து விடுகிறார்கள். விலங்குகள் தொடர்பான எல்லாக் கடத்தலுக்கும் அதிகாரிகள் துணை இருக்கிறார்கள்  என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர். மாதத்திற்கு நான்கு ஆமை கடத்தல்கள் சென்னை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்படுகின்றன. இங்கிருந்துதான் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது என்பது தெளிவாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. எப்போது இது குறைய ஆரம்பிக்கும் ? 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close