வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (25/12/2017)

கடைசி தொடர்பு:12:45 (25/12/2017)

“வலியா அது எப்படி இருக்கும்?”... பிறந்தது முதல் வலியே அறிந்திராத குடும்பம்!

அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஆறு பேருக்கு ஒரு சூப்பர் பவர். காமிக்ஸ் எழுத்தாளர்களிடம் அவர்கள் கதையைச் சொன்னால், இந்நேரம் ஓர் உடையை வடிவமைத்து அவர்களை சூப்பர்ஹீரோ குடும்பமாகச் சித்திரித்து கதைகள் எழுதியிருப்பார்கள். அவர்களின் சூப்பர் பவர் இதுதான். அவர்கள் அனைவரும் பிறந்ததிலிருந்தே வலி என்ற ஒன்றை உணர்ந்ததே இல்லை. அதாவது வலியை உணரும் திறன் இவர்களிடம் மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம். வலி ஏற்படும் அளவிற்கு உடலில் அடிபட்டாலோ, அல்லது தீக்காயம் ஏற்பட்டாலோ, “வலிக்கவே இல்லையே!” என்று திகிலூட்டுகிறது இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்சிலி குடும்பம்.

மார்சிலி குடும்பம்

78 வயது பெண்மணி, அவருக்கு நடுத்தர வயதில் இரண்டு பெண்கள், அவர்களுக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் என ஆறு பேருக்கும் இந்தப் பிரச்னை(?) இருப்பதாக அவர்களைச் சோதித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். நாம் இயல்பாக வலியை உணர்வதைப் போல அவர்களால் உணர முடியாததால் உடலில் எந்த இடத்தில் அடிபட்டிருக்கிறது, எங்கே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்பதைக் கூட இவர்களால் கண்டறிய முடிவதில்லை. ஆச்சர்யம் என்னவென்றால், இந்தப் பெண்மணிக்கும், அவரின் மகள்களுக்கும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கும் மட்டுமே இந்தப் பிரச்னை இருக்கிறது. குடும்பத்தில் வேறு யாரையும் இது பாதிக்கவில்லை.

“சில நேரங்களில் அவர்களால் வலியை உணர முடிகிறது. ஆனால், அந்த உணர்வு ஒரு சில நொடிகள் மட்டுமே நீடிக்கிறது. இந்தக் குடும்பத்தை சேர்ந்த லெட்டிஸியா என்ற பெண் ஒருமுறை பனிச்சறுக்கு விளையாடிருக்கிறார். அப்போது அவரின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை அவர் உணரவே இல்லை. இயல்பாக வீட்டிற்குச் சென்று எப்போதும் போல உறங்கிவிட்டார். அடுத்த நாள்தான் இந்த விஷயமே அவருக்குத் தெரிந்திருக்கிறது.

மற்றொரு முறை, மூத்தவரான அந்த 78 வயதான பெண்மணி ஷாப்பிங் மால் சென்று வரும்போது எஸ்கலேட்டரிலிருந்து தவறி விழுந்து கணுக்காலை உடைத்துக்கொண்டார். மருத்துவமனையில் ஸ்கேன் செய்த போது, அவரின் கணுக்காலில் ஏற்கெனவே பல முறிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், அதை அவர் உணரவே இல்லை” என்று ஆச்சர்யப்படுகிறார் இவர்களைச் சோதித்த லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஜேம்ஸ் காக்ஸ்.

இவரும் இவரின் ஆராய்ச்சிக் குழுவும் இணைந்து, இந்தக் குடும்ப உறுப்பினர்களின் மேல் நடத்திய பரிசோதனையில்தான் இதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் உடல்நலனில் எதுவும் குறையில்லை, எல்லாம் சீராகவே இயங்குவதாகக் கூறின. தசைகள் மற்றும் அதன் செயல்பாடுகள், தோல் நரம்புகள் என எல்லாம் சரியாக இருந்தன. மரபணுக்களை ஆராய்ந்த போதுதான் காரணம் புலப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் ‘ZFHX2’ என்ற மரபணுவில் மிகப்பெரிய மாற்றம் (Gene Mutation) இருப்பதாக அறியப்படுகிறது. இதுவே இந்த வலி உணராத் தன்மையை அவருக்குக் கொடுப்பதாகப் புரிந்துகொண்டனர்.

அடிபட்ட வலி

பொதுவாக, எல்லா விலங்குகளுக்குள்ளும் இருக்கும் இந்த மரபணுவின் பயன்பாட்டை அறிய ஓர் எலியைத் தேர்ந்தெடுத்தனர். இந்த ‘ZFHX2’ மரபணு நீக்கப்பட்ட எலி, வலியை உணரவேயில்லை. அதன் வாலில் அழுத்தம் கொடுத்த போதும் அமைதியாகவே நின்றது. ஆனால், அதே சமயம் வெப்பம் அதிகரிப்பதை நன்கு உணர்ந்துகொண்டது. பின்பு, இந்தக் குடும்ப உறுப்பினரின் மாற்றமடைந்த ‘ZFHX2’ மரபணுவை எலிக்குக் கொடுத்தனர். இப்போது அதனால் வலியை மட்டுமல்ல, வெப்பத்தைக் கூட தாங்க முடிந்தது. எதுவும் நடக்காதது போல் இயல்பாகவே இருந்தது. இதன் மூலம் கண்டறியப்பட்ட உண்மை, உடலின் வலியை மூளைக்கு உணர்த்தும் 16 வகை மரபணுக்களை, இந்த ‘ZFHX2’ என்ற தலைமை மரபணுதான் கட்டுப்படுத்துகிறது. இதன் தன்மையைப் பொறுத்தே அந்த 16 மரபணுக்களின் செயல்பாடுகளும் இருக்கும். இவர்களுக்கு அந்த மரபணுவில் இப்படி ஒரு மாற்றம் இருப்பதால் வலியை உணராமல் ஒரு வித்தியாசமான வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள்.

இவர்களின் அந்த மரபணுவைக் கொண்டு, தீராத வலிக்கு மருந்துகள் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது ஜேம்ஸ் காக்ஸ் அவர்களின் குழு. இது வெற்றிபெற்றால் தீரா வலியுடன் அவதிப்படுபவர்களுக்கு இது ஒப்பற்ற மருந்தாக இருக்கும்.

இந்த ஆராய்ச்சியைத் தொடங்கும் முன், மார்சிலி குடும்பத்திடம், மற்ற மனிதர்களைப் போல நீங்களும் வலியை உணரவேண்டுமா, அதை என்னால் செய்ய முடியும். இயல்பான வாழ்க்கை வாழலாம் என்ற போது, வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டனர்” என்று கூறி சிரிக்கிறார் ஜேம்ஸ் காக்ஸ். வலியே அறியாத சூப்பர்ஹீரோ குடும்பம் - ஜாலியாக இருந்துவிட்டுப் போகட்டுமே பாஸ்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்