வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (24/12/2017)

கடைசி தொடர்பு:11:30 (24/12/2017)

அன்று எம்.ஜி.ஆர். படித்த பள்ளி- இன்று ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் பெற்ற முதல் நகராட்சி பள்ளி.

சமீபத்தில் நடந்து முடிந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர் தொடக்கப்பள்ளி என பெயர் மாற்றி வைக்கபட்ட கும்பகோணத்தில் உள்ள அவர் படித்த யானையடி தொடக்கப் பள்ளிக்கு ஒரு விசிட் அடித்தோம்.

எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து இயங்கும் பள்ளி என்பதால் பழையதாக இருக்கும் என்ற எண்ணத்துடன் அங்கே சென்றால் அதற்கு நேர்மறையாக இருந்தது புது பொலிவுடன் மிளிரும் கட்டடமும் மாணவர்கள் கைவண்ணத்தில் ஒளி வீசும் வகுப்பறைகளும்.

முப்பது குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களையும் கொண்டு இயங்கும் அப்பள்ளி ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்ற முதல் நகராட்சி பள்ளி என்ற பெருமையையும் கொண்டுள்ளது. அதன் தலைமை ஆசிரியை திருமதி.விஜயகுமாரி கூறுகையில்,

"நான் இப்பள்ளியில் பத்து ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறேன். நான் இங்கு வந்த பொழுது இப்பள்ளி மிக மோசமான நிலைமையில் இருந்தது. வெறும் பத்து குழந்தைகளுடன் பள்ளியை இழுத்து மூடும் நிலைமையில் தான் இருந்தது. இங்கு நானும் என்னுடன் இருக்கும் உதவி ஆசிரியை திருமதி.செந்தாமரையும் இந்த பள்ளிக்காகக் கடுமையாக உழைத்தோம். தற்போது இங்கு 25 குழந்தைகள் பயில்கிறார்கள். இதில் பாதிக்குப் பாதி பெண் குழந்தைகள் படிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என் உதவி ஆசிரியை இல்லையெனில் நிச்சயம் இது சாத்தியம் இல்லை. இங்குள்ள அனைத்து குழந்தைகள் பற்றிய விவரமும் விரல் நுனியில் கொண்டு தன் குழந்தைகள் போல் பார்த்து கொள்வார்" என்றார்.

சமீபத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் இந்தப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதலால் அடுத்த கல்வியாண்டில் அறிவியல் மற்றும் கணக்கு பாடத்துக்குப் புதிதாக ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும்” என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

வரலாறை நினைவு கூறுகையில் அவர்," எம்.ஜி.ஆர் படித்த பொழுது இந்தப் பள்ளி வேறு இடத்தில் அமைந்திருந்தது. பின் இந்த இடத்திற்கு மாற்றப்பட்டது. அவர் மற்றும் அவர் அண்ணன் சாரங்கபாணி இருவரும் இந்தப் பள்ளியில் தான் பயின்றார்கள். அவர் நான்காம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் படித்தார் . பின் படிப்பை நிறுத்தி விட்டு நாடகத் துறையில் சேர்ந்து விட்டார். ஆதலால் அவர் படித்த ஒரே பள்ளி இந்த யானையடி தொடக்கப் பள்ளி ஆகும். பின் எண்பதுகளில் ஒரு வருடம் அவரே இப்பள்ளியை வந்து பார்வையிட்டார். சேர்க்கை பதிவேட்டில் இருந்த தமது பெயரையும் தமது அண்ணன் பெயரையும் தன் கையினால் அடிக்கோடிட்டார்"என்றார்.

அப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள் எல்லாமே ஸ்மார்ட் வகுப்பறைகள் அதன் மூலமே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப் படுகிறது . முன்பிருந்த ஷீட் கூரை கட்டடத்தை இரண்டு வருடங்கள் முன்பு தான் நவீன படுத்தியுள்ளார்கள்.அங்கிருக்கும் குழந்தைகள் அனைவரும் தாங்கள் படிக்கும் பள்ளியின் வரலாற்று சிறப்பினை அறிந்துள்ளார்கள்.

திரை உலகிலும் அரசியலிலும் அழியா சுவடினைப் பதித்த தலைவருக்கு தொடக்கக் கல்வியை போதித்து அவரது இணையில்லா அறிவிற்கு தொடக்கப் புள்ளி அமைத்து தந்த இந்தப் பள்ளி காலத்தினால் பல நவீனங்களுக்கு மருவி இருந்தாலும் எண்ணற்ற மாறுதல்களைக் கொண்டு இருந்தாலும் இன்று மட்டும் அல்லாமல் என்றும் வரலாற்றுத் தலைவரை ஈன்றெடுத்த பெருமை மிகு பள்ளியாக அனைவர் மனதிலும் குடி இருக்கும்.