வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (24/12/2017)

கடைசி தொடர்பு:16:47 (24/12/2017)

சாகித்ய அகாடமி விருதில் தமிழ் மொழி அடைந்த பெருமை

மத்திய அரசின் சார்பில் சாகித்ய அகாடமி விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. நம் படைப்பாளர்களுக்கு மட்டுமின்றி நம் மொழியிலிருந்து பிற மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்கும் விருது கிடைத்திருக்கிறது. 

சாகித்ய அகாடமி

விருதுகள் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், படைப்பாளிகளையும் படைப்புகளையும் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு சேர்ப்பதே விருதுகளின் அடிப்படை நோக்கமாக இருந்திருக்கலாம். ஏனெனில், படைப்புகள் விருது பெற்ற பிறகுதான் பல படைப்பாளிகளின் பெயர் பொது மக்களிடம் சென்றுள்ளது. இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது என்பது மத்திய அரசின் சார்பாக ஓவ்வோர் ஆண்டும் 24 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது.  இந்த அங்கீகாரம் என்பது எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் பொது உலகுக்கு அறிவித்து அவர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதாகப் பார்க்கப்படுகிறது. 


கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மொழிகளில் வெளிவந்த  ஆய்வுக் கட்டுரைகள், படைப்பிலக்கியங்களில் சிறந்த நூல்களை அந்தந்த மொழி அறிஞர்கள் கொண்ட குழு தேர்ந்தெடுத்து, விருது வழங்கிவருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தமிழில் சிறந்த படைப்பிலக்கியத்திற்கான விருது மறைந்த கவிஞர் இன்குலாப்பின் கவிதைத்தொகுப்பான ‘காந்தள் நாட்கள்’ க்கு வழங்கப்பட்டது. மலையாளத்தில் வெளிவந்த ’காசாக்கிண்டே இதிகாசம்’ என்ற நாவலை எழுத்தாளர் யூமா வாசுகி, ‘காசாக்கின் இதிகாசம்’ என மொழிபெயர்த்திருந்தார். அந்த நூல் தமிழின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதை வென்றது. இந்த இரண்டு விருதுகள் மட்டும் இல்லாமல் தமிழுக்கு மேலும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.  நேரடி படைப்புகள், மொழிபெயர்ப்பு தவிர்த்து இன்னும் என்ன விருதுகள் உள்ளன என்ற கேள்வி எழலாம்.

இதுவும் மொழிபெயர்ப்புக்கான விருதுதான். ஆனால், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கு இல்லை. தமிழிலிருந்து பிறமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளுக்குக் கிடைத்த மொழிபெயர்ப்பு விருதுகள். தோப்பில் முகமது மீரானின் நாவலான ‘சாய்வு நாற்காலி’, ‘அராம் குர்சி’ என்ற பெயரில் காஷ்மீர் மொழியில் இக்பால் நாஷ்கி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  அதேபோல ஜெயகாந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பான ‘அஹ்ரகாரத்துப் பூனை ’ என்ற நூல் ‘அஹ்ரகாரத்தில் பூச்சா’ என்ற பெயரில் மலையாளத்தில் கே.எஸ்.வெங்கிடாசலம் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படைப்புகளுக்குத்தான் கஷ்மீர் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த இந்த ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி

இவற்றில் தோப்பில் முகமது மீரானின் ‘சாய்வு நாற்காலி’  1997-ம் ஆண்டில் தமிழின் சிறந்த படைப்புக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றது. இதேபோல் 2015-ம் ஆண்டு ஒரிய மொழியில் சாகுந்தல பலியார்சிங் என்பவரால் ‘கபேரி பலி ஜியாதிய’ என மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு காவேரியைப் போல’ என்ற திருபுரசுந்தரி என்கிற லட்சுமியின் தமிழ் நாவலுக்கும், ஹிந்தியில் ‘சன்ட் வானி (ஏன்சியன்ட் செயின்ட் பொயட்ரி) வால்யும் -  3&4  என மொழிபெயர்க்கப்பட்ட ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கும் 2016-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து சாகித்ய அகாடமி விருதுகள், தமிழிலிருந்து பிறமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட  
தமிழ்ப் படைப்புகளுக்கும் கிடைத்துள்ளன. இந்த அடிப்படையில் பார்க்கும்போது இந்த வருடம்  தமிழ் சார்ந்த படைப்புகளுக்கு  நான்கு விருதுகள் கிடைத்துள்ளன எனக் கணக்கில் கொள்ளலாம்

தமிழ் மொழியைச் சேர்ந்த மூத்த படைப்பாளிகள் பலருக்கும் விருதுகள் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்டுகிறது. அதேசமயம் சில எழுத்தாளர்களுக்கு உரிய நேரத்தில் விருது வழங்கப்பட்ட வரலாறும் உண்டு.

 தமிழில் வெளிவந்த படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்போது நம் மொழி இலக்கியத்தின் சிறப்புகளை மற்ற மொழியினரும் அறிய வாய்ப்பிருக்கிறது. அந்த நூல்களுக்கு விருதுகள் கிடைக்கும்போது அது நம் மொழிக்குக் கிடைத்த மற்றுமொரு மகுடம்தான்!


டிரெண்டிங் @ விகடன்