கார்களில் க்ராஷ் கார்டு/Bull Bar பொருத்தியிருந்தால் என்ன நடவடிக்கை?

மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், கார்களில் க்ராஷ் கார்டு/Bull Bar பொருத்துவதற்குத் தடை விதித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 52-ன் படி, கார்களில் க்ராஷ் கார்டு பொருத்துவது சட்டத்தை மீறும் செயல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

bull bar

 

இந்த உத்தரவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் உடனடியாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளிவந்த அரசாணையில், சட்டதிட்டங்கள் குறித்த சுருக்கமான விளக்கம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், விபத்து நேரத்தில் பாதசாரிகள் மற்றும் வாகனத்துக்குள்ளே இருப்பவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது புரிகிறது. இதுகுறித்த விவரங்களைப் பார்ப்போம்.

கார்களில் ஏன் க்ராஷ் கார்டு?

இந்தியாவைப் பொறுத்தமட்டில் கார்களில் க்ராஷ் கார்டு பொருத்துவது என்பது, ஸ்டைலை தூக்கிப் பிடிக்கும் அம்சங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும் குறைந்த வேகத்தில் செல்லும்போது நிகழக்கூடிய விபத்தின்போது, காரின் முன்பக்கத்தில் இருக்கும் ரேடியேட்டர் - இன்ஜின் - ஹெட்லைட் - பனி விளக்குகளுக்கு ஏற்படும் சேதத்தை, இவை உள்வாங்கிக் கொள்ளும் என நம்பப்படுகிறது. தவிர, ஆஃப் ரோடு மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது தேவைப்படக்கூடிய Auxillary Lamp-களைப் பொருத்திக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கின்றன.

 

கார்

சிலர் இதில் கூடுதல் ஒலியை வெளிப்படுத்தும் ஹாரன்களை மாட்டுவதையும் பார்க்கலாம். இதன் விளைவாகவே, புதிய கார்களை விற்பனை செய்யும் டீலர்களில், புதிய காருடன் வழங்கப்படும் ஆக்ஸசரி பேக்கேஜில் (ஃப்ளோர் மேட், மட் கார்டு, சீட் கவர், மியூசிக் சிஸ்டம், பாடி கவர், டெஃப்லான் கோட்டிங், டோர் வைசர், டோர் சில், ரூஃப் ரெயில், சாமி சிலை, ஏர் ஃப்ரெஷ்னர், ஸ்டீயரிங் வீல் கவர், கியர் நாப் கவர்) க்ராஷ் கார்டு முதன்மையானதாக இருக்கிறது. 

க்ராஷ் கார்டு பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகங்கள் என்ன?

suv

புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது, காரின் முன்பகுதியில் இருக்கும் காற்றுப்பை மற்றும் Crumple Zone போன்ற பாதுகாப்பு உபகரணங்களை, விபத்து நேரத்தில் சரிவர செயல்படவிடாமல் க்ராஷ் கார்டு செய்துவிடுவது தெரியவந்துள்ளது. ஏனெனில், காரின் முன்பகுதி பாதசாரிகளின் மீது மோதினாலும், அது அவர்களுக்குக் காயத்தைத் தராத வகையில், அதற்கான வடிவமைப்பு விதிமுறைகளைப் பின்பற்றிதான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை விபத்துக்குள்ளான காரில் க்ராஷ் கார்டு பொருத்தப்பட்டிருந்தால், அது பாதசாரிகளுக்குப் பெரும்பாலும் பாதகமாகவே இருந்திருக்கிறது. தவிர காரின் பம்பரைத் தாண்டி இது இருப்பதால், நெரிசல்மிக்க டிராஃபிக்கில் செல்லும்போது முன்செல்லும் வாகனத்தின்மீது இடிக்காமல் இருப்பதும் பெரிய சவால்தான். 

மோட்டார் வாகனச் சட்டம் சொல்வது என்ன?

crash guard

 

மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 190 மற்றும் 191-ன் படி, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வாகனத்தைப் பயன்படுத்துவோருக்கு, முதல்முறை என்றால் 1,000 ரூபாயும், இரண்டாவது முறை என்றால் 2,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனுடன் க்ராஷ் கார்டுகளை விற்பனை செய்பவருக்கும், அதனை வாங்கித் தன் காரில் பொருத்துபவருக்கும், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில், க்ராஷ் கார்டுக்கு எனத் தனிவிதிமுறைகள் வகுக்கப்பட்டு, அதை பின்பற்றித் தயாரிக்கப்படும் க்ராஷ் கார்டுகள்தாம் சந்தைக்கு வரும். இந்தியாவில் க்ராஷ் கார்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதுபோன்ற சூழ்நிலை இங்கே ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவுதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!