ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி... பேரண்டத்தின் சி.சி.டிவி! | Hubble Space Telescope and its functions

வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (27/12/2017)

கடைசி தொடர்பு:11:16 (27/12/2017)

ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி... பேரண்டத்தின் சி.சி.டிவி!

“வெற்றியோ தோல்வியோ ஒருமுறை முயன்று பார்க்கலாம்” நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிக் குழுவினர் இப்படி முடிவெடுத்தது 1995-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் ஒரு நாளில்தான். பரிசோதனைக் காலம் டிசம்பர் 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பத்து நாள்கள் என்று முடிவு செய்யப்பட்டது. நம்மைச்சுற்றி இருக்கும் ஒன்றை படம் பிடிப்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் திட்டம். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. குறிப்பிட்ட அந்த ஒன்றின் அளவு, மிகப்பிரம்மாண்டமானது என்று கணிக்கப்பட்டிருந்தது, அதற்கு இதுதான் மையம் என்றெல்லாம் ஒன்றுமே கிடையாது. ஏதாவது ஒன்றை இலக்காக நிர்ணயிக்காமல் அதை எப்படிப் படமெடுப்பது என்ற கேள்விக்கு அவர்களிடம் இருந்தது, ‘முயற்சி செய்து பார்க்கலாம்’ எனும் பதில் மட்டும்தான்.

இவ்வளவு பிரயத்தனம் செய்து, அவர்கள் படமெடுக்க முயன்றது நம்மைச்சுற்றியுள்ள அண்டத்தின் ஒரு சிறுபகுதியான பால்வெளியில் இருக்கும் விண்மீன்கள் கூட்டத்தின் ஒரு பகுதியைத்தான். அதற்கே நாசா விஞ்ஞானிகள் அவ்வளவு மெனக்கெட வேண்டியிருந்தது. இந்த முயற்சியில் அவர்களுக்கு உதவப்போவது ஹபிள் என்னும் விண்வெளித் தொலைநோக்கி. பரிசோதனைக் காலம் தொடங்கியது; இதைத்தான் படமெடுக்க வேண்டும் என்ற இலக்கே இல்லாமல் வான்வெளியை ஆராயத்தொடங்கியது. அதற்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்தது ஹபிள். பத்து நாள்களில் கிட்டத்தட்ட 342 புகைப்படங்கள் எடுத்திருந்தது.  அவை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே புகைப்படமாக மாற்றப்பட்டபோது விஞ்ஞானிகள் கண்ட காட்சியை அவர்களாலேயே நம்ப முடியவில்லை.

Hubble Deep Field

Hubble Deep Field என்று அழைக்கப்படும் அந்தப் புகைப்படம் வானியல் வரலாற்றில் ஓர் அதிசயம். நமது பேரண்டத்தின் ஒரு மிகச்சிறிய பகுதியின் புகைப்படமான அதில், மொத்தம் 3000 கேலக்ஸிகள் உள்ளடங்கியிருந்தன.

 ஹபிள் - வானவியலில் ஒரு சகாப்தம்

ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி

1900-களுக்குப் பின்னர்தான் உலகத்தின் பார்வை விண்வெளியின் மீது திரும்பியது. நமது சூரியக் குடும்பம் உட்பட அண்டத்தின் தோற்றம் பற்றிய கேள்விகளுக்கு விடை கிடைக்க விண்மீன்கள், பால்வெளி மண்டலங்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக ஆராய்வது அவசியம் என்று விஞ்ஞானிகள் நினைத்தார்கள். இதுபோன்ற வானியல் ஆய்வுகளில் தொலைநோக்கிகளின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான தொலைநோக்கிகள் பூமியிலேயே நிறுவப்பட்டிருந்தன. ஆனால் அவற்றில் ஒரு பிரச்னை இருந்தது. வானிலிருந்து வரும் ஒளி பூமியின் காற்று அடுக்குகளால் சிதறடிக்கப்படுவதால் தொலைநோக்கிகளால் முழுமையான தகவல்களைப் பெற முடிவதில்லை. மேலும் தூசு, வெளிச்சம் போன்றவைகளும் தொலைநோக்கிகளுக்கு இடைஞ்சலாக இருந்தன. இது போன்ற பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு தொலைநோக்கியை விண்வெளியில் நிலைநிறுத்துவதுதான். அப்படி விண்வெளியில் நிறுவப்பட்டிருக்கும் பல தொலைநோக்கிகளில் சிறப்பானதாகக் கருதப்படுவது ஹபிள்.

1970-களின் தொடக்கத்திலேயே ஒரு சிறப்புவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை உருவாக்குவதற்கான வேலையை நாசா தொடங்கியது. அதன் பின்னர் அந்தத் திட்டத்திற்கு வானியல் ஆய்வாளரான எட்வின் ஹபிள் என்பவரின் பெயர் சூட்டப்பட்டது. 1983-ம் ஆண்டில் அதை விண்வெளிக்கு அனுப்புவது என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால் நிதிப்பற்றாக்குறை, விண்வெளி விபத்துகள் போன்றவற்றால் ஹபிள் செயல்திட்டம் தாமதமானது. நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க ஐரோப்பிய விண்வெளி முகமையுடன் கைகோர்த்தது நாசா. அதன் பின்னர் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஹபிள் உருவாக்கப்பட்டது. இறுதியாக ஏப்ரல் 24, 1990 அன்று கென்னடி ஏவுதளத்திலிருந்து ஹபிள் தொலைநோக்கியைச் சுமந்துசென்றது டிஸ்கவரி விண்ணோடம். ஹபிள் பூமியின் தாழ் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஒரு சிறிய பிழை

விண்வெளி வீரர்கள் ஹபிளை சரி செய்யும் பணியில்

சில நாள்களிலேயே ஹபிள் தொலைநோக்கி செயல்படத் தொடங்கியது. பிரபஞ்சத்தின் அழகிய புகைப்படங்கள் கிடைக்கும் என்று நினைத்த விஞ்ஞானிகளின் எதிர்பார்த்ததற்கு மாறக தெளிவில்லாத புகைப்படங்களே கிடைத்தன. அதற்கான காரணத்தை ஆராய்ந்த போது அவர்கள் செய்திருந்த தவறைக் கண்டறிந்தார்கள். அவ்வளவு கவனமாக உருவாக்கப்பட்டிருந்த ஹபிளின் முதன்மைக் கண்ணாடியில் தலைமுடியின் அளவில் ஐம்பதில் ஒரு பங்கு அளவு பிழை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே சற்று ஒளி விலகல் ஏற்பட்டு புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருந்திருக்கின்றன. விண்வெளி விஷயங்களில் ஒரு சிறிய தவறு கூட பெரிய இழப்பைத் தரும் என்பதற்கான உதாரணமாக அமைந்தது இந்தச் சம்பவம். இப்படியெல்லாம் நடக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். எனவே ஹபிள் தொலைநோக்கி விண்வெளியில் பழுதடைந்தாலும் சரி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் பிழையைச் சரி செய்வதற்காக விண்வெளி வீர்களுக்குத் தனியாகப் பயிற்சியளிக்க சிறிது காலம் தேவைப்பட்டது. அதன் பின்னர் 1993-ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற ஒரு குழுவினர் COSTAR என்ற கருவியை ஹபிள் தொலைநோக்கியில் பொருத்தினர். அதன் பின்னர் தெளிவான புகைப்படங்களைத் தந்தது ஹபிள்.

ஹபிள் பிழை சரி செய்யப்படுவதற்கு முன்னரும் சரி செய்யப்பட்ட பின்னரும்

Photo Credits: NASA

அன்று முதல் இன்று வரை

43.5 அடி நீளம் கொண்ட ஹபிளின் முதன்மைக் கண்ணாடி 7 அடி சுற்றளவைக் கொண்டது. பூமியிலிருந்து 568 கிலோ மீட்டர் உயரத்தில் 17000 மைல் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து 13.4 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதைக் கூட காணும் திறன் படைத்தது ஹபிள். செயல்படத் தொடங்கிய 1990 ஆண்டு முதல் இன்று வரை 1.3 மில்லியனுக்கு மேற்பட்ட தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது. ஹபிள் தந்த டிஜிட்டல் தகவல்களின் அளவு 140 டெராபைட்டுகளுக்கு மேல் இருக்கும். தற்பொழுது ஒரு வருடத்திற்கு 10 டெராபைட்டுகள் தகவல்களைத் தருகிறது. ஒளி மட்டுமன்றி புற ஊதாக்கதிர், அகச்சிவப்புக் கதிர் போன்றவற்றின் மூலமாகவும் தகவல்களைப் பெறும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் இது மற்ற தொலைநோக்கிகளோடு ஒப்பிடும் பொழுது சிறப்பானதாக கருதப்படுகிறது. அதுபோல, ஹபிள் காலத்திற்குத் தகுந்தவாறு மேம்படுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

1993-ம் ஆண்டிற்குப் பிறகு 1997, 1999, 2002, மற்றும் 2009-ம் ஆண்டுகளில் ஹபிளில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அப்பொழுது பழுதுகள் சரிபார்க்கப்பட்டு அதன் கருவிகள் மேம்படுத்தப்படும். கடைசியாக 2009-ம் ஆண்டில் பொருத்தப்பட்ட Wide Field Camera 3 மூலமாகச் செறிவான தகவல்களைக் கொண்ட புகைப்படங்கள் நமக்குக் கிடைத்து வருகின்றன. இந்த வருடத்தின் தொடக்கத்தில் கூட  இரண்டு பால்வெளிகள் மோதும் முக்கிய நிகழ்வை ஹபிள் படம்பிடித்திருந்தது. பல மில்லியன் ஒளியாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வுகளையே ஹபிள் தற்பொழுது பார்க்கிறது. அந்த வகையில் நமது பேரண்டத்தின் ரகசியங்களையும், அங்கே நடக்கும் விநோதங்களையும் மனிதர்கள் கண்காணிக்க உதவும் சி.சி.டிவி கேமராவாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ஹபிள்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close