வெளியிடப்பட்ட நேரம்: 08:14 (27/12/2017)

கடைசி தொடர்பு:10:15 (27/12/2017)

வித்யா பாலனுக்குப் பிடித்த டிசைனர் ஆயுஷ் கெஜ்ரிவாலிடம் என்ன விசேஷம்?!

“நான் வெறும் புடவை விற்கவில்லை. நம் நாட்டின் பாரம்பர்யத்தை, ஆடை வடிவில் புதுப்பித்துக் கொடுக்கிறேன்'' என்று பெருமிதம்ஆயுஷ் கெஜ்ரிவால்கொள்கிறார் லண்டனில் செட்டிலான இந்திய ஆடை வடிவமைப்பாளர் ஆயுஷ் கெஜ்ரிவால். 32 வயதான இவர், `டார்க் ஸ்கின்' எனும் கறுப்பு நிறப் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளை வடிவமைப்பதில் கில்லாடி. நிறம், உடலமைப்பு, மதம் இவற்றுள் ஒளிந்திருக்கும் ஃபேஷன் வேறுபாட்டை உடைத்து, பல புதுமைகளை தன் ஆடை வடிவமைப்பின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறார். தன்னுடைய படைப்புகள் பற்றியும் சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றியும் கூறினார் ஆயுஷ்.

“என் அம்மா பார்வையற்றவர். அவரின் உடைகளைப் பார்த்து அனைவரும் கேலிசெய்தனர். எனக்கு அது மிகவும் கஷ்டமாக இருந்தது. அம்மாவை எவரும் கிண்டல் பண்ணக் கூடாது என, நானே என் அம்மாவின் ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கினேன். அதன் பிறகு எல்லோரும் என் அம்மாவைப் பாராட்டினார்கள். என் சொந்தக்காரர்களும் என்னுடைய வேலைப்பாடுகளை ரசித்தார்கள். இதுதான் நான் டிசைனர் ஆவதுக்கு முதல் படி. பிறகு சில புடவைகளை வடிவமைத்து இந்தியாவிலிருந்து லண்டனுக்குக் கொண்டு சென்றேன். இணையதளத்தில் அந்தப் புடவைகளை போஸ்ட் செய்தேன். நல்ல வரவேற்பு. நான் விற்ற முதல் புடவையின் விலை 300 யூரோ. அதாவது சுமார் 23,000 ரூபாய்.''

கலம்காரி

“நம் நாட்டின் பாரம்பர்யத்தை எப்படிப் புதுப்பித்து உலகறிய வைக்கிறீர்கள்?''

“ஓர் ஆடை தயாராவதற்கு, பல கதைகள் உண்டு. என்னுடைய ஆடையை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு அத்தனை கதைகளையும் சொல்லித்தான் விற்பேன். ஆடைகள் உற்பத்தி செய்யும் நெசவாளிகளையும் விட மாட்டேன். அவர்களைப் பற்றியும் அவர்களின் வேலைப்பாடுகளைப் பற்றியும் விரிவாக எடுத்துரைப்பேன். புகைப்படங்களுக்கு நான் மாடல்களைத் தேர்வுசெய்ய மாட்டேன். இணையதளத்தில் விளம்பரம் பதிவிடுவேன். நிறம், உடலமைப்பு என எந்த விதிமுறையும் இல்லை. யார் வேண்டுமானாலும் நான் டிசைன் செய்த ஆடைகளை உடுத்தி புகைப்படத்துக்கு போஸ் தரலாம். இப்படிச் செய்வதினால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக என் டிசைன் பதிந்த உடைகளை 100 சதவிகிதம் சந்தோஷத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்."

Traditional prints

“மற்ற ஆடை வடிவமைப்பாளர்களின் டிசைனுக்கும் உங்க டிசைனுக்கும் என்ன வித்தியாசம்?''

“கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த நான், சின்ன வயதிலிருந்தே பெங்கால் பாரம்பர்யத்தால் ஈர்க்கப்பட்டேன். துர்கா பூஜை போன்ற பண்டிகைக் காலங்களில் பெண்கள் அனைவரும் மற்ற நாள்களைவிட மிகவும் அழகாக இருப்பார்கள். சிவப்பு-வெள்ளை காம்பினேஷனில் புடவை, நெற்றியில் பெரிய சிவப்புப் பொட்டு, கைகளில் கலகலவென வளையல், மருதாணி என ஊரே கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும். இவை அனைத்தும் என்னுடைய டிசைன்களிலும் புகைப்படங்களிலும் பிரதிபலிக்கும். சல்வார், லெஹெங்கா, குர்த்தா என எல்லாவிதமான உடைகளிலும் நம் கலாசார டச் நிச்சயமா இருக்கும். இது மற்ற டிசைனர்களின் டிசைனைவிட ரொம்பவே வித்தியாசமா இருக்கும்."

Wedding Saree

“லண்டனில் செட்டில் ஆன நீங்கள், எப்படி இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்களை விற்பனை செய்கிறீர்கள்?''

“இந்தியாவில் இருந்தபோது கட்ச், காஞ்சிபுரம், ஆந்திரா, பனாரஸ் போன்ற இடங்களுக்குச் சென்று நெசவாளிகளைச் சந்தித்தேன். அவர்களும் என்னுடன் இணைந்து வேலைசெய்ய சம்மதித்தனர். பிறகு அனைத்து ஆர்டர்களையும் வாட்ஸ்அப் மூலமே அனுப்புவேன். முழு வேலைப்பாடுகள் முடிந்து லண்டனுக்கே திருப்பி அனுப்பிவிடுவார்கள். இப்படித்தான் டிசைனிங் புராசஸ் போய்க்கொண்டிருக்கிறது."

Vidya Balan

வெளிர் நிறம், கொள்ளை அழகு, கட்டுக்கோப்பான உடலமைப்பு போன்ற அழகின் விதிமுறைகளை உடைத்து, தனது டிசைன்களிலும் புகைப்படப் பதிவுகளிலும் பல வித்தியாசங்களையும் புதுமைகளையும் செய்துவரும் ஆயுஷ் கெஜ்ரிவாலின் டிசைன்களுக்கு, நடிகை வித்யா பாலன் மிகப்பெரிய ரசிகையாம். கெஜ்ரிவாலின் கைவண்ணத்தில் உருவான உடைகளில் வித்யாவை பல இடங்களில் காணலாம். 


டிரெண்டிங் @ விகடன்