`தாமரை மலர்ந்தே தீரும்', `தர்மயுத்தம்', `ஷட்அப் பண்ணுங்க' - 2017-ன் வைரல் வார்த்தைகள் | Viral words of 2017

வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (27/12/2017)

கடைசி தொடர்பு:16:41 (30/12/2017)

`தாமரை மலர்ந்தே தீரும்', `தர்மயுத்தம்', `ஷட்அப் பண்ணுங்க' - 2017-ன் வைரல் வார்த்தைகள்

2017 முடியப்போகிறது. 'ஹாய் எவ்ரிபடி... விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்' என புல்லட்டில் டகடகவென வந்து உலக நாயகன் விஷ் செய்ய இன்னும் சில தினங்களே இருக்கின்றன. ஆகவே, வருஷக் கடைசி பதிவுகள் கட்டாயமாகின்றன. இங்கே நாம் பார்க்கப்போவது இந்த ஆண்டில் பலரால் உச்சரிக்கப்பட்டு பயங்கரமாக ட்ரெண்டான வைரல் வார்த்தைகள். லெட்ஸ் கோ ஃபார் எ ரீவைண்ட்!

தோழர்:

இந்த ஆண்டு தொடங்கியதே சமத்துவம் பேசும் இந்த சூப்பர் வார்த்தையில்தான். ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் திடீரென வெடித்த போராட்டம் பட்டிதொட்டியெங்கும் பரவ, மாநிலமெங்கும் கருப்புசட்டை மயமானது. முதலில் துணைநின்ற காவல்துறையின் லத்திகள் பின்னர் உடனிருந்தவர்களின் உடல்களையே பதம்பார்த்தன. உச்சகட்டமாக ஒரு போலீஸ் அதிகாரி, 'இனிமே யாராவது தோழர்னு உங்க பையனை கூப்பிட்டா அவங்ககூட சேரவிடாதீங்க' என பெற்றோர்களுக்கு வான்டடாக வந்து அட்வைஸ் செய்தார். அவ்வளவுதான். கருப்பு, சிவப்பு, கருஞ்சிவப்பு என அத்தனை கொடிகளும் 'தோழர்' புகழ் பாடின. கெத்து வார்த்தை பாஸ் அது!

அம்மாவின் ஆன்மா:

நியாயமாக பார்த்தால் பிப்ரவரியிலேயே தமிழகத்தில் குருபெயர்ச்சி சனிபெயர்ச்சி எல்லாம் தொடங்கிவிட்டன. அம்மாவின் சமாதியில் அரை மணிநேரமாக மூக்கடைப்பு நீங்க பயிற்சி செய்த ஓ.பி.எஸ் வெளியே வந்து 'அம்மா ஆன்மாவின் ஆணைப்படி கட்சியைத் துண்டா உடைக்கிறேன்' என்றார். பற்றிக்கொண்டது தமிழகம். அதன்பின் ஆளாளுக்கு அம்மாவின் ஆன்மா வார்த்தையை தத்தெடுத்துக்கொண்டார்கள். பாவம் ஜெ. கடைசியாக ஓய்வெடுக்கும் இடத்தை தத்தெடுக்கத்தான் யாருமில்லை.

'பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும்':

வைரல்

அந்தப்பக்கம் ஓ.பி.எஸ் மூச்சுப்பயிற்சி செய்ய, இந்தப்பக்கம் சின்னம்மா கண்களால் குச்சிபுடி ஆடிக்காட்டினார். நடுராத்திரி போயஸ் கார்டன் கேட் பக்கமாக நின்றுகொண்டு அவர் சொன்ன 'ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர்' வார்த்தை நேரங்காலம் எல்லாம் பார்க்காமல் ட்ரெண்டானது. வார்த்தையைவிட அவர் கொடுத்த ரியாக்‌ஷன்கள் 'வாவ்டா' ரகம். பாவம் பக்கவாட்டில் உட்கார்ந்திருந்த எடப்பாடி டீமும் அதைத்தான் செய்துகொண்டிருந்தது என்பதை கவனிக்க மறந்துவிட்டார் சின்னம்மா!

'அதை நீங்கள்தான் கூறவேண்டும்':

வைரல்

'அரசியலில் தேக்கநிலை ஏற்படும்போதெல்லாம் ஒரு புண்ணியவான் படாரென என்ட்ரி கொடுத்து கிச்சுகிச்சு மூட்டுவார்' என்பார் பிரபல அரசியல் விமர்சகர் 'கான்ட்ராக்டர் நேசமணி'. இந்த ஆண்டின் பெருமைமிகு அறிமுகம் தீபா. என்ன கேள்வி கேட்டாலும், எவ்வளவு தெளிவாக கேட்டாலும், 'அதை நீங்கள்தான் கூறவேண்டும்' என சிம்பிளாக சொல்லிவிட்டு நடையைக் கட்டுவார். 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' காமெடியின் ரியல் வெர்ஷன் இது. அதன்பின் தீபா உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் வைரல்கள் அல்ல, வரலாறுகள்!

ஷட் அப் பண்ணுங்க:

வைரல்

இந்தியாவின் முப்படைகளைத் தாண்டி நான்காவது படையாக உருவானது 'ஓவியா ஆர்மி'. 'பிக்பாஸ் பி.ஜே.பி'யால் உருவான பஞ்சாயத்துகளை எல்லாம் தமிழர்கள் மறக்க உதவியது இந்த துறுதுறு தேவதையின் சேட்டைகள்தான். ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் இவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் மறுநாள் சார்ட்பஸ்டர் ஹிட்டாகின. 'ஷட் அப் பண்ணுங்க', 'ஸ்பிரே அடிச்சு போட்டுருவேன்', 'எங்க அடி பார்ப்போம்' என மிரட்டல் டயலாக்குகளால் தெறிக்கவிட்டார்.     

'தாமரை மலர்ந்தே தீரும்':

தேசியக்கட்சியின் மாநிலத் தலைவரான தமிழிசையின் தங்க வார்த்தைகள் இவை. ஒரு வார்த்தையை திரும்பத் திரும்ப பயன்படுத்தினால் ட்ரெண்டாகும் எனத் தெரிந்து ஆண்டு முழுக்க இதை சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனா, மேடம் ஒரே ஒரு ஆள் மட்டும் திரும்ப திரும்ப சொன்னா எல்லாம் ட்ரெண்டாகாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க! ஒரு ஹியூமருக்காக இந்த லிஸ்ட்ல சேர்த்திருக்கோம். தாமரை ட்ரெண்டே ஆகலன்னா அப்புறம் எங்கே ஓட்டு வாங்க? ப்ச்!

'போர் வரட்டும்':

நான் குழந்தையாக இருந்தபோது திடீரென ஒருநாள் சுற்றுவட்டாரமே பரபரப்பானது. 'ரஜினி அரசியலுக்கு வரப்போறாராம்' என்ற தகவல் பரவியதே அதற்குக் காரணம். இப்போது என் செட்டில் உள்ளவர்களுக்கே குழந்தைகள் பிறந்துவிட்டன. இன்னும் அவர் வருவதற்கான அறிகுறியே காணோம். ஆனால் ஆண்டுக்கொரு முறை ஏதாவது சொல்லிவிட்டு எஸ்கேப்பாகிவிடுகிறார். இந்தத் தடவை அவர் சொன்னது, 'போர் வரட்டும் பாத்துக்கலாம்' என்பது! 'நீங்க அரசியலுக்கு வர்றீங்க'னு பேச்சு வந்ததுக்குப் அப்புறம் ரெண்டு உலகப்போரே நடந்துடுச்சு தலைவா!

'வர்றேம்மா - மசாலா அரைச்சு வைம்மா!':

இந்த ஆண்டு கோலிவுட்டில் அதிகம் ட்ரெண்டான வார்த்தைகள் இவை இரண்டும்தான். நெட்டிசன்களால் அதிகம் வறுத்தெடுக்கப்பட்ட இரண்டு படங்களின் வசனங்கள் இவை. 'தலயை விட்டுடுங்க சிவா' என அஜித் ரசிகர்களே கதறுமளவிற்கு விவேகத்தில் 'வச்சு' செஞ்சிருந்தார் சிவா. மறுபக்கம் முத்துராமலிங்கம் படத்தில், பாவம் மீசைகூட ஒழுங்காக முளைக்காத கெளதம் கார்த்திக்கை வைத்து பன்ச் டயலாக்குகள் எல்லாம் பேச வைத்திருந்தார்கள். ஒருபடம் முழுக்க மீம் டெம்ப்ளேட்டா எடுக்கிற மனசு இருக்கே! அதான் சார் கடவுள்!

ஆன்டி இந்தியன்:

எவ்வளவோ சட்டங்கள் போடும் மோடி ஹெச்.ராஜா வாயைப் பூட்டும் சட்டம் ஏதாவது போட்டால் நமக்கு நல்லது. நம்மைவிட மோடிக்கும் பி.ஜே.பிக்கும் நல்லது. ஓட்டுமிஷினில் மாற்றி அமுக்கியதால் தவறிப்போய் விழும் ஒன்றிரண்டு ஓட்டுகளையும் பா.ஜ.கவுக்கு கிடைக்கவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ராஜா. போன ஆண்டே அவரின் 'ஆன்டி இந்தியன்' பன்ச் பேமஸானாலும் இந்த ஆண்டுதான் அதிகம் பயன்படுத்தினார். போக, 'ஜோசப்' என்ற பெயரும் அவர் புண்ணியத்தில் வைரலானது. நின் கொடை தமிழ்மொழிக்கு தேவை!

Peace Bro:

'மெர்சல்' டீசர் வெளியான நேரத்தில் விஜய் ரசிகர்கள் மட்டுமே கொண்டாடிய இந்த டயலாக், படம் வெளியானபின் அனைவரும் கொண்டாடும் வசனமானது. உபயம்: ஹெச்.ராஜா! காரணம் - நாலாவது தெருவில் யாரோ ஒரு தங்கச்சி அவள் அண்ணனை அழைத்தாலும் தன்னை அழைத்ததாக வான்டடாக ஆஜராகும் ராஜாவின் குணம். ஜி.எஸ்டி வசனத்தால் ஜெலுசில் குடித்துக்கொண்டிருந்தவர்களை எல்லாம் 'Peace Bro' சொல்லி இன்னும் வெறிப்பேற்றினார்கள் நெட்டிசன்கள். படம் ஐம்பதுநாட்கள் கடந்தும் மெர்சல் காட்டியதற்கு பி.ஆர்.ஓ ராஜாவும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது. 

'அமைதியோ அமைதி':

வைரல்

மீசை வைத்த குழந்தைகள் நம்மிடையே அதிகம் இருக்கிறார்கள் என்பதை உணர்த்திய ட்ரெண்ட் இது. எந்தக் காலத்திலேயோ டிவியில் வெளியான ஷின்ஷானை 'இந்திரஜித்' கெளதம் கார்த்திக் போல தோண்டியெடுத்து ட்ரெண்டாக்கிவிட்டார்கள் நெட்டிசன்கள். (இரண்டு நிமிட கார்ட்டூன் மொத்த இந்திரஜித் படத்தையும்விட நன்றாக இருக்கும் என்பது கூடுதல் செய்தி!) அதில் அந்த சிறுவன் பேசும் 'அமைதி அமைதி அமைதியோ அமைதி' வசனம் வயது பாரபட்சமே இல்லாமல் ஷேரிங் ஆனது.

தர்மயுத்தம்:

1979-ல் 'தர்மயுத்தம்' படத்தை எடுத்தபோது அதற்கான ப்ரொமோஷன் 38 ஆண்டுகள் கழித்து நடக்கும் என ரஜினியோ, ஆர்.சி சக்தியோ நினைத்தே பார்த்திருக்கமாட்டார்கள். பிப்ரவரியில் தொடங்கி லேட்டஸ்ட்டாக ரிலீஸான ஜெயலலிதா வீடியோ வரை 'தர்மயுத்தம்' ட்ரெண்டாகிக் கொண்டே இருக்கிறது. இதுநாள் வரை நியாய தர்மங்களுக்கான அளவுகோலாக இருந்த அந்த வார்த்தை இன்று மலிவான அரசியல் செய்ய பயன்படுகிறது. இனிமே கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும்போதெல்லாம்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்