வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (28/12/2017)

கடைசி தொடர்பு:21:29 (28/12/2017)

சேவல் முதல் ஜல்லிக்கட்டுக் காளை வரை... நம் மண்ணின் பெருமைகளை அடையாளப்படுத்தும் கால்நடை கண்காட்சி!

பொங்கல் என்றாலே மாடுகள்தாம் நினைவுக்கு வரும். அதுவும் கடந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு நாட்டு மாடுகள் குறித்த விழிப்பு உணர்வு பெருகியிருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற ஓராண்டை முன்னிட்டு, செம்புலம் அமைப்பின் சார்பில் வருகிற ஜனவரி 6 மற்று 7-ம் தேதிகளில் சென்னையடுத்த ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பெருங்குடி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 'கால்நடை கண்காட்சி' நடைபெற உள்ளது. இதுசம்பந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பு சேப்பாக்கத்தில் உள்ள பிரஸ் கிளப்பில் இன்று (28-12-17) நடைபெற்றது. 

நாட்டு மாடுகள்

இதில் பேசிய கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் மார்த்தாண்டன், "தமிழ்நாட்டில் ஐவகை நிலங்களுக்கேற்ற நாட்டு மாட்டினங்கள் இருந்தன. மருத நிலமாக அறியப்படும் காவிரி டெல்டா பகுதிக்கு உம்பளச்சேரி மாடுகள் சிறப்புப் பெற்றது. குறிஞ்சி, முல்லை நிலங்கள் கலந்து வரும் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு தமிழ்நாட்டில் செம்மண் மாதிரியான மானாவாரி நிலங்கள் அதிகம். இந்தப் பகுதியில் உழவு ஓட்டுவதற்கு நல்ல உயரமான தினுசான மாடுகளாக காங்கேயம் உள்ளது. அதேபோன்று மதுரை, சிவங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் புலிக்குளம் மாடுகள் சிறப்பு வாய்ந்தது. மலையில் வாழ்வதற்கு ஏற்றவையாக பர்கூர், தேனி மலை மாடுகள் சிறப்பு பெற்றது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளில் தொண்டை மண்டல மாடுகள் சிறப்புப் பெற்றது. நம் மாட்டினங்கள் உழைப்புக்குப் பெயர் பெற்றது. அதனால்தான் அதன் சிறப்புகளை இன்றும் பேசுகிறோம்.

தமிழ்நாட்டில் நாட்டுமாடுகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகளை உள்ளடக்கிய 30 நாட்டினங்கள் இருக்கின்றன. ஒரு சின்ன புவியியல் பரப்பில் இவ்வளவு இனங்கள் வேறெங்கும் இல்லை. தற்போதுள்ள தலைமுறைக்கு இந்த விஷயங்கள் போய் சேர வேண்டும். கடந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் நம் பாரம்பர்யம், மரபு குறித்தான அடையாளத்தைச் சொல்லியது. அதை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்கில், இந்தக் கால்நடை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ஐ.டி காரிடர் என்று சொல்லப்படும் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் இதை நடத்துகிறோம். இங்கு தமிழ்நாட்டின் 30 இனங்களும் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. அதேபோன்று குதிரை, நாய்கள், சேவல்கள் உள்ளிட்ட இனங்களும் இடம் பெற உள்ளன. இந்த இனங்களின் சிறப்புகளும் பேசப்பட உள்ளன. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பல பயனுள்ள தகவல்களை, இந்தக் கண்காட்சி வழங்கும் வகையில் சிறப்புடன் ஏற்பாடு செய்திருக்கிறோம்" என்றார்.

கால்நடை கண்காட்சி

தென்னிந்திய அங்கக உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் ஜிதேந்திர பிரசாத் பேசும்போது, "நமக்கான உணவு எங்கிருந்து வருகிறது என்பதை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அது ஆரோக்கியமானதா என்பதையும் அறிந்து வைத்திருப்பது முக்கியம். இப்போது சிறுதானியங்கள், ஆர்கானிக் பொருள்கள் என்று பேசுகிறோம். இதை ஏன் சாப்பிட வேண்டும். நம்முடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற மாதிரி இந்த உணவு வகைகளை எப்படி எடுத்துக்கொள்வது போன்ற விஷயங்களை இந்தக் கண்காட்சியில் பேசவிருக்கிறோம்.

செம்புலம் அமைப்பினர்

இனிமேல் வியாதிகளை மருந்து, மாத்திரைகளை வைத்து மட்டும் குணப்படுத்திவிட முடியாது. உணவுகளை வைத்துதான் இனி வியாதிகளை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதற்கு நம்முடைய பாரம்பர்ய உணவுகளை மீட்டெடுப்பது அவசியம். அதைப் பற்றிய புரிதல் ஒவ்வொருவரிடமும் இருப்பது முக்கியம். பாரம்பர்ய உணவுப் பொருள்களான கேழ்வரகு களியைச் சமைத்து சாப்பிடுவது என்பது பலருக்குத் தெரியவில்லை. இன்றும் பெரும்பான்மையான கிராமங்களில் காலை உணவாகக் களி சாப்பிடப்படுகிறது. ஆனால், நகரத்தில் அரிசி உணவுகளையே பிரதானமாக சாப்பிடுகிறார்கள். நகரங்களிலும் களி குறித்த விழிப்பு உணர்வு வந்தால், அதைச் சமைத்துச் சாப்பிடுவார்கள். அதற்காக, இந்தக் களியைச் சமைப்பது குறித்துப் போட்டிகளும் நடத்தவிருக்கிறோம். அதேபோன்று பாரம்பர்ய அரிசி வகைகளைப் பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கும் விதத்தையும் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். இதற்காக பாரம்பர்ய அரிசிகளில் பாயசம், இட்லி, தோசை சமைக்கும் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இதோடு பாரம்பர்ய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன" என்றார்.

இந்தக் கண்காட்சியில் இயற்கை விவசாயம், பாரம்பர்ய உணவுகள் குறித்து பேச மருத்துவர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்