ஐன்ஸ்டீனே விடை காணாத கணக்குக்கு தீர்வு சொன்ன மாணவரின் கதை! #MotivationStory | Inspirational Story of George Dantzig

வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (29/12/2017)

கடைசி தொடர்பு:08:34 (29/12/2017)

ஐன்ஸ்டீனே விடை காணாத கணக்குக்கு தீர்வு சொன்ன மாணவரின் கதை! #MotivationStory

தன்னம்பிக்கை கதை

ரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கும் படிப்பினைகள் ஏராளம். அறிவியல், மருத்துவம், தொழில்துறை, அரசியல்... என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், `இது சாத்தியமில்லை’ என்று பலர் நினைத்துக்கொண்டிருந்த ஒன்றை, சாத்தியமாக்கிய சம்பவம் சரித்திரத்தில் நிச்சயம் இருக்கும். `ஒன்றைச் செய்து முடிக்கும் வரை, அதைச் செய்ய முடியாது என்றுதான் தோன்றும்’ என்று சொல்லியிருக்கிறார் தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற தலைவர் நெல்சன் மண்டேலா. சில அசாதாரணச் செயல்களைச் செய்வதற்கு, மந்திரசக்தி தேவையில்லை... கொஞ்சம் முயற்சி, அதற்கான ஆத்மார்த்தமான உழைப்பு போதும். இதை உணர்த்துகிறது, அமெரிக்காவின் பிரபல கணித அறிவியலாளர் ஜார்ஜ் டேன்ட்ஜிக் (George Dantzig)-கின் வாழ்க்கைக் கதை. 

பொருளாதாரம், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆபரேஷன் ரிசர்ச் ஆகியவற்றில் ஜார்ஜ் டேன்ட்ஜிக்-கின் பங்கு மகத்தானது. அதற்காக உலக கணிதவியலாளர்களெல்லாம் அவரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஐரிஷ் எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னார்டு ஷா-வின் நினைவாக, `ஜார்ஜ் பெர்னார்டு டேன்ட்ஜிக்’ என்று பெயர்வைத்திருந்தார் அவரின் தந்தை. சிறு வயதிலிருந்தே கணக்கில் புலி டேன்ட்ஜிக். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கணிதம், புள்ளியியல், நேச்சுரல் சயின்ஸிலெல்லாம் கில்லி. கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, கணிதத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக கலிஃபோர்னியா, பெர்க்லீயில் இருக்கும் யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியாவில் சேர்ந்தார். அப்போது அவருக்கு புள்ளியியல் வகுப்பெடுக்கும் பேராசிரியராக இருந்தவர் ஜெர்ஸி நெய்மேன் (Jerzy Neyman). கணிதத்திலும் புள்ளியியலும் உலகப் புகழ்பெற்றவர். 

வகுப்பறை கரும்பலகை

இரவில் நெடு நேரம் படிக்கும் பழக்கம் டேன்ட்ஜிக்குக்கு இருந்தது. ஒருநாள் நள்ளிரவையும் தாண்டிப் படித்துவிட்டு, அசந்து தூங்கிவிட்டார். அடுத்த நாள் அவர் கல்லூரிக்கு 20 நிமிடம் லேட். முதல் வகுப்பை அன்றைக்கு எடுத்துக்கொண்டிருந்தவர் ஜெர்ஸி நெய்மேன். நம் ஊர் மாதிரி தாமதமாக வரும் மாணவர்களை வகுப்புக்குள் அனுமதிக்க மறுப்பதோ, வெளியே நிற்கச் சொல்லும் வழக்கமோ அங்கு இல்லை. வகுப்புகளைத் தவறவிட்டால், பல முக்கியப் பாடங்களையும் தவறவிடுவோம் என்பதை மாணவர்கள் அறிந்திருந்தார்கள். 

டேன்ட்ஜிக், தனக்கான இடத்தில் போய் அமர்ந்தார். போர்டில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் இரண்டு புள்ளியியல் கணக்குகளை எழுதி, அதற்குத் தீர்வு என்ன என்று கேட்டிருந்தார் நெய்மேன். அதைப் பார்த்ததும், அவர் மாணவர்களுக்கு ஏதோ ஹோம்வொர்க் கொடுத்திருக்கிறார் என்று நினைத்துவிட்டார் டேன்ட்ஜிக். அவசர அவசரமாக தன் நோட்டில், அந்த இரு கணக்குகளையும் எழுதிவைத்துக்கொண்டார். வகுப்பு முடிந்ததும், மாணவர்களும் நெய்மேனும் கலைந்தார்கள். 

கிளாஸ் ரூம்

அந்தக் கணக்குக்கு விடை காண்பது அத்தனை எளிதானதாக இல்லை. பல நாள்கள் போராடி, விடை கண்டுபிடித்தார் டேன்ட்ஜிக். பல்கலைக்கழகத்தில் இருந்த நெய்மேனின் அறைக்குப் போனார். தான் எழுதிய விடைத்தாளை நீட்டினார். 

``சார்... அன்னிக்கி நீங்க போர்டுல எழுதிவெச்சிருந்தீங்களே... அதுக்கான விடைகளைக் கண்டுபிடிச்சிட்டேன். இது வழக்கமான கணக்கு மாதிரியில்லை. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனாலதான் இவ்வளவு லேட்டாகிடுச்சு. சாரி...’’ என்றார். 

நெய்மேனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும், ``அதை மேஜையிலவெச்சுட்டுப் போ!’’ என்றார். மேஜை பல காகிதங்கள், ஃபைல்கள், நாளிதழ்கள், கணிதப் பத்திரிகைகள் எனக் கலைந்து கிடந்தது. இதில் வைத்தால், எங்கே தான் செய்துவைத்திருந்த ஹோம்வொர்க் கணக்கு காணாமல் போய்விடுமோ என்றுகூட பயமாக இருந்தது டேன்ட்ஜிக்குக்கு. ஆனால், பேராசிரியர் சொல்லிவிட்டாரே... மறுக்க முடியுமா? மேஜையில் ஓர் ஓரமாக அந்தக் கணக்குகளுக்கான தீர்வை (கிட்டத்தட்ட ஆய்வுக்கட்டுரை சைஸ்) வைத்துவிட்டுத் திரும்பினார். 
சரியாக ஆறு வாரங்கள் கழிந்தன. அது காலை 8 மணி. டேன்ட்ஜிக்கின் வீட்டு அழைப்பொலி அலறியது. அவரும் அவர் மனைவியும் எழுந்துகொண்டார்கள். போய்க் கதவைத் திறந்தார். வாசலில் நின்றுகொண்டிருந்தவர் ஜெர்ஸி நெய்மேன். 

``நீ எழுதின கணக்குகளுக்கான தீர்வுகளைப் பத்திரிகையில் வெளியிடப் போறேன். அதுக்காக சின்னதா ஒரு அறிமுகக் குறிப்பும் எழுதிவெச்சிருக்கேன்.’’ இதைக் கேட்டதும் டேன்ட்ஜிக்குக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், `சரி...சரி’ என்பதுபோலத் தலையை ஆட்டினார். 

ஜார்ஜ் டேன்ட்ஜிக்

பிறகுதான் தெரிந்தது... அன்றைக்கு நெய்மேன் போர்டில் எழுதிவைத்திருந்தது ஹோம்வொர்க் அல்ல... பல வருடங்களாக விடை காண முடியாத புள்ளியியல் கணக்கு என்பதும், அதை மாணவர்களுக்குச் சொல்வதற்காக அவர் போர்டில் எழுதிவைத்திருந்தார் என்பதும். `ஐன்ஸ்டீனாலகூட விடை காண முடியாத கணக்குப்பா’ என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள். அவர் கண்டுபிடித்த கணக்குக்கான ஒரு விடை, ஒரு கணிதப் பத்திரிகையில் வெளியானது. இரண்டாம் உலகப் போரெல்லாம் முடிந்து, அவர் கண்டுபிடித்த இரண்டாம் கணக்குக்கான விடையை வெளியிடயிருந்த நேரத்தில் அதற்கு இன்னொருவரும் விடை கண்டுபிடித்திருந்தார். இருவரும் சேர்ந்து விடையை வெளியிட்டார்கள்... அதில் `இணை ஆசிரியர்’ என்ற பெயர் டான்ட்ஜிக்குக்குக் கிடைத்தது.    

சரி... ஜார்ஜ் டான்ட்ஜிக் எப்படி கணக்குக்கு விடை கண்டுபிடித்தார்? அவரால் முடியாது என்று அவர் நினைக்கவில்லை, முடியும் என்று நினைத்தார். அதனால்தான் கணக்குக்கு விடை கிடைத்தது. 
*** 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்