வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (29/12/2017)

கடைசி தொடர்பு:17:48 (29/12/2017)

மருத்துவம் கைவிட, மூடநம்பிக்கை துளிர்க்க, உலகின் முதல் வேம்பயர் உருவான திக்திக் கதை!

அந்தக் கிழவர் அவர் வீட்டின் ஓர் அறையில் அமர்ந்திருக்கிறார். வெளிச்சம் உள்ளே வரக்கூடாது என்று சிரத்தையுடன் அறையின் ஜன்னல்களைத் திரையிட்டு மூடியிருந்தார். அருகிலுள்ள மேஜையில் அவர் மனைவியின் படங்கள். அவரின் சிரித்த முகத்தை அந்தப் படங்களில் பார்க்கும்போது, கிழவருக்கு அவருடனான கடைசி நிமிடங்கள் கண் முன்னே விரிகிறது. அந்த நினைவுகள் சில மாதங்களுக்கு முன்பு அதே அறையில் நடந்த நிஜங்கள். இருமல் ஒலி இடைவிடாது ஒலிக்கிறது. மூச்சுகூட விடமுடியாத அளவுக்கு இருமல். துடைக்க வைத்த வெள்ளைத் துணி, இருமலில் வந்த ரத்தத்தால், முழுவதும் சிவப்பாகிப் போயிருந்தது. படுத்த படுக்கையாக அவர் மனைவி தன் மரணத்துடன் போரடிக் கொண்டிருக்கிறார். விட்டத்தை வெறித்துப் பார்த்தவாறு அவரின் கண்கள் பெரிதாக, நொடியில் உயிர் பிரிகிறது. அருகில் உட்கார்ந்திருந்த கிழவர் குமுறிக் குமுறி அழுகிறார். சில வினாடிகளில் மீண்டும் இருமல் ஒலி கேட்கிறது. சற்றே வீரியம் குறைவாக, அதுவும் இப்போது நிகழ்காலத்தில்! எழுந்து பக்கத்து அறைக்கு ஓடுகிறார். இப்போது இருமியது அவரின் மூத்த பெண். அவரின் நாள்களும் எண்ணப்படுவது கிழவருக்கு புரியாமல் இல்லை.. கதவு வேகமாகச் சாத்தப்பட, அறையில் இப்போது இருட்டு மட்டுமே. அவரின் வாழ்க்கையைப் போலவே! ஆனால், அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. விரைவில் அவரின் குடும்பத்திலிருந்துதான் முதல் வேம்பயர் உருவாகப்போகிறது, அதையும் அவரே உருவாக்கப்போகிறார் என்று!

வேம்பயர்

1883-ம் ஆண்டு. அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ரோட் ஐலன்ட் மாகாணத்தின் எக்ஸ்டர் என்ற நகரத்தில், ஜார்ஜ் பிரவுன் என்பவர் தனக்கு சொந்தமான வீட்டில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். மனைவியை அப்போதுதான் கொடிய நோய் ஒன்றுக்குப் பலி கொடுத்திருந்தார். மருத்துவர்கள் அதற்குப் பெயர் ‘consumption’ (அப்போது காசநோய்க்கு அதுதான் பெயர்) என்றனர். பெயர் வைத்தனரே தவிர, அதற்கு என்ன மருந்து, எப்படி வைத்தியம் பார்க்கவேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தற்போது ஜார்ஜ் அவர்களின் மகளான மேரி ஆலிவ் அவர்களுக்கும் அதே கொடிய நோய். பகுத்தறிவாதியான ஜார்ஜ், அவர் மகளும் இறந்துவிடுவாள் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார். தற்போது அவரின் கவலையெல்லாம் அவரின் மற்ற பிள்ளைகளுக்கும் இது வந்துவிடக் கூடாது என்பதே.

ஆனால், காசநோய்க்கு அவரின் குடும்பம் மிகவும் பிடித்து போய்விட்டதோ என்னவோ? அவரின் மகனான எட்வின்னுக்கும் நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. "மறைமுகக் கொலைகாரன்" (Phantom Killer) என்று அழைக்கப்பட்ட அந்த நோய் அவர் வீட்டை விடுவதாயில்லை. அப்போதுதான் ஜார்ஜ் அவர்களின் குடும்ப மருத்துவர் ஹரோல்ட் மெட்காஃப் ‘கொலராடோ ஸ்பிரிங்ஸ்’ (Colorado Springs) என்ற மலைப்பிரதேசத்தை பற்றியும் அங்கு இந்த நோய்க்காக அளிக்கப்படும் பிரத்யேக சிகிச்சை பற்றியும் எடுத்துரைக்கிறார். மலைப்பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை, இந்த நோயை நிச்சயம் கட்டுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். மகனை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற தந்தையாக ஜார்ஜ் நிறைய செலவு செய்து மகனை அங்கே அனுப்பி வைக்கிறார். எட்வினின் உடல்நிலையும் நல்லவிதமாகத் தேறுகிறது. ஆனால், வீட்டிற்குத் திரும்பி வருபவர்க்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இப்போது அந்த நோய், வீட்டின் கடைக்குட்டியான மெர்ஸி என்பவளையும் பிடித்திருந்தது. அவள் எட்வினின் தங்கை. ஆனால், அவளுக்கு எட்வினுக்கு கிடைத்த அதே சிகிச்சை கொடுக்கப்படவில்லை. சிறிது நாட்களில் அவளும் இறந்துவிட, ஜார்ஜ் உடைந்தே போகிறார்.

ரோட் தீவிலிருக்கும் மெர்ஸியின் கல்லறை

இது நடந்து சில நாட்களிலேயே, மீண்டும் நம் எட்வினின் உடல்நிலை மோசமடைகிறது. குடும்ப மருத்துவர் ஹரோல்ட் மெட்காஃப் கையை விரித்துவிட என்ன செய்வது என்றே தெரியாமல் ஜார்ஜ் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். அந்தத் தருணத்தில், ஜார்ஜின் வீட்டிற்கு இரண்டு பேர் வருகிறார்கள். அதில் சாமுவேல் வில்கின்ஸ் என்று அழைக்கப்பட்ட ஒருவர், அவருடன் வந்த வில்லியம் ரோஸ் என்பவருக்கு இந்த நோயைச் சரி செய்வது எப்படி என்பது தெரியும் என்கிறார். அவர் சொல்வது போல் செய்தால், ஜார்ஜின் கடைசி வாரிசான எட்வினை நிச்சயம் காப்பாற்றலாம் என்கிறார். ஆனால், அவர் கூறிய அந்த வழிமுறை ஜார்ஜ் மட்டுமல்ல, அவரின் குடும்ப மருத்துவரையும் உறையச்செய்தது.

ஆங்கில மருத்துவம் காசநோய்க்கு எதுவும் சிகிச்சைமுறையை கொண்டு வராததால் அதன் கையறு நிலையைப் பயன்படுத்தி மூடநம்பிக்கை ஒன்று அப்போது பரவலாக நம்பப்பட்டது. அதன்படி, ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து இறப்புகள் நிகழ்ந்தால், இறந்தவர்களில் யாரோ ஒருவர், முழுவதுமாக இறக்காமல், ஆவியாக உலாவுவதாகவும், அந்த ஆவி, தான் உயிருடன் இருக்க அதே குடும்பத்தை சேர்ந்தவர்களின் இரத்தத்தைக் கேட்பதாகவும் நம்பப்பட்டது. ஜார்ஜ் வீட்டிற்கு வந்திருந்த வில்லியம் ரோஸ் இதை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறார். அந்த ஆவி அடங்கும்வரை, குடும்பத்தில் பலிகள் தொடரும் என்றும் அதைத் தடுக்கும் வழிமுறை தனக்கு தெரியும் என்றும் தெரிவிக்கிறார்.

நம்பப்பட்ட மூடநம்பிக்கை குறித்து வெளியான செய்திஅதன்படி, அதுவரை இறந்துபோன ஜார்ஜின் மனைவி, அவரின் இரண்டு மகள்கள், இவர்களில் யாரேனும் ஒருவர் இன்னமும் இறக்காமல் சவப்பெட்டியில் இருப்பதாகவும், இரவு நேரங்களில் ஆவியாக வெளியே வந்து உயிரோடிருப்பவர்களின் இரத்தத்தைக் கேட்பதாகவும் கூறுகிறார். மூன்று கல்லறைகளையும் உடைத்து சவப்பெட்டியை திறந்தால், எந்தப் பிணம் அழுகாமல் இதயத்தில் இரத்தம் கூட உறையாமல் இருக்கிறதோ அவரே இந்தப் பிரச்னைக்கெல்லாம் காரணம் என்றும் உறுதியாகத் தெரிவிக்கிறார். அப்படியிருப்பவரின் இதயத்தை வெளியே எடுத்து எரித்து அந்தச் சாம்பலை கஷாயமாகச் செய்து நோய் தாக்கியிருக்கும் எட்வின்னிற்கு கொடுத்துவிட்டால் குணமாகிவிடும் என்று தெரிவிக்கிறார். ஜார்ஜின் குடும்ப மருத்துவர் இது சுத்த முட்டாள்தனம் என்றும், அறிவியல் ரீதியாக இது சாத்தியமேயில்லை என்றும் விளக்குகிறார். பகுத்தறியும் திறனுடையும் ஜார்ஜ் முதலில் இதை மறுத்தாலும், மகனாயிற்றே? இவனையும் இழந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலை கொள்கிறார். தன் ஒரே வாரிசைக் காப்பாற்ற இனியும் அறிவியல் ரீதியான மருத்துவத்தை நம்புவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வருகிறார். வில்லியம் ரோஸ் கூறிய அந்தக் கொடூர யோசனை தவறு என்றாலும், செய்தால் மகன் பிழைக்கலாம் என்று அதைச் செய்ய முடிவு செய்கிறார்.

சாமுவேல் வில்கின்ஸ், வில்லியம் ரோஸ், மருத்துவர் ஹரோல்ட் மெட்காஃப் மற்றும் ஜார்ஜ் முன்னிலையில் கல்லறைகள் உடைக்கப்படுகின்றன. முதலில் ஜார்ஜின் மனைவியின் சவப்பெட்டி திறக்கப்படுகிறது. இறந்து பல நாட்களை ஆகிவிட்ட நிலையில், பிணம் அழுகிபோய் பார்ப்பதற்கே கொடூரமான ஒரு நிலையில் இருக்கிறது. அடுத்து ஜார்ஜின் முதல் மகளின் சவப்பெட்டி திறக்கப்படுகிறது. அதிலும் கிட்டத்தட்ட அதே நிலை தான். இதுவும் இல்லையென ஜார்ஜின் இளையமகளும், எட்வின்னின் தங்கையுமான மெர்ஸி பிரவுனின் சவப்பெட்டி திறக்கப்பட, அதிர்ச்சி! பிணம் அழுகவேயில்லை. இதயத்திலும் வில்லியம் ரோஸ் கூறியது போல இரத்தம் உறையாமல் இருந்தது. இதைப் பார்த்த மருத்துவர் ஹரோல்ட் மெட்காஃப், மெர்ஸி தற்போதுதான் இறந்தாள் என்பதால், பிணம் அழுகிப்போவதற்கான நேரம் இன்னமும் வரவில்லை. இரத்தம் உறையாமல் இருக்கக் காரணம், மெர்ஸியின் சவப்பெட்டி இருந்த இடம் மற்ற இரண்டு இடங்களை விடவும் குளிரான இடம். இதனால் உடல் பதப்படுத்தப்பட்டது போலிருக்கிறது. இங்கே இரத்தம் உறைய வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் விளக்குகிறார். ஆனால், இதை ஏற்க மற்றவர்களின் மனம் மறுக்கிறது.

வேம்பயர் குறித்த செய்திகள்

வேம்பயர் நம்பிக்கை குறித்து வெளியான கேலிச் சித்திரம்வேறுவழியின்றி, மெர்ஸியின் இதயம் எரிக்கப்பட்டு, அந்தச் சாம்பலை கஷாயமாக்கி நோயுற்ற எட்வின்னுக்கு தருகிறார்கள். தங்கையின் இதயம் என்பதால் வேண்டாமென்று எவ்வளவோ போராடுகிறான். இறுதியில், வேறுவழியின்றி குடிக்கிறான். ஆனால், அந்த மூடநம்பிக்கை அவன் உயிரைக் காக்கவில்லை. சிறிது நாட்களில் இறந்து போகிறான். ஜார்ஜ் செய்த காரியத்தை அறிந்த ஊர் மக்கள், அவரை முட்டாள் என்றும், இரக்கமற்ற கொடுமைக்காரன் என்றும், மூடநம்பிக்கைகளில் முற்றிப்போனவன் என்றும் தூற்றுகிறது. மனிதர் வெளியே தலைகாட்டமுடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், ஒரு சாரர், இவர்கள் மெர்ஸியின் இதயத்தை எடுத்து எரித்த முறையில், ஏதோ தவறு என்றும், சடங்கில் தவறு என்பதால் மெர்ஸியை இவர்களால் தடுக்கமுடியவில்லை என்றும் நம்பினர். அடங்காதவள், எட்வின்னின் உயிரைப் பறித்துவிட்டதாகவும், இன்னமும் இரத்தம் குடிக்க அவள் இரவுகளில் உலவுவதாக அஞ்சினர். இதைத் தெரிந்து கொண்ட செய்தித் தாள்கள், மெர்ஸியின் இந்தத் திகில் கதைக்கு மேலும் சாயம் பூசி, ‘வேம்பயர்’ (Vampire: இரத்தக் காட்டேறி) என்ற பெயருடன் அவளை விளம்பரப்படுத்தியது.

இந்தச் சம்பவத்திற்கு அப்போது செய்தித் தாள்கள் கொடுத்த முக்கியத்துவம், ‘வேம்பயர்’ என்னும் சொல்லை இந்த உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது. மக்களை பயமூட்டியது. நியூ இங்கிலாந்து மாகாணம் முழுவதும் மக்கள் இரவில் வெளியே வரவே அஞ்சி நடுங்கினர். பின்னாளில், ப்ராம் ஸ்டோக்கர் என்னும் எழுத்தாளர் ‘டிராகுலா’ என்னும் நாவலை இந்த வேம்பயர் கொண்டு எழுத, அதன் பின்னர் திரையுலகம் வரை வேம்பயர் கதைகள் சென்று, மக்களைப் பயப்படவைத்து கல்லா கட்டியது. இந்த மெர்ஸியின் கதையை வைத்துதான், வேம்பயர் என்றால் இரத்தம் குடிக்குமென்றும், இதயத்தை பிடுங்கியெறிந்து விட்டால் இறந்துவிடும் என்றும், பகல் வெளிச்சத்தில் வெளியே வராது என்றும் விதிமுறைகளை வேம்பயர் கதைகளுக்கு கொண்டு வந்தனர்.

மருத்துவம் கைவிட்டதால், மூடநம்பிக்கை குழிக்குள் பகுத்தறிவாதி ஜார்ஜ் விழுந்துவிட்டார், அதை வில்லியம் ரோஸ் போன்றவர்கள் தங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை விட, இதில் மற்றொமொரு அரசியல் புதைத்திருக்கிறது. இது நடந்தது 19ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம். அப்போதைய சூழலில் ஒரு பெண்ணின் உயிரைவிட ஓர் ஆணின் உயிர் பெரியது என்ற எண்ணம் பரவலாக இருந்தது. அதனால்தான் எட்வினிற்கு கிடைத்த சிகிச்சை, மகளுக்குக் கிடைக்கவில்லை. அவனைப் பிழைக்கவைக்க, மனைவி மற்றும் மகளின் பிணத்தை தோண்டக்கூட ஜார்ஜ் தயாராக இருந்தார். இன்றும் இந்தப் பாகுபாடு பல இடங்களில் இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் மெர்ஸியின் கதை கொண்டு செல்லப்பட வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்