Published:Updated:

பனியில் உறையும் கொடைக்கானல்..!

பனியில் உறையும் கொடைக்கானல்..!
பனியில் உறையும் கொடைக்கானல்..!

பனியில் உறையும் கொடைக்கானல்..!

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் வழக்கமாக 14 டிகிரி செல்சியஸ் முதல் 17 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். டிசம்பர் மாதத்தில் இரவு நேரங்களில் இந்த வெப்பநிலை குறைந்து 6 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆனால், தற்போது 4 டிகிரி செல்சியஸ் உள்ளதால், கடுமையான குளிர் நிலவி வருகிறது. காஷ்மீரைப் போன்ற சூழ்நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் கொடைக்கானலில் நிலவும் குளிரை அனுபவிப்பதற்காகவே வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்திருந்தனர். ஆனால், பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தது. இதனால் டிசம்பர் குளிரை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கொடைக்கானலில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. 4 டிகிரிக்கு வந்தது வெப்பநிலை. இதனால் காலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகிறது. புல்வெளிகள் முழுவதும் பனி உறைந்து கிடக்கிறது. செடி, கொடி மரங்கள் எல்லாம் பனியில் உறைந்து கிடக்கின்றன. வாகனங்கள் மீதும் பனித்துகள்கள் படர்ந்து கிடக்கின்றன. வீடுகளில் உள்ள தண்ணீர் உறைந்து ஐஸ்கட்டியாக மாறி வருகிறது. பகல் நேரங்களில் 16 டிகிரி வரை வெயில் அடிக்கிறது.

டிசம்பர் சீசனை எதிர்பார்த்து வந்த சுற்றுலாப் பயணிகள் தற்போதைய சூழலால் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் குளிரின் கடுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பனிபொழிவும் கடுமையாக இருக்கிறது. தினம் தினம் வெள்ளை மழை பொழியும் கொடைக்கானல், காஷ்மீரை நினைவுபடுத்துவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ள இந்தக் கடும் குளிர் உள்ளூர்வாசிகளுக்குப் பல்வேறு சிரமங்களைக் கொடுத்துள்ளதையும் மறுக்க முடியாது. காலை எட்டு மணிக்குப் பிறகுதான் பெரும்பாலானோர் எழுந்திருக்கிறார்கள். மாலை ஐந்து மணிக்கு வீடுகளில் அடைந்து விடுகிறார்கள். வயதானவர்கள், நிலப்பரப்பில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்லத்தொடங்கியுள்ளனர். தை மாதம் முடியும் வரை கடுமையான குளிர் இருக்கும் எனத் தெரிகிறது. குறைந்த செலவில் காஷ்மீர் சென்ற அனுபவம் தேவைப்படுவோர், கொடைக்கானலுக்கு ஒரு ரவுண்ட் போய்வரலாம்

அடுத்த கட்டுரைக்கு