Published:Updated:

`ஒரு ஆடு திருடுறதெல்லாம் பழசு.. ஆட்டு மந்தையவே திருடுறது புதுசு!' -இது ஆலங்குடி அதிர்ச்சி

`ஒரு ஆடு திருடுறதெல்லாம் பழசு.. ஆட்டு மந்தையவே திருடுறது புதுசு!' -இது ஆலங்குடி அதிர்ச்சி
`ஒரு ஆடு திருடுறதெல்லாம் பழசு.. ஆட்டு மந்தையவே திருடுறது புதுசு!' -இது ஆலங்குடி அதிர்ச்சி

`ஒரு ஆடு திருடுறதெல்லாம் பழசு.. ஆட்டு மந்தையவே திருடுறது புதுசு!' -இது ஆலங்குடி அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள தொண்டைமான்விடுதியில் நேற்று முன்தினம் திருடு போன ஐம்பது ஆடுகளை  ஸ்ரீரங்கம் அருகே உள்ள உத்தமர் கோயில் வாரச்சந்தையில் திருடர்கள் விற்க முற்பட்டபோது, மீட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் ஆலங்குடிப் பகுதியையே பரபரப்பாக்கி இருக்கிறது.

முன்பெல்லாம் கிராமங்களில் யார் வீட்டிலாவது ஓர் ஆடு திருடு போனாலே ஊரே திரண்டு வந்து அந்த வீட்டில் உள்ளவர்களிடம் துக்கம் விசாரிக்கும். ஊர்ப் பெரியவர்கள் கூட்டம் போட்டு, திருட்டைத் தடுக்கவும் ஆட்டை ஆட்டையைப் போடும் திருடனைப் பிடிக்கவும் இரவு ரோந்துக்கு ஊர் இளைஞர்களை நியமிப்பார்கள். அந்த இளைஞர்களும் கையில் கம்பு, கப்படாக்களுடன் விடிய விடிய கிராமத்தைக் காவந்து பண்ணுவார்கள். இதில் இரண்டு விஷயங்கள் பொதுவாக நடக்கும். ஒன்று, ஊர்க் காவலுக்கு ஆள் போட்டதை அறிந்து, ஆட்டுத்திருடன் அந்த ஊர் பக்கமே ஆறு மாதங்களுக்குத் தலைவைத்துப் படுக்க மாட்டான். அடுத்து, விவரம் தெரியாமல் அடுத்த ஆட்டைத் திருட வரும்போது, ஊர்க் காவல்படையிடம் வசமாக மாட்டிக்கொள்வான். அவனை மரத்தில் கட்டிவைத்து ஊரே திரண்டு வந்து நையப் புடைக்கும். இதில், ஆட்டைத் திருட்டுக் கொடுத்திருந்த வீட்டுப் பெண், திருட்டுக்கொடுத்த ஆட்டின்புழுக்கைகளோடு எருமை மாட்டுச்சாணியைக் கரைத்துக்கொண்டு வந்து, திருடனின் மேல் ஊற்றி, பீத்த விளக்குமாறு கொண்டு அந்தத் திருடனை விளாசி எடுப்பார். ஓர் ஆடு திருடு போனாலே ஊரே அப்படி ரியாக்ஷன் கொடுக்கும்.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஆட்டுத்திருடர்கள் இப்போதெல்லாம் ஓர் ஆடு இரண்டு ஆடு என்று நப்பித்தனமாகத் திருடுவதில்லை. இருபது, முப்பது, ஐம்பது என்று மந்தைமந்தையாக ஆட்டையைப்போட்டு, சந்தையில் அப்படியே விற்று சுடச்சுடக் காசு பார்த்து விடுகிறார்கள். அப்படிச் செய்ய முற்பட்ட ஒரு கும்பல்தான் இப்போது பிடிபட்டிருக்கிறது. 'அதெப்படி ஒருமந்தையைக் கிளப்பிக்கொண்டு போகும்வரையிலா ஆட்டு உரிமையாளருக்குத் தெரியாமல் போகும்? 'ஒரு ஆடு கூடவா சத்தம் போட்டுக் காட்டிக் கொடுக்காது?' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதே கேள்வியோடு நாமும் விசாரித்தோம்."எந்தகாலத்துல இருக்கீங்க? மந்தையவே ஆட்டையப் போடுறவன் அம்புட்டு ஆடுகளையும் ஓட்டிட்டுப்போவானு நெனச்சீங்களா? மினி வேனைக் கொண்டு வந்துடுவானுங்க. கிடை போடுற இடத்துல ஒருவாரம் போக்குவரத்துமா இருந்து நோட்டம் விடுவானுங்க. எத்தனை ஆடுகள் இருக்கு. மேய்ச்சல் கண்காணி (ஆடு மேய்ப்பவர்கள்) எத்தனை பேரு இருக்காங்க. என்னமாதிரியான ஏற்பாடுகளோடு வந்தால் ஆடுகளை அள்ளிப் போட்டுக்கொண்டு போகலாம்னு அவ்வளவு விஷயத்திலும் கணக்குப்போட்டுதான் வருவாங்க. கிடை பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில்தான் இருக்கும். கிடை உரிமையாளர் வெளி ஊரைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார். ஆடுகளோடுதான் அவர்களும் படுத்துக்கிடப்பார்கள். இது பனிக்காலம் என்பதால், பனி இறங்காத இடத்தில் ஆடுகளைத் தேக்கிவிட்டு, அவர்களும் இழுத்துப் போர்த்திக்கொண்டு  தூங்கி விடுவார்கள். அப்படி உறங்குபவர்களுக்கு மயக்க மருந்தை ஸ்ப்ரே செய்துவிட்டு, கையோடு கொண்டு வந்திருக்கும் இலைகொப்புகளைக்காட்டி, ஆடுகளை மினி வேனில் ஏற்றி விடுவார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து, அந்த ஊர் சந்தையில் விற்று விடுவார்கள்" என்றார்கள்.

தொண்டைமான் விடுதியில் ஆடுகள் காணாமல் போனதும் அதன் உரிமையாளர் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில்  சந்தைகள் நடக்கும் ஊர்களுக்குச் சென்றிருக்கிறார். அந்த வகையில், நேற்று உத்தமர் கோயிலில் கூடிய சந்தையில் தனது ஆடுகள் இருப்பதைப் பார்த்து அவற்றை மீட்டிருக்கிறார்.
அடுத்த கட்டுரைக்கு