``இட்லிக்கும், சம்பளத்துக்கும்கூட வரலாறு உண்டு!” - எஸ்.ராமகிருஷ்ணன் | There's a link between Idli and Salary says S. Ramakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (01/01/2018)

கடைசி தொடர்பு:10:39 (01/01/2018)

``இட்லிக்கும், சம்பளத்துக்கும்கூட வரலாறு உண்டு!” - எஸ்.ராமகிருஷ்ணன்

செங்கல்பட்டில் கடந்த 23-ம் தேதி செங்கை புத்தகத் திருவிழா தொடங்கியது. தினமும் ஓர் ஆளுமை என சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு உரையாற்றிவருகிறார்கள். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், புத்தகங்கள் வாசிக்கவேண்டிய அவசியம், பண்பாடு, மொழி, கலாசாரத்தைப் பாதுகாக்கவேண்டிய அவசியம் குறித்துப் பேசினார்.

செங்கை புத்தக திருவிழா, எஸ். ராமகிருஷ்ணன்

``கடந்த சில மாதங்களுக்கு முன் ஷார்ஜாவில் புத்தகக் காட்சி நடந்தது. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. முழுவதும் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஒவ்வொரு துறைக்கும் எனத் தனித்தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அங்கு தள்ளுவண்டியில் கொண்டு செல்லும் அளவுக்கு புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். எழுத்தாளனாக என் வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்த நாள் அது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றேன். அந்த வீட்டில் ஒரு புத்தகம்கூட கிடையாது. பழைய செய்தித்தாள், வார இதழ்கூட கிடையாது. அவர் வீட்டில் இருந்த ஒரே புத்தகம் ரேஷன் கார்டுதான்.  எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த நகரில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான மிகப்பெரிய நபர் அவர். பெரிய வீடு, கார்கள், அதிநவீன உபரகரணங்கள் என எல்லாம் அவர் வீட்டில் இருக்கின்றன. உறவினர்கள்கூட அவர்கள் வீட்டுக்கு வருவது கிடையாது. அந்த வீட்டில் புத்தகங்கள் இல்லாமல்போனது என்பது ஒருபக்கம் என்றால், ஆலோசனை சொல்லக்கூட அருகில் ஒருவரும் இல்லை. `நீங்கள் வாழ்க்கையைத் தவறான பாதைக்குக் கொண்டு செல்கிறீர்கள்' என அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன்.

புத்தகம் என்பது, ஒரு கால இயந்திரம். அந்தப் புத்தகங்கள்தான் உங்களை பழைய காலத்துக்குக் கொண்டுசெல்லும். அதனால்தான் படிக்கச் சொல்கிறோம். படிக்க நேரம் இல்லை என்பதெல்லாம் பொய். அதை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

செங்கை புத்தக திருவிழா, எஸ். ராமகிருஷ்ணன்

பள்ளி ஒன்றுக்கு நான் சென்றிருந்தபோது, மாணவன் ஒருவன் அவனுடைய நோட்டின் முதல் பக்கத்தில் `இட்லி ஒழிக’ என எழுதியிருந்தான். `ஏன் இப்படி எழுதி இருக்கிறாய்?' என அவனிடம் கேட்டேன். `வீட்டுல தினமும் இட்லிதான் சார் குடுக்கிறாங்க. ஒரே நிறம். ஒரே டிசைன்' என்றான். இட்லி அவனுக்கு அலுத்துப்போயிருந்தது. உலகில் மிகச்சிறந்த காலை உணவுப் பட்டியிலில் இட்லிதான் முதல் இடத்தில் இருக்கிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தோனேஷியாவில்தான் முதன்முதலில் இட்லியை உருவாக்கினார்கள். பிறகு, இந்தியாவில் உள்ள கர்நாடகாவுக்கு வந்தது. அங்கேதான் சிறிய அளவில் உருவாக்கினார்கள். அன்றைக்கு உணவுகள் எல்லாம் விற்பனை செய்ய மாட்டார்கள். இன்றைக்கு எல்லா உணவுப் பொருள்களும் வணிகமயமாகிவிட்டன. உணவின் வரலாறு, அதன் பின்னால் உள்ள காரணம் நமக்குத் தெரியவில்லை. நாம் படித்த எந்தப் பாடப் புத்தகத்திலும் இதுபோன்ற தகவல்கள் இருக்காது. நமது வாழ்க்கைக்கும் கல்விக்கும் ஒரு தொடர்பும் இல்லை. பாடக்கல்வி என்பது, இயந்திர வாழ்க்கையை மட்டுமே உருவாக்கும்.

செங்கை புத்தக திருவிழா

உலகில் எல்லா நாடுகளிலும் வேற்றுமொழியைப் படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தாய்மொழியை மறப்பதில்லை. தாய்மொழியில்தான் சிந்திக்கிறார்கள். வீட்டில் பேசுகிறார்கள். தாய்மொழிக்காகக் கைப்பணத்தைக்கூடச் செலவிடுகிறார்கள். சீனர்கள் உலகம் முழுவதும் சென்றிருக்கிறார்கள். அவர்கள் போகும் நாடுகளில் எல்லாம் `சைனா டவுன்' என்ற ஒரு நகரத்தை உருவாக்கியிருப்பார்கள். சீனப்பள்ளி, புத்தர் ஆலயம், சீன உணவு, உடை என, சீனப் பண்பாட்டில் உள்ள விஷயங்கள் எல்லாம் அங்கே கிடைக்கும். உலகத்தில் அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களது பண்பாட்டையும் மொழியையும் அவர்கள் கொண்டுசெல்கிறார்கள். ஆனால், நாம் வெளியே சென்றால், நாம் ஒரு தமிழன் என்பதையே மறந்துவிடுகிறோம்; தமிழன் என்ற அடையாளத்தை மறைத்துவிடுகிறோம். நமது இலக்கியத்தையும் பாரம்பர்யத்தையும் குழந்தைகளுக்கு நாம்தான் கற்பிக்க வேண்டும். இன்றைக்கு எத்தனை வீட்டில் தமிழ் அகராதி இருக்கிறது? மூன்று லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை தமிழில் சொற்கள் இருக்கின்றன. ஆங்கில அகராதியில் இரண்டரை லட்சம் சொற்கள்தான் இருக்கின்றன.

இன்று எல்லோரும் சம்பளத்துக்காக வேலைசெய்கிறோம். சம்பளம் என்றால் என்ன? சம்பா என்றால் அரிசி. அளம் என்றால் உப்பு. இரண்டும் சேர்த்துக் கொடுத்ததால் `சம்பளம்' என்று பெயர் வந்தது. ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஒரு வரலாறு பொதிந்து கிடக்கிறது. வெள்ளைக்காரன் உப்புக்கு தடைவிதித்தபோது, ஆந்திராவிலிருந்து காஷ்மீர் வரை 16 அடி உயரத்துக்கு ஒரு தடுப்புச் சுவரை அமைத்தான். முள் செடிகள்கொண்டு அந்த 10 அடி அகலத்தில் அந்த வேலி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு வழி உண்டு. அந்த வழியாக உப்பை கொண்டு சென்றால், அங்கே இருக்கும் காவலர்கள் வரி விதிப்பார்கள். இதனால் உப்பும் அரிசியும் ஒரே விலையில் இருந்தன. உப்பை வாங்க சாமானியர்கள் தவித்தார்கள். இந்த வரியால் 65 லட்சம் ரூபாய் பிரிட்டிஷ் அரசுக்கு லாபம் கிடைத்திருக்கிறது. இன்றைக்கு அது, 650 கோடி மதிப்பு வருமானம். `உப்புக் குறவர்கள்' என்ற இனத்தில் இருந்தவர்கள் வெள்ளைக்காரர்களுக்குத் தெரியாமல் அப்போது ஊர் ஊராகக் கொண்டு சென்று உப்பு விற்றார்கள். இதனால் அவர்களை `குற்றப்பரம்பரையினர்' என்று சட்டம் போட்டு அந்த இனத்தையே அழித்தான் வெள்ளைக்காரன். இவ்வளவு வரலாறு தெரிந்ததால்தான் காந்தி தண்டிக்குப் போய் உப்பு எடுத்து போராட்டம் செய்தார். அத்தகைய காந்தி ஒருமுறைகூட விமானத்தில் சென்றது கிடையாது. எப்போதும் மூன்றாம் வகுப்பு ரயிலில்தான் பயணம் செய்வார். அந்த நேரத்தில் கடிதங்களை எல்லாம் எழுதிவிடுவார். இங்கே வந்தவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கிச் செல்லுங்கள்” என்று முடித்தார்.

வரலாற்று அனுபவங்களைப் பெற்ற மகிழ்சியோடு வந்திருந்தவர்கள் சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்