``அந்நிய மண்தான் ஆனால், மண் அந்நியமல்ல!” - நியூஸிலாந்து விவசாயிகளைக் காப்பாற்றிய சீனத் தம்பதி | A Chinese Refugee Pair in NewZealand do some miracles in Farming

வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (02/01/2018)

கடைசி தொடர்பு:14:56 (02/01/2018)

``அந்நிய மண்தான் ஆனால், மண் அந்நியமல்ல!” - நியூஸிலாந்து விவசாயிகளைக் காப்பாற்றிய சீனத் தம்பதி

“இது Love at First Sight அல்ல...”

“ஹா...ஹா...”

“இந்த டீ தான் எங்களை ஒன்று சேர்த்தது. அதனால், இதை Love of First Cup” என்று சொல்லலாம். 

"ஹா...ஹா... அந்த முதல் சந்திப்பு இன்னிக்கும் மறக்க முடியாது. அது 1953ல். "அந்தச் சூடான டீயிலிருந்து பறக்கும் ஆவியின் ஊடே கைகளை நுழைத்து, அந்தப் பாட்டியின் சுருக்கமான கைகளை அத்தனை அன்போடு பிடிக்கிறார் ஜோ. மிஸ்டர் ஜோ காக் (Joe Gock). 

குக்கர் விசில் சத்தம் கேட்க...

போதும் உங்க ரொமான்ஸ்... வேலை இருக்கு விடுங்க என்னை” என்று சொன்னபடி ஜோவின் கைகளைத் தள்ளிவிட்டு, சமையலறை நோக்கி நடக்கிறார் ஃபே (Fay). மிஸஸ்.ஃபே காக் (Fay Gock).

நியூசிலாந்து மண் வளம் காத்த சீனத் தம்பதி

இருவரின் தோல் சுருக்கங்களே சொல்லிவிடும், அவர்கள்  80 வயதைக் கடந்தவர்கள் என்பதை. தன் கண்ணாடியைச் சரிசெய்தபடியே எழுந்து, தன் மனைவிக்கு உதவிடக் கிளம்புகிறார் ஜோ.

“இங்க வேலை முடிஞ்சது. நீங்க தோட்டத்துக்குப் போங்க. நான் டிராக்டர் எடுத்துட்டு வர்றேன்." என்று ஃபே சொல்லி, சரியாக 15 நிமிடங்களில், அந்தச் சிவப்பு நிற டிராக்டரை ஸ்டார்ட் செய்து, தோட்டத்தை நோக்கிக் கிளம்பினார் ஃபே.

நியூசிலாந்து மண் வளம் காத்த சீனத் தம்பதி

சீனாவில் பிறந்தவர்கள் இந்த காக்(Gock) தம்பதி. 1940-களில் சீனா-ஜப்பானிய போரால் பாதிக்கப்பட்டு, நியூஸிலாந்துக்கு அகதியாக வந்தவர்கள். 1953ல் முதன்முறையாக இருவரும் சந்தித்தார்கள்.முதல் பார்வையில்...அல்ல... முதல் டீயில் காதல் வயப்படுகிறார்கள். கல்யாணம் செய்து கொள்கிறார்கள். 

நியூசிலாந்து மண் வளம் காத்த சீன தம்பதி

நியூஸிலாந்தின் வடக்கிலிருக்கும் 'மாங்கிரி' (Mangere) எனும் பகுதியில்தான் இவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். நியூஸிலாந்து அவர்களுக்குப் புதிய நாடு. இவர்கள் அந்த மண்ணில் அகதிகள். முதலில், எல்லாம் அந்நியமாக இருந்தது அவர்களுக்கு. ஆனால், அந்த மண் அவர்களுக்கு அந்நியமாக இல்லை. முதலில் அந்த மண்ணைப் புரிந்துகொண்டு, அதில் விவசாயம் செய்யத் தொடங்கினார்கள். 10  ஏக்கருக்கும் குறைவான நிலம்தான் அப்போது அவர்களிடம் இருந்தது.

அந்தப் பகுதியில் அதிகம் விளைந்தது, 'குமாரா' (Kumara) எனும் இனிப்புக்கிழங்கு வகை. அதையேதான் இவர்களும் பயிரிட்டார்கள். முதல் வருடம் நல்ல அறுவடை. ஆனால், 1950-களின் இறுதியில் ஏதோ ஒரு வகையான நோய் தாக்க, நியூஸிலாந்து முழுக்க குமாரா கிழங்குகள் அழுகி, அழிந்துபோகத் தொடங்கின. பல விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இனி, அதை விளைவிக்கவே முடியாத அளவுக்கு அழிவு மிகப் பெரிய அளவில் இருந்தது. ஆனால், ஜோ நம்பிக்கையை இழந்துவிடவில்லை.

நியூசிலாந்து மண் வளம் காத்த சீனத் தம்பதி

நோய் பரவத் தொடங்கிய காலகட்டத்திலேயே சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ஆராய்ச்சிகள் என்பதைவிட முயற்சி என்றே அதைச் சொல்லலாம். நோய் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் வகையில், 'ஓவாய்ரகா ரெட்' (Owairaka Red) எனும் ஒருவித எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடித்தார்கள். அதை முதலில் தங்கள் நிலத்தில் பரிசோதித்துப் பார்த்தார்கள். இந்தத் தோட்டத்தின் ‘குமாரா கிழங்குகள்' காப்பாற்றப்பட்டன. செய்தி, நாடு முழுக்கப் பரவியது.

பல நிறுவனங்கள், ‘எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் தருகிறோம்’ என்று அந்த நோய் எதிர்ப்பு மருந்தை வாங்க முன்வந்தார்கள். ஆனால், ஜோவும்,ஃபேவும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. 

“இந்தக் கண்டுபிடிப்பு, இந்த நாட்டு விவசாயிகளுக்கானது. இதற்கு எங்களுக்கு ஒரு பைசாவும் வேண்டாம்" என்று சொல்லி, அதை இலவசமாகக் கொடுத்தார்கள். இனி கிழங்குகளைப் பயிரிடவே முடியாது என்ற நிலையில், பெரும் நஷ்டத்தில் சிக்கிக்கிடந்த விவசாயிகளுக்கு இது புத்துயிர் அளித்தது. காக் தம்பதிக்குப் பெரும் புகழ் வந்துசேர்ந்தது. பெரும் பணமும் கொடுக்க பலர் முன்வந்தார்கள். ஆனால், அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், தங்கள் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்தார்கள். இதோ, சில ஏக்கர்களில் ஆரம்பித்த அவர்களின் விவசாய வாழ்க்கை, இன்று பல நூறு ஏக்கர்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது.

நியூசிலாந்து மண் வளம் காத்த சீனத் தம்பதி

இத்தனை ஆண்டுகால விவசாய வாழ்க்கையில், இவர்கள் பல புதுமைகளைக் கண்டுபிடித்துள்ளனர். விதைகளற்ற தர்பூசணி பழத்தை நியூஸிலாந்தில் அறிமுகப்படுத்தினார்கள். காய்கறி, பழங்களைப் பதப்படுத்த பல தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் வழக்கத்தை உலகிலேயே இவர்கள்தாம் முதலில் அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.  

இவர்களின் பிள்ளைகளும், பேரன், பேத்திகளும் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தாலும், இவர்கள் மட்டும் அந்தப் பகுதியைவிட்டு நகராமல் அங்கேயே வாழ்கிறார்கள். இவர்களுக்கு, நியூஸிலாந்து மட்டுமல்லாமல் உலகின் மிக முக்கிய விவசாய விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும், இவர்களின் விவசாய சாதனையைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல், இவர்களின் அன்பையும் தீராக் காதலையும் கண்டு வியக்கிறார்கள். 

நியூசிலாந்து மண் வளம் காத்த சீனத் தம்பதி

நிலத்தில் வேலையைத் தொடங்கியிருக்கும் ஜோவின் அருகே வந்து, அந்தச் சிவப்பு நிற டிராக்டரை நிறுத்துகிறார் ஃபே. கீழே இறங்கி வருபவரிடம்...

"இந்த வயசிலயும் டிராக்டர் ஓட்டி அசத்துற டார்லிங்... சான்ஸே இல்லை" என்று சொல்லி, செல்லமாக முத்தமிடுகிறார் ஜோ. அதை மகிழ்ச்சியோடு அனுபவித்துச் சிரித்தபடியே...

“செம்ம அடி வாங்கப் போறீங்க... இந்தக் காய்கள் எல்லாம் இன்னும் ரெண்டு நாள் மண்ணில் இருக்கணும். ஏன் அவசரப்பட்டு வெளிய எடுத்தீங்க...” என்று அங்கு கூடையில் பறிக்கப்பட்டிருந்த காய்களைப் பார்த்து திட்டியபடியே அதை நோக்கி நகர, தன் கண்ணாடிக்குள் இருந்த கண்களைச் சுருக்கியபடியே அவர் பின்னால் நடக்கிறார் ஜோ.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்