ஜிப்பான் குரங்கு, கோமாளி தவளை, யோதா வௌவால்... 2017-ல் 'அறிமுகமான' உயிரினங்கள்! | New species of 2017

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (02/01/2018)

கடைசி தொடர்பு:15:15 (02/01/2018)

ஜிப்பான் குரங்கு, கோமாளி தவளை, யோதா வௌவால்... 2017-ல் 'அறிமுகமான' உயிரினங்கள்!

2017-ம் ஆண்டு நிறைய உயிரினங்கள் அறிவியலாளர்களால் 'புதிய உயிரினங்களாக' அறிவிக்கப்பட்டன. இவையனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டவை. நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னரே இவை புதிய உயிரினங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றில் சில முக்கியமான உயிரினங்களையும் அவற்றின் கதைகளையும் காண்போம்.

தபானுலி உராங்குட்டான்:

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் புதிய உராங்குட்டான் இனம் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 1997-ல் உயிரியல் வல்லுநர்கள் குழு, வித்தியாசமான உராங்குட்டான் குரங்குகளை அங்கே கண்டறிந்தனர். இதுவரை கண்டறியப்படாத குரங்கு வகையாக அவை இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர். பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வில் அவை, ஏற்கெனவே உள்ள, போர்னிய மற்றும் சுமத்ரா வகை உராங்குட்டான்கள் அல்ல என்பது தெரியவந்தது. அவை புதிய வகை குரங்குகள் என்பது உறுதிசெய்யப்பட்டது. அந்தக் குரங்குகளுக்கு, 'தபானுலி” எனப் பெயர் சூட்டியுள்ளனர். இது உலகில் மீதமுள்ள எட்டாவது வகை உராங்குட்டானாகும்.  இவ்வகை குரங்குகள் தற்போது 800 மட்டுமே இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

உராங்குட்டான்

Photo Credit: Maxime Aliaga.

கோமாளித் தவளை:

அமேசான் பகுதியில் கோமாளித் தவளைகள் அதிகமாக இருக்கின்றன. அவற்றின் உடல் நிறம் பிரகாசமான வண்ணத்தில் இருப்பதால் அப்படியான பெயரைப் பெறுகின்றன. சமீபத்தில் பொலிவியா மற்றும் பெருவின் அமேசானிய மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கோமாளித் தவளைகள் பிற இனங்களைச் சேர்ந்தவையாகக் கருதப்பட்டன, ஆனால், ஆராய்ச்சியாளர்கள் அவற்றை டி.என்.ஏ பகுப்பாய்வு செய்ததன் பலனாய் புதிய தவளை வகையைக் கண்டறிந்தனர். இந்தத் தவளைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

கோமாளி தவளை

Photo Credit: Santiago R. Ron.

கடார் குழிபறிக்கும் தவளை:

இந்தத் தவளை இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருப்பதாகக் கருதப்பட்டது. உலகிலேயே குழிபறித்து நிலத்துக்கு அடியில் வாழும் ஒரே தவளை இனம் இது மட்டுமே என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் இவ்வகை தவளைகளை ஆராய்ச்சிகளுக்காக தேடிவந்தனர். இந்தத் தவளையானது மண்ணுக்குள்ளேயே இருப்பதால் நிலப்பகுதிக்கு அடிக்கடி வருவதில்லை. அதனால், இந்தத் தவளைகுறித்த தகவல்கள் கண்டறியப்படாமல் இருந்தது. 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து தவளை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, டெல்லி ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வுசெய்து கண்டறிந்தனர். கேரளாவின் வளச்சல் காட்டுப் பகுதியில் இந்தத் தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளக் காடுகளில் வாழும் கடார் இன மக்களின் பெயரை இந்தத் தவளைக்குச் சூட்டியிருக்கிறார்கள்.

புதிய உயிரினங்கள்

Photo Credit: SD Biju.

ஹூலோக் ஜிப்பான் குரங்கு

ஏப் இனத்தைச் சேர்ந்த ஜிப்பான் என்பது ஒரு வகை குரங்கு. தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய ஜிப்பான் வடகிழக்கு சீனாவுக்கும் வடக்கு மியான்மருக்கும் இடையிலான எல்லைகளை அகற்றும் காளியாகோங் மலைகளின் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜிப்பான்கள் தரையிலிருந்து மேலெழும்பி சுமார் 3 மீட்டர் உயரம் தாவிக்குதிக்கும் திறன் பெற்றவை.

ஜிப்பான்

Photo Credit: Fan Pengfei.

யோதா வவ்வால்:

பப்புவா நியூ கினியாவின் மழைக்காடுகளில் புதிய வௌவால் இனமொன்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்டார் வார் திரைப்படத்தில் வருகிற யோதாவைப் போன்று உருவ அமைப்பில் இருப்பதால் புதிய வௌவாலை "யோதா பேட்" என்று குறிப்பிடுகிறார்கள். அமெரிக்காவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவில் கௌரவ ஆராய்ச்சி மாணவரான நான்சி இர்வின் ஹமாமாஸ் குழாய்-மூடிய வௌவால்” என்ற பெயரை தேர்வு செய்தார், "ஹமாமாஸ்" என்கிற சொல்லுக்கு அந்த நாட்டில் மகிழ்ச்சி என்று பொருள்.

யோதா பேட் வவ்வால்

Photo Credit: Dr. Deb Wright.

பறக்கும் அணில்:

வட அமெரிக்காவில் மூன்றாவது பறக்கும் அணில் இனத்தை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். ஹம்போல்ட்டின் பறக்கும் அணில்  பெயரிடப்பட்டுள்ளது. கொலம்பியா  பசிபிக் கடலோரப் பகுதியிலிருந்து தெற்கு கலிஃபோர்னியாவின் மலைகள் வரை இவ்வகை அணில்கள் காணப்படுகின்றன. இவை ரகசிய இனங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் அணில்

                                                                                                              Photo Credit: Nick Kerhoulas.
 


டிரெண்டிங் @ விகடன்