சினிமா
Published:Updated:

கிசுகிசு கீதா பத்தி ஒரு கிசுகிசு!

இர.ப்ரீத்தி, க.நாகப்பன்படங்கள் : உசேன்

##~##

குரல் மட்டுமே பரிச்சியமான ரேடியோ ஜாக்கிகளும் முகம் தெரியும் வீடியோ ஜாக்கிகளும் சந்தித்தால்... இந்த ஒன் லைன்தான் நம் நோக்கம்!

 சத்யம் சினிமாஸின் 'இட்லி தோசா’ ரெஸ்டாரன்ட். ஆர்.ஜே. படைக்காக 'ரேடியோ சிட்டி’யில் இருந்து விது மற்றும் ஷக்தி, 'ரேடியோ மிர்ச்சி’யில் இருந்து மா.கா.பா.ஆனந்த் மற்றும் அஞ்சனா, 'சூரியன் எஃப்.எம்’-ல் இருந்து சங்கீதா மற்றும் நவலட்சுமி களம் இறங்கினார்கள். வீடியோ ஜாக்கிகள் படைக்காக 'சன் மியூஸிக்’ ஆடம்ஸ், 'இசையருவி’ முரளி மற்றும் நிஷா, 'ஆதித்யா’ ஆதவன் மற்றும் 'ப்ளேடு’ ஷங்கர் ஆஜர். இனி ஓவர் டு 'இட்லி தோசா’...

'' 'கிசுகிசு கீதா’வில் நிகழ்ச்சியில் மாமி வாய்ஸில் பேசுற சங்கீதா, பாட்டியா இருப்பாங்கன்னு நினைச்சா, இவ்வளவு சின்னப் பொண்ணா இருக்காங்களே'' என்று ஆச்சர்யத்தோடு ஆரம்பித்தார் முரளி. ''எல்லோரும் அதான் சொல்றாங்க. அதான் என் ப்ளஸ்'' என்று வெட்கப் புன்னகை சிந்தினார் சங்கீதா. ''முரளி... அது பாட்டிதான். கமல் சார்கிட்ட மேக்கப் பிராக்டீஸ் எடுத்து யூத் கணக்கா நடிக்கிறாங்க... நம்பிராதீங்க'' என்று ஷங்கர் சொல்ல, ''நைட் வீட்டுக்கு வருவேல்ல... தோசையைக் கருகலா ஊத்திக் கொடுக்குறேன்'' என்று செல்லக் கோபம் காட்டினார் மிஸஸ் சங்கீதா ஷங்கர்.

கிசுகிசு கீதா பத்தி ஒரு கிசுகிசு!

''நான்கூட 'சினிமா சினிமா’ புரொகிராம் பண்ற விதுவை குட்டிப் பொண்ணுன்னு நினைச்சேன். ஆனா, நேர்ல பார்த்தாதான் தெரியுது... அது ஒரு குட்டி பன்னுனு. என்ன... எங்க ரெண்டு பேருக்கும் உயரம்தான் செட் ஆகலை'' என்று ஆதவன் எதற்கோ அடிபோட, ''அண்ணா... வீட்டுல அண்ணி நல்லா இருக்காங்களா'' என்று விது கவுன்டர் கொடுக்க, ''இன்னிக்கு சென்னையில செம டிராஃபிக்ல...'' என்று டாபிக் மாற்றினார் ஆதவன்.  

'' 'ஒன் லைன் திரு’ புரொகிராம்ல ஆர்.ஜே-வா இருந்து 'சினிமா காரம் காஃபி’ நிகழ்ச்சிக்கு வி.ஜே. ஆன பின்னாடி, ஆனந்த் முகத்தில் ஒளி வட்டம் தெரியுதே'' என்று ஷக்தி யோசிக்க, '' 'ஒன் லைன்’ திரு இப்போலாம் முகத்துக்கு மூணு, நாலு லைன் பவுடர் கோட்டிங் அடிக்குறான். ரிஃப்ளக்ஷன் ஆகுறதுல லைட் பாய்ஸே லைட்டா மிரண்டு போய்தான் நிக்கிறாங்களாம்'' என்று ஆடம்ஸ் வாரிவிட, கை தட்டிச் சிரித்தார்கள் அத்தனை பேரும்.

கிசுகிசு கீதா பத்தி ஒரு கிசுகிசு!

''இதெல்லாம் ஒரு அசிங்கமா? ஒரு நாள் ராகுல் டிராவிட் ரிடையர்மென்ட்க்கு பின்னாடி டாஸ்மாக் பக்கத்துல பெட்டிக் கடை வைக்கலாம்னு விளையாட்டுக்குச் சொல்லிட்டேன். அவரோட ரசிகை ஒருத்தங்க கால் பண்ணிப் பிரிச்சு எடுத்துட்டாங்க. கால் கட் பண்ணினாலும் ஆபீஸ் லேண்ட் லைன்ல அட்டாக்.  ஒருவழியா கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்தினேன்'' என ஆனந்த் சொல்ல, ''என்னது... ராகுலைத் தப்பாப் பேசுனீங்களா'' என்று நிஷா, நவலட்சுமி, சங்கீதா மூவரும் கோரஸாகக் குமுறினார்கள். ''ஆஹா! இங்கேயும் ராகுல் ரசிகைகளா'' என்று நிஜமாகவே மிரண்டு, கையெடுத்துக் கும்பிட்டார் ஆனந்த்.

'கோலி சோடா’ அஞ்சனாவைப் பார்த்த 'ப்ளேடு’ ஷங்கர், ''டயட்னு ஒரு விஷயம் இருக்கு தெரியுமா அஞ்சனா... அதை ஃபாலோ பண்ணினா வருஷம் முழுக்க என்னை மாதிரி இளமையா இருக்கலாம்'' என்று செல்ஃப் பில்டப் கொடுக்க, ''நீ ஓவராப் பேசுறதால, சங்கீதா அவங்க அம்மா வீட்டுக்குக் கோவிச்சுக்கிட்டு போகப் போறாங்களாமே'' என்று அதிரி புதிரி திரி கிள்ளினார் அஞ்சனா. ''நான் நினைச்சேன். நீ சொல்லிட்டே'' என்று சங்கீதா வழிமொழிய, ஷங்கர் முகத்தில் கலவர நிலவரம். ''மச்சி... அவனுக்காவது அவன் சம்சாரம், அம்மா வீட்டுக்குப் போறாங்க, ஆனா உன் வீட்ல...'' என்று ஆனந்த் சொல்ல, ''மச்சி பப்ளிக்... பப்ளிக். நைட்டு அமெதிஸ்ட்ல ட்ரீட் தர்றேன்டா'' என்று ஆனந்தை அப்படியே அமுக்கினார் ஆதவன்.

கிசுகிசு கீதா பத்தி ஒரு கிசுகிசு!

''கிசுகிசு கீதா நவலட்சுமியை காம்பியரிங் பண்ணச் சொல்லி, அல் ஜசீரா டி.வி. வரைக் கும் அனத்திக் கூப்பிட்டாங்க. ஆனா, வி.ஜே. ஆகணும்னா குளிக்கணுமேங்கிற ஒரே காரணத்துக்காக, நவ லட்சுமி எல்லாத்துக்கும் 'நோ’ சொல்லிட்டுத் தனி மரமா வாழ்ந்துட்டு இருக்கா'' என்று ஆனந்த் சிவாஜி பாடி லாங்குவேஜில் சொல்ல, எழுந்து நின்று டேபிளில் கை ஊன்றினார் நவலட்சுமி.

''என் பேர் நவலட்சுமி. எனக்கு ஏரியாவில் இன்னொரு பேரும் இருக்கு. ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் பொண்ணு'' என்று பாட்ஷா ஸ்டைலில் பதில் சொல்ல, ''அப்போ நீ பேச வரலை. ராஜ்குமார் அங்கிளை விசாரிச்சேன்னு சொல்லு'' என்று கூட்டத்துக்குள் பதுங்கினார் ஆனந்த். ''ஓ... நவிக்கு கிசுகிசு பேச மட்டும்தான் தெரியும்னு நினைச்சேன். மார்ஷியல் ஆர்ட்ஸும் தெரியுமா? கிசுகிசு கீதாபத்தியே ஒரு கிசுகிசுப்பா'' என்று நிஷா, நவலட்சுமியின் ஆர்ம்ஸ் தொட்டுப் பார்த்தார்.

''கிசுகிசுனு ஈஸியா சொல்றீங்க நிஷா. ஆனா, நாங்க எத்தனை நடிகர், நடிகைகிட்ட திட்டு வாங்கி இருக்கோம் தெரியுமா? எல்லாம் சென்சார்டு'' என்று ரகசியம் உடைத்தார் சங்கீதா. ''வி.ஜே-வைவிட ஆர்.ஜே-வா இருக்கிறதுல நிறைய ப்ளஸ். ஷார்ட்ஸ், டி-ஷர்ட் போட்டு வந்துகூட புரொகிராம் பண்ணலாம்'' என்று நிஷா சொல்ல, ''நீங்க கொஞ்சமா பேசிட்டு விட்டுருவீங்க. நாங்க நிறையப் பேசணும். அதுலதான் ரிஸ்க். ஒரு தடவை ஒரு நேயர்கிட்டே 'ஏன் லூஸு மாதிரிப் பேசுறீங்க’னு ஒரு ஜாலிக்குச் சொல்லிட்டேன். அவர் திரும்ப கால் பண்ணி, 'என்னை ஏன் அப்படிச் சொன்னீங்க? என் சொந்தக்காரங்க கேட்டா, என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க’னு ரொம்ம்ம்ம்ப வருத்தப்பட்டார். அதுல இருந்து வார்த்தையைப் பார்த்துதான் விடுவேன்'' என்று தன் தகராறு வரலாறு சொன்னார் அஞ்சனா.

கிசுகிசு கீதா பத்தி ஒரு கிசுகிசு!

''நேர்ல கலகலனு பேசுற ஷங்கர் ஏன் புரொகிராம் அப்போ உம்முனு இருக்குறீங்க'' என்று ஷக்தி டவுட் கேட்க, ''எனக்குக் கடி ஜோக் பிடிக்காது. ஆர்.ஜே-வா இருக்கும்போது 'ப்ளேடு’ புரொகிராமுக்குச் சிரிக்க மாட்டேன். அதே ரியாக்ஷன் வி.ஜே. ஆன பின்னாடியும் அப்படியே தொடருது. என்னைச் சிரிக்கச் சொல்லி, சிரிக்கச் சொல்லியே கேமராமேன் டயர்ட் ஆகிட்டாரு'' என்று ஷங்கர் சொல்லி முடிக்க, ஆர்டர் கொடுத்த அயிட்டங்கள் வந்து சேர்ந்தன.

எல்லாவற்றையும் காலி செய்தவர்கள், ''பேரர், பில்லை இந்த கோட் போட்ட சார்கிட்ட வாங்கிக்கோங்க. சார் ரொம்ப நல்லவர்'' என்று ஆடம்ஸை எக்குத்தப்பாக மாட்டிவிட்டார்கள். ''ஏய், இது வாடகை கோட்... இதுல பாக்கெட் இல்லைனு பர்ஸ் எடுத்துட்டு வரலை. ஆடம்ஸ் பாவம்'' என்று அவர் அலற, வெடித்துச் சிரிக்கிறார்கள் அத்தனை பேரும்!