வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (03/01/2018)

கடைசி தொடர்பு:20:37 (03/01/2018)

மனிதர்களின் அதிகபட்ச ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியுமா? - பதில் சொல்லும் ஆராய்ச்சி

பூமியில் வாழும் பலருக்கும் மரணமின்றி சிரஞ்சீவியாக இருக்க ஆசைதான். ஆனால், பூமியில் இருக்கும் எல்லா உயிரினங்களும் மரணத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அறிவியலும், மருத்துவமும் பன்மடங்கு வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும்கூட, யாராலும் மரணத்தை தடுக்கமுடியாது. தள்ளிப்போட வேண்டுமானால் முடியும். அதேபோல யாருடைய ஆயுட்காலமும் இவ்வளவுதான் என நம்மால் வரையறுக்க முடியாது. ஒருவர் அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் வாழ்வார் என்று வேண்டுமானால் நம்மால் கணிக்கமுடியுமே தவிர, எப்போது மரணமடைவார் என்பதை முன்கூட்டியே கணிக்கமுடியாது. சரி... ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் என்பது எவ்வளவு? 'நூறு ஆயுசு' என இன்றும் வாழ்த்துகிறார்களே... அதெல்லாம் நிஜத்தில் சாத்தியம்தானா? இந்தக் கேள்விகளுக்கு தங்களின் ஆராய்ச்சியின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார்கள் ஆல்பிரட் ஐன்ஸ்டீன் மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.

மனிதனின் ஆயுட்காலம்

மனிதர்களின் ஆயுட்காலம் பற்றி ஆய்வு மேற்கொண்ட இவர்கள், அதன் முடிவுகளை பத்திரிகை ஒன்றில் வெளியிட்டனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் சில முக்கியமான கருத்துகள் இதோ...

“மனிதர்கள் அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் வரை வாழமுடியுமோ, அத்தனை ஆண்டுகள் வரைக்கும் பழங்கால மனிதர்கள் வாழ்ந்துவிட்டார்கள். அதைவிடவும் அதிக வருடங்களுக்கு மனிதர்களால் வாழமுடியாது. வாழ்நாளை அதற்கு மேல் நீட்டிக்கவும் முடியாது. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரை விடவும், இந்த நூற்றாண்டில் வாழ்பவரின் வாழ்நாள் அதிகம். அதற்கு காரணமான அம்சங்கள் உணவு, சுற்றுச்சூழல், பொது சுகாதாரம் போன்றவையே. 1990-ல் பிறந்த அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலம் 47 வருடங்கள். இத்துடன் ஒப்பிட்டால் இன்று அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் அதிகம். தற்போது பிறக்கும் குழந்தைகளின் சராசரி வயது 79. இதற்காக அறிவியல் மற்றும் மருத்துவத்துக்கே நாம் நன்றி சொல்லவேண்டும். இந்தியாவில் 1960-ம் ஆண்டு பிறந்தவர்களின் சராசரி ஆயுட்காலம் 40 வயது. இது இன்று 68 ஆக உயர்ந்துள்ளது.” என்று விஞ்ஞானிகள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

இதற்காக 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இறப்பு மற்றும் மக்கள்தொகை சார்ந்த தகவல்கள் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. “1900-ம் வருடத்தில் இருந்து தற்போது வரைக்கும், இந்த 40 நாடுகளிலும் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. இறப்பவர்களின் சராசரி வயது 70 வயதுக்கு மேல் இருக்கிறது. ஆய்வு நடத்தப்பட்ட இந்த காலகட்டத்தில் சராசரி வயதை அடையாமல் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது” எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மருத்துவ ஆராய்ச்சி

இந்த ஆய்வின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம், Supercentenarians பற்றிய தகவல்கள். 110 வயதுக்கும் மேல் வாழ்பவர்களைத்தான் Supercentenarians என அழைப்பார்கள். இவர்கள்குறித்தும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் UK ஆகிய நான்கு நாடுகளின் தகவல்களை இதற்காக எடுத்துக்கொண்டனர். 1968 முதல் 2006-ம் ஆண்டுக்கு இடையே வாழ்ந்த Supercentenarian-களை பட்டியலிட்டனர். இதிலிருந்து தெரியவந்த விஷயம் என்னவென்றால் 1970-ல் இருந்து 1990-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் Supercentenarian-களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதுதான்.

1997-ம் ஆண்டில் 122 ஆண்டுகள் வரை வாழ்ந்த பிரெஞ்ச் பெண்ணான ஜீன் கால்மென்ட் என்பவர்தான் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிறார். நோய்த்தொற்றுகள் மற்றும் உடல்நலக்குறைபாடுகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதன்மூலம் முதியவர்களின் வாழ்நாளும் சராசரி வாழ்நாளை விடவும் அதிகமாகும். குறிப்பாக, வயதாகும் காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்க, தீர்வுகளைக் கண்டுபிடித்தால் முதியவர்களின் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மனிதர்களின் ஆயுட்காலத்தை சில ஆண்டுகள் வரைக்கும் மருத்துவத்தின்மூலம் நீட்டிக்கமுடியும். அதாவது, 100 வயதில் இருக்கும் ஒருவருக்கு தகுந்த சிகிச்சைகள் அளிப்பதன்மூலம் மேலும் சில ஆண்டுகளுக்கு அவரை வாழவைக்கமுடியும். ஆனால், அவருடைய உடலின் அதிகபட்ச ஆயுட்காலம் முடிந்துவிட்டால், அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது. மனிதர்களின் அதிகபட்ச ஆயுட்காலத்தை மருத்துவத்தின் மூலமும் நீட்டிக்கமுடியாது. இதுதான் அந்த அறிக்கையின் ஒட்டுமொத்த சாராம்சம்.


டிரெண்டிங் @ விகடன்