ஒரு நல்ல மருத்துவருக்கு அடிப்படை எது? நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory  | What makes a good doctor?

வெளியிடப்பட்ட நேரம்: 07:37 (04/01/2018)

கடைசி தொடர்பு:12:40 (04/01/2018)

ஒரு நல்ல மருத்துவருக்கு அடிப்படை எது? நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory 

தன்னம்பிக்கை கதை

டல் அமைதியாக இருக்கும்போது யார் வேண்டுமானாலும் சுக்கானைப் பிடிக்கலாம்’ - இப்படிச் சொன்னவர், பப்ளிலியுஸ் சைரஸ் (Publilius Syrus)... கி.மு.85-43 இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அறிஞர், எழுத்தாளர். அமைதி என்பது கடலில் கப்பலைச் செலுத்துவதற்கு மட்டுமல்ல, சீரான வாழ்க்கைக்கும் அவசியம். எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையோடு இருக்கவேண்டிய, அமைதி காக்கவேண்டியதன் அவசியத்தை திருவள்ளுவர் `பொறையுடைமை’ அதிகாரத்தில் அழுத்தமாக விவரிக்கிறார். அமைதியிழத்தல், பிறருக்கல்ல, நமக்கே பல நேரங்களில் தர்மசங்கடங்களை ஏற்படுத்திவிடும்... எதிராளியை துச்சமாக நினைக்கவைக்கும், ஆத்திரப்படவைக்கும், கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளைச் சிதறச் செய்துவிடும். அந்த நிகழ்வைத் திரும்ப நினைத்துப் பார்க்கும்போது நம்மையே வெட்கப்படச் செய்யும். எந்த வேலையும் எளிதானதல்ல. ஒவ்வொன்றும் அதனதன் தன்மைக்கேற்பக் கடினமானவையே! அவற்றில் மருத்துவப் பணிக்கு முக்கியமான இடம் உண்டு. பரபரப்பான பணி... ஆனால், பதற்றம் கூடாது. இதுதான் ஒரு நல்ல மருத்துவருக்கு அடிப்படை. மிக இக்கட்டான சூழ்நிலையில் அமைதியை இழந்த ஒரு மனிதர், அமைதி காத்த ஒரு மருத்துவர் கதை அதற்கு நல்ல உதாரணம்! 

டெதஸ்கோப்

அது லண்டனில் பெயர் பெற்ற ஒரு மருத்துவமனை. அந்த டாக்டர் மருத்துவமனை பார்க்கிங் பகுதியில் தன் காரை நிறுத்திவிட்டு அவசரமாக இறங்கித் தன் அறைக்குப் போனார். ஒரு சிறுவனின் நிலை மிக மோசமாக இருக்கிறது, அவர் உடனே வந்து ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அவருக்குத் தகவல் வந்திருந்தது. அறைக்குப் போனவர், தன் உடைகளை மாற்றிக்கொண்டார். நேராக ஆபரேஷன் தியேட்டருக்குப் போனார். தியேட்டர் வாசலில், உள்ளே ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் தந்தை பரபரப்போடு காத்துக்கொண்டிருந்தார். அவர் டாக்டரைப் பார்த்ததும், அருகே விரைந்து வந்தார். “என்ன டாக்டர் இவ்வளவு லேட்டா வர்றீங்க? என் பையன் எவ்வளவு பெரிய ஆபத்தான நிலைமையில இருக்கான்னு உங்களுக்குத் தெரியாது? உங்களுக்குக் கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?’’ என்று படபடவென்று பொரிந்து தள்ளினார். 

டாக்டர் லேசாக புன்முறுவலை வரவழைத்தபடி, “என்னை மன்னிச்சிக்கங்க. நான் வெளியில இருந்தேன். தகவல் கிடைச்சதும், என்னால முடிஞ்ச அளவுக்கு வேகமாக வந்தேன். அமைதியா இருங்க. என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பா உங்க மகனுக்கு சிகிச்சை கொடுக்குறேன்.’’ 

“என்னது... அமைதியா இருக்கணுமா? உங்க மகன் இதே மாதிரி ஆபரேஷன் தியேட்டர்ல இருந்தா, நீங்க அமைதியா இருப்பீங்களா? உங்க மகன் செத்துப்போயிட்டானு வைங்க. என்ன செய்வீங்க?’’ 

மருத்துவர்கள்

டாக்டர் மறுபடியும் மென்மையாகச் சிரித்தார். “இதுக்கு என்கிட்ட பதில் இல்லை. ஆனா, பைபிள்ள இருக்குற ஒரு வசனம் நினைவுக்கு வருது. ‘மண்ணிலிருந்து வந்தேன், மண்ணுக்கே திரும்புவேன். இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக!’ அது மாதிரி, டாக்டர்களால யாரோட ஆயுளையும் அதிகரிக்க முடியாது. போங்க.. உங்க மகனுக்காக நல்லா பிரார்த்தனை பண்ணுங்க. நல்லதே நடக்கும்.’’ 

“நாம சம்பந்தப்படாத இடத்துல அட்வைஸ் பண்றது ரொம்ப ஈஸி.” முணுமுணுத்தார் அந்தச் சிறுவனின் தந்தை. அதைக் கண்டுகொள்ளாமல் டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தார். 

சில மணி நேரங்கள் ஆகின. வெளியே சிறுவனின் தந்தை பொறுமையில்லாமல், தவிப்போடு என்ன நடக்குமோ என்று காத்திருந்தார். டாக்டர் வெளியே வந்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. “ஆண்டவர் அருளால உங்க மகன் பிழைச்சுக்கிட்டான். கடவுளுக்கு நன்றி சொல்லுங்க” என்றார். பிறகு, அந்தச் சிறுவனின் தந்தை சொல்லும் பதிலைக்கூடக் கேட்க நேரம் இல்லாததுபோல, மருத்துவமனை காரிடாரில் வேகமாக நடக்க ஆரம்பித்தார். கூடவே ஒன்றும் சொன்னார்... “உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்துச்சுன்னா, என் நர்ஸ்கிட்ட கேளுங்க.’’ 

‘இந்த டாக்டருக்கு என்ன ஒரு திமிர்? ஒரு நிமிஷம் நின்னு பதில் சொல்லிட்டுப் போனாத்தான் என்னவாம்?’ என்று நினைத்தார் சிறுவனின் தந்தை. பின்னாலேயே வந்த நர்ஸ் சொன்னார்... “டாக்டர் பதிலே சொல்லாமப் போறாரேனு பார்க்குறீங்களா? அது ஒண்ணுமில்லை. நேத்து நடந்த ஒரு ஆக்ஸிடென்ட்ல அவர் மகன் இறந்துட்டான். இன்னிக்கி உங்க மகனுக்கு ஆபரேஷன் பண்ணணும்னு நாங்க கூப்பிட்டப்போகூட, அவரு கல்லறையில, அவர் மகனை அடக்கம் செய்யற காரியத்துல இருந்தார்...” 

அதற்கு மேல் நர்ஸ் சொன்ன எதுவும் அவர் காதில் விழவில்லை. அப்படியே நாற்காலியில் சரிந்து அமர்ந்துவிட்டார். அவருக்கு டாக்டர் சொன்ன பைபிள் வசனம் நினைவுக்கு வந்தது. 

***

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்