நாலடி கயிற்றில் சுருங்கிய வாழ்க்கை... உலகின் கடைசி நடன கரடிகளின் கதை! | Hard Life of worlds last Dancing Bears

வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (05/01/2018)

கடைசி தொடர்பு:11:13 (05/01/2018)

நாலடி கயிற்றில் சுருங்கிய வாழ்க்கை... உலகின் கடைசி நடன கரடிகளின் கதை!

னித இனம், குரங்கில் ஆரம்பித்து யானை வரை எல்லா விலங்குகளையுமே பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்குக் கொண்டு வந்து காசு பார்க்க ஆரம்பித்துவிட்டது. விலங்குகளை வைத்து வித்தை காட்டுவது உலகம் முழுவதுமே நடந்துகொண்டிருக்கிறது.  விலங்குகள்தான் வேறு. ஆனால், வித்தை ஒன்றுதான். இந்தக் கட்டுரை உலகின் நடனக் கரடிகள் பற்றியது. 

மொகமட் சல்மான், முகமத் மொன்டஸ் என்கிற இரு நபர்களும் நேபாளத்தில் வசிக்கிறார்கள். நேபாளத்தின் கிராமப்புற பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளில் நாடோடியாக வாழ்க்கை நடத்துகிற இருவரும் இரண்டு சோம்பல் வகை கரடிகளை வளர்க்கிறார்கள்.19 வயது கரடி ரங்கீலா, 17 வயது கரடி ஸ்ரீதேவி. இந்த இரண்டு கரடிகளையும் மக்கள் கூடுகிற இடங்களில் நடனமாட வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். நேபாள நாட்டில் கரடியை வைத்து நடன நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்கிற தடை 1973-ம் ஆண்டிலிருந்து அமலில் இருக்கிறது. ஆனால், அதுகுறித்த எந்தக் கவலையும் இல்லாமல் கரடி நடனத்தை நடத்திவருகிறார்கள். தடைசெய்யப்பட்ட 44 ஆண்டுகள் கழித்தும் மிகத் தந்திரமாக அவர்கள் நடத்திவந்தனர். 
 

நடன கரடி

இதைப் பார்க்கிற உலக விலங்குகள் நல ஆர்வலர் நெயில் டி குருஸ் என்பவர் பல நாள்களாக அந்த இரண்டு கரடிகளையும்  மீட்கப் பல முயற்சிகளை எடுக்கிறார். ஆனால், அவர்களின் இருப்பிடம் மாறிக் கொண்டே இருப்பதால் அவற்றைக் கண்டுபிடிப்பதிலும் மீட்பதிலும் சிக்கல் நிலவுகிறது. பல மாதங்கள் கழித்து டிசம்பர் 23-ம் தேதி நேபாளின் தென்பகுதியில் உள்ள இர்பாரி நகரத்தில் கரடி நடனத்தை பார்க்கிற க்ரூஸ் நேபாள காவல்துறைக்கு ரகசிய தகவல் தெரிவிக்கிறார். நேபாள காவல்துறை கரடியை மீட்க அவசர ஆபரேஷன் ஒன்றை  ஆரம்பிக்கிறார்கள். திட்டமிட்டபடி அன்றைய இரவு சம்பந்தப்பட்ட இருவரையும் கண்டுபிடித்து கரடிகளோடு காவல்நிலையம் அழைத்து வருகிறார்கள். கரடிகள் மீட்கப்பட்டு பர்ஷா தேசிய பூங்காவுக்கு அனுப்பப்படுகிறது. அடுத்த முறை கரடியோடு பார்க்க நேர்ந்தால் தண்டனைகள் வேறு மாதிரியாக இருக்குமென எச்சரித்து மொகமட் சல்மான், முகமத் மொன்டஸ் இருவரையும் காவல்துறை விடுவிக்கிறது. கரடி நடனத்துக்கு எதிராக ஏன் இவ்வளவு தீவிர நடவடிக்கைகள் என நீங்கள் கேட்கலாம். ஆனால், கரடிகள் எப்படி நடனமாட பழக்கவைக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டால், அப்படி கேட்கமாட்டீர்கள்.

காடுகளில் இருக்கிற சோம்பல் இன தாய் கரடிகளைக் கொன்றுவிட்டு அவற்றிடமிருந்து கரடிக் குட்டிகளைக் கைப்பற்றி  வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். வீட்டுக்குக் கொண்டு வருகிற பெண் கரடிகளின் பற்களை முதலில் பிடுங்கி விடுகிறார்கள். அதுவே ஆண் கரடி குட்டிகளாக இருந்தால் அவற்றின் இனப்பெருக்க உறுப்பை வெட்டி விடுகிறார்கள். நெருப்பில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை, குட்டிக் கரடியின் மூக்குப் பகுதியில் வைத்துக் குத்துகிறார்கள். குத்திய பகுதி வழியாக ஒரு நான்கு அடி அளவுள்ள கயிற்றை உள்ளே செலுத்தி அதன் மூக்கு துவாரம் வழியாக வெளியே எடுக்கிறார்கள். பார்ப்பதற்குக் குதிரைக்கு இருக்கிற கடிவாளம் போலவே இருக்கும். பிறகு வாயைச் சேர்த்துக் கட்டி விடுகிறார்கள். ஆயுளுக்குமான ஒரு துரோகம் மனிதர்களிடமிருந்து கரடிக்கு அங்கிருந்துதான் தொடங்குகிறது.

கரடி ரங்கீலா

Photo credit: World Animal Protection

வாய் கட்டப்பட்டிருக்கிற கரடியைச் சிறு வயதிலிருந்தே நடனத்துக்குப் பழக்குகிறார்கள். அதன் மூக்கு கயிற்றை இழுக்கும்பொழுது கரடி வலியால்  துடிக்க ஆரம்பிக்கிறது. அதன் முகத்திலும் உடம்பிலும் கையிலிருந்த குச்சியை வைத்து அடிக்க ஆரம்பிக்கிறார்கள். வலி தாங்காமல் கரடி எழுந்து உடலைச் சிலுப்புகிறது. மீண்டும்  உடலில் அடி விழக்  கையையும் காலையும் ஆட்ட ஆரம்பிக்கிறது. அடி விழுவது நிற்கிறது. உடலைத் தூக்கி கையை ஆட்டினால் அடிவிழுவது இல்லை என்பதை உணர்கிற கரடி பின்னர் அடி விழும் பொழுதெல்லாம் உடலை மேலே தூக்கி கையையும் உடலையும்  ஆட்ட ஆரம்பிக்கிறது. கரடி ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் வேடிக்கை பொருளாக மாறுகிறது. கரடியின் நடனத்துக்கு பணம் கிடைக்கிறது. கரடியைச் சொந்தமாக்கிக் கொள்கிற மனிதர்கள் கரடியை அழைத்துக்கொண்டு நெடுஞ்சாலைகளில் நடந்தே அழைத்துச் செல்கிறார்கள்.  இதுவே வாழ்க்கையாக மாறிவிடுகிறது. இதைப் படிக்கிற நமக்கு, நடனம் என்பது வெறும் வார்த்தை. நேபாளத்தின் இருந்த அந்த இரண்டு கரடிகளுக்கும் உயிர்வதை. இதுதான் வாழ்க்கை இப்படியான வாழ்க்கையை அனுபவித்த கடைசி கரடிகள்  ரங்கீலாவும் ஸ்ரீதேவியும்தான். 


டிரெண்டிங் @ விகடன்