Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்பின் விலை 2 டாலர் 50 சென்ட் - நெகிழவைக்கும் சிறுவனின் கதை! #FeelGoodStory 

தன்னம்பிக்கை கதை

`ரக்கம்தான் ஞானம்’ என்று சொல்லியிருக்கிறார் ஆங்கிலக் கவிஞர் பிலிப் ஜேம்ஸ் பெய்லி (Philip James Bailey). மிகச் சாதாரணமான இந்த இரண்டெழுத்து வாசகத்தின் பொருள் மிக ஆழமானது. `போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தர், இந்த உலகின் மீது, மனிதர்கள் மீது இரக்கப்படத்தான் கற்றுக்கொண்டாரா?’ என்று கேட்டால், அப்படியும் வைத்துக்கொள்ளலாம். நாடு, மொழி, இனம், மதம் எல்லாவற்றையும் கடந்து மற்றவரை நேசிப்பது ஞானம்தானே! தன்னைப்போல் பிறரை நினைக்கிற மனோபாவம் அறிவையெல்லாம் மிஞ்சிய ஞானமே! இதுதான் அன்பு செலுத்துவதற்கு அடிப்படை. தனக்கு ஏற்பட்ட இழப்பின் வலியை உணர்ந்த ஒருவரால்தான், அதே இக்கட்டு இன்னொருவருக்கு ஏற்படும்போது அதன் தீவிரத்தை அறிய முடியும். அந்தச் சமயத்தில் பாதிக்கப்பட்டவருக்குக் கைகொடுப்பவர் கிட்டத்தட்ட கடவுள்தான். இந்த அனுபவ உண்மையைத்தான் இந்தக் கதை எடுத்துச் சொல்கிறது... 

நாய்குட்டிகள்

அமெரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய நகரம் அது. பரபரப்பாக வியாபாரம் நடந்துகொண்டிருக்கும் கடைவீதி... ஒருநாள் அங்கிருக்கும் கடையொன்றின் கதவில் ஒரு போர்டு தொங்கியது. அதில் இப்படி எழுதியிருந்தது...  `இங்கு நாய்க்குட்டிகள் விலைக்குக் கிடைக்கும்...’ 

செல்லப்பிராணிகளை வளர்க்க ஆசைப்படாத குழந்தைகள் உண்டா? அந்த போர்டை மாட்டிய கொஞ்ச நேரத்திலேயே அந்தப் பக்கமாக வந்த சிறுவன் ஒருவன் அதைப் பார்த்துவிட்டான். கடைக்குள் நுழைந்தான். கடைக்காரர் சிறுவனை சிரித்து வரவேற்றார். 

``நாய்க்குட்டிகள் விலைக்குக் கிடைக்கும்கிற போர்டைப் பார்த்தேன். என்ன விலையிருக்கும்னு நான் தெரிஞ்சுக்கலாமா?’’ 

``என்ன 30-லருந்து 50 டாலர் வரைக்கும் இருக்கும். அது நீ வாங்குற நாய்க்குட்டியைப் பொறுத்தது தம்பி...’’ என்றார் கடைக்காரர். 

சிறுவன் தன் பாக்கெட்டுக்குள் கையைவிட்டான். அதிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்தான். என்கிட்ட 2 டாலர் 50 சென்ட் இருக்கு. நான் அந்த நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?’’ 

``நிச்சயமா’’ என்ற கடைக்காரர், கடையின் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார். சில நிமிடங்களில் ஒரு பெண் முன்னால் வர, அவருக்குப் பின்னால் ஐந்து நாய்க்குட்டிகள் நடந்துவந்தன. அத்தனையும் கொள்ளை அழகு. புஸுபுஸுவென்ற முடியுடன், அழகான காதுகள், மிரளும் குட்டிக் கண்கள், சின்னதாக வால்... எனத் தூக்கிக் கொஞ்ச வேண்டும் போலத் தோன்றும் தோற்றம். அந்த நாய்க்குட்டிகளில் கடைசியாக வந்தது மிக நிதானமாக, மெதுவாக, நொண்டுவது மாதிரி காலை வைத்துக்கொண்டு நடந்துவந்தது. 

அந்தக் குட்டிப் பையன், கடைசியாக வந்த நாய்க்குட்டியை நோக்கித் தன் விரலை நீட்டினான். ``அந்த நாய்க்குட்டிக்கு என்ன ஆச்சு?’’ என்று கேட்டான். 

சிறுவனின் நாய்குட்டி

``அந்த நாய்க்குட்டிக்கு இடுப்புல இருக்குற ஒரு மூட்டு பிறக்கும்போதே இல்லை. ஒரு டாக்டர் செக் பண்ணிட்டு சொன்னதுக்கு அப்புறம்தான் எங்களுக்கு அது தெரிஞ்சுது. அதனாலதான் இப்படித் தாங்கித் தாங்கி நடக்குது. எப்பவுமே இதால வேகமாக மற்ற நாய்க்குட்டிங்க மாதிரி நடக்க முடியாது.’’ 

சிறுவனின் முகம் ஒருகணம் வருத்தத்தில் சுருங்கியது. ``எனக்கு இந்த நாய்க்குட்டி விலைக்கு வேணும்...’’ 

``இல்லை தம்பி. இதை விலைக்கு விக்கிறதா இல்லை. உனக்கு வேணும்னா எடுத்துட்டுப்போ. பணம் எதுவும் தர வேணாம்.’’ 

சிறுவன் முகம் இதைக் கேட்டு வாடிப்போனது. ``இதை நீங்க இலவசமா எனக்குத் தர வேணாம். மத்த நாய்க்குட்டிங்களைவிட இதுவும் எதுலயும் குறைஞ்சதில்லை. நாய்க்குட்டிகளுக்குப் பொதுவா என்ன விலை வைப்பீங்களோ, அதே மாதிரி இதுக்கும் ஒரு தொகையைச் சொல்லுங்க. இப்போ என்கிட்ட இருக்குற 2 டாலர் 50 சென்ட் பணத்தைக் குடுத்துடுறேன். அப்புறம் மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா மீதப் பணத்தையும் குடுத்துடுறேன்.’’ 

``இந்த நாய்க்குட்டியை விலை குடுத்து நீ வாங்க வேணாம் தம்பி. மத்த குட்டிகளை மாதிரி, இந்தக் குட்டியால ஓட முடியாது, குதிக்க முடியாது, உன்னோட விளையாட முடியாது.’’ 

சிறுவன் `ஒரு நிமிடம்’ என்று கடைக்காரரிடம் சைகை காட்டினான். பிறகு குனிந்து, தன் பேன்ட்டின் இடதுகால் பகுதியை மேலே சுருட்டிவிட்டான். முழங்காலுக்குக் கீழே கால் இருக்கவேண்டிய இடத்தில் ஓர் இரும்புப் பிடிமானம் பொருத்தப்பட்டிருந்தது. ``பார்த்தீங்கல்ல என் காலை... என்னாலயும் ஓட முடியாது, குதிக்க முடியாது. அதனாலதான் இந்தக் குட்டியோட நிலைமையைப் புரிஞ்சுக்கிட்ட ஒரு ஆளு இதுக்கு வேணும்னு எனக்குத் தோணுது. இப்பவாவது விலைக்குக் கொடுப்பீங்களா?’’ 

மறு வார்த்தை பேசாமல், கடைக்காரர் அந்தச் சிறுவனிடம் இருந்து 2 டாலர் 50 சென்ட் பணத்தை வாங்கிக்கொண்டார்.

***

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ