வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (05/01/2018)

கடைசி தொடர்பு:20:03 (05/01/2018)

‘விஷயத்தை விஷுவல் மூலம் எளிமையாகச் சொல்வதே மினிமலிசம்!’ - சந்தோஷ் நாராயணன்

பல நூறு பக்க நாவல்கள், கருத்தாழமிக்கக் கட்டுரைத் தொகுப்புகள் என எல்லா வகையான நூல்களும் கவனம் பெறுவதற்கு அட்டைப்படமும் முக்கியமான ஒரு காரணம். ஆரம்ப காலகட்டத்தில் எழுத்தாளர்களின் பெயர்களையே அட்டைப்படம் தாங்கிவந்தது. அதன் பிறகு எழுத்தாளர்களின் புகைப்படம், கதையோடு தொடர்புடைய வேறு புகைப்படங்கள் என அட்டைப்படங்கள் பல்வேறு பரிமாணங்களை அடைந்தன. தற்போதய அட்டைப்படங்கள், படைப்புக்கு இணையான ரசனையுடன் வரத் தொடங்கிவிட்டன. கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள் என ஒவ்வொரு வகை நூலுக்கும் தனித்தன்மையுடன் அட்டைப்படங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சந்தோஷ் நாராயணன், அப்படியான தனித்துவமிக்க வடிவமைப்பாளர்.

கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு நூல்கள் என அனைத்துக்கும் அட்டகாசமான வடிவமைப்பைக் கொடுக்கும் `மினிமலிச' இளைஞன். இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரவிருக்கும் புத்தகங்களில் கணிசமான புத்தகங்களின் அட்டைப்படங்கள் இவரின் கைவண்ணத்திலேயே மிளிரவிருக்கின்றன. லோகோ டிசைன், வித்தியாசமான ஓவியங்கள் என அசத்தும் அவருடன் ஒரு `மினிமலிச' உரையாடல்.

சந்தோஷ் நாராயணன்

“புத்தக வடிவமைப்பின் மீதான ஆர்வம் எப்படி வந்தது?”

“அடிப்படையில் எனக்கு வாசிப்பில் அதிக ஆர்வம் உண்டு. ஓவியக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு விளம்பரத் துறைக்குச் செல்லும் முன்னரே `காலச்சுவடு', `உயிர்மை' போன்ற பதிப்பகங்களுக்குப் புத்தக அட்டைகள் வடிவமைக்கத் தொடங்கினேன். பல பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்தை ஒரே பக்கத்தில் (அட்டையில்) சிறியதாகச் சொல்ல முயல்வது சவாலான அதேசமயம் ஜாலியான விஷயம். பிறகு, ஆதிமூலம், மருது, பாஸ்கரன் போன்ற முன்னோடி ஓவியர்களின் வடிவமைப்புகளை ஒருகாலத்தில் ரசித்துப்பார்த்திருக்கிறேன் என்பதும் ஒரு காரணம்.”

“நீங்கள் முதன்முதலாக வடிவமைத்த புத்தகம் எது?”

“சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ அப்போது புதிய பதிப்பில் வரவிருந்தது. காலச்சுவடு அலுவலகத்தில் ஆசிரியர் கண்ணன் கேட்டுக்கொண்டபோது, நானாகவே புளியமரத்தின் கதையைத் தேர்ந்தெடுத்து ஓர் அட்டையை வடிவமைத்துக் காட்டினேன். ‘அது சுமாராகத்தான் இருந்தது' என இப்போது தோன்றுகிறது.”

“புது டைப்பாக இருக்கும் இந்த  மினிமலிச ஆர்வம் பற்றிச் சொல்லுங்கள்?''

“ஒரு விஷயத்தை, விஷுவல் மூலம் மிக எளிதாக கம்யூனிகேட் பண்ண நான் கண்டுகொண்ட வடிவம் இந்த ‘மினிமலிசம்’. எளிது எனச் சொன்னது ஓவியத்தை மட்டுமல்ல, வரைவதற்கும்தான். அரை மணி நேரத்தில்கூட ஒரு மினிமலிச ஓவியத்தை முடித்துவிடலாம். சோம்பேறித்தனமா என்று நீங்கள் கேட்டால், தலைவன் வடிவேலு ஸ்டைலில் ‘லைட்டா’ என்பேன்.

சந்தோஷ் நாராயணன்

“புத்தங்களைப் படித்து, வடிவமைப்பை நீங்களாக டிசைன் செய்வீர்களா அல்லது எழுத்தாளரின் தலையீடு இருக்குமா?''

(`எழுத்தாளர் தலையீடா, என்னப்பா கோத்துவுடுறியே!' என்ற சந்தோஷின் மைண்ட்வாய்ஸ் நமக்கும் கேட்டது.)

“புத்தகங்களை சிலசமயம் பி.டி.எஃப் வடிவில் அனுப்புவார்கள். அதை ஸ்க்ரோல் பண்ணிப் படித்தால் லீனியர் எழுத்துகள்கூட நான்-லீனியர்போல குழப்பமாகிவிடும். அதனால் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி எழுத்தாளர்களுடன் பெரும்பாலும் பேசிக்கொள்வேன். புத்தகம் எத்தனை பக்கம் இருந்தால் என்ன, அட்டை ஒரே ஒரு பக்கம்தான் என்பதால் டிஸ்கஷன் பண்ணும்போதே ஸ்ட்ராங்கான ஒரு இமேஜ் மனதில் தோன்றும். அதையே விஷுவலாக அட்டையில் கொண்டுவருவேன். எழுத்தாளர்களுக்கும் பிடித்துவிடும். எழுத்தாளர்கள், இதுதான் வேண்டும் என அடம்பிடிப்பதில்லை.''

“டிஜிட்டலின் வருகைக்குப் பிறகு இணையத்தில் நிறையபேர் வெரைட்டியாக வரைவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயம்?''

“செமயா செய்றாங்க. நானும் ஒரு டிஜிட்டல் ஆளுதான் என்பதால், சக பயணிகளின் படைப்புகளை ஆர்வத்துடன் பார்க்கிறேன். ஒரு பிளாட்ஃபார்ம் கிடைச்சிருக்கு. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கிறாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தா, உடனே தொடர்புகொண்டு பாராட்டிவிடுவேன். சமீபத்தில்கூட ஒரு தம்பி தனது மினிமலிச சினிமா போஸ்டர்களை எனது வாட்ஸ்அப்புக்கு அனுப்பியிருந்தார். செம க்ரியேட்டிவா இருந்தது. உடனே உற்சாகமாகி, கூப்பிட்டுப் பேசினேன். வொர்க் நல்லா இருந்தா, சரியான கவனமும் உரிய மரியாதையும் நிச்சயம் கிடைச்சுடும்.”

“இந்தப் புத்தகக் காட்சியில் வரவுள்ள எத்தனை புத்தகங்களுக்கு வடிவமைப்பு செய்துள்ளீர்கள்?''

“30 புத்தகங்களுக்குச் செய்திருப்பேன். தொடர்ந்து ஃபேஸ்புக்கில் போடுவதால் மொத்த புத்தகக் காட்சியையும் நான் குத்தகைக்கு எடுத்துவிட்டதுபோல ஒரு மாயை நிலவுகிறது.''

சந்தோஷ் நாராயணன்

“நீங்கள் வடிவமைத்ததில் பிடித்த புத்தகம்?''

“ ‘எல்லாம்’ எனச் சொன்னால் கோபித்துக்கொள்வீர்கள். சமீபத்துல எனக்கு ரொம்பப் பிடிச்சது ஹஸ்தா செளவேந்திர சேகர் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான `ரூபி பாஸ்கேயின் மர்ம நோய்' புத்தகத்துக்கு நான் செய்த அட்டை. சந்தால் பழங்குடிகளின் ஓவியப் பாணியில் டிஜிட்டலாக வரைந்து செய்த அட்டை. பிறருடையது என்பதில் புத்தகங்களாக ஞாபகம் வராவிட்டாலும் ஸ்ரீபதி பத்மநாபா, மணிவண்ணன், அடவி முரளி, ரோஹிணி மணி, றஷ்மி போன்றோர் செய்யும் வடிவமைப்புகள் அவரவருக்குரிய தனித்துவத்துடன் அழகாக இருக்கும்.''

சந்தோஷ் நாராயணன்

“புத்தக டிசைன் தவிர, வேறு என்னென்ன டிசைன் செய்கிறீர்கள்?”

“விளம்பரத் துறை சார்ந்த வேலைகள். லோகோ டிசைன், பிராண்டிங் டிசைன், போஸ்டர், அலுவலகங்களுக்கு சுவரோவியங்கள்கூட செய்திருக்கிறேன். தோன்றும்போது வாட்டர் கலர். மொத்தத்தில் விஷுவல் ஆர்ட் சார்ந்த விஷயங்கள் எப்போதும் என் ஆர்வத்தைத் தூண்டுபவை.''

“ஓகே பாஸ்... இன்னும் நிறைய நல்ல டிசைன் பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்” என்றேன்.

அதற்கு அவர் “வழக்கமாக அடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு நீங்கள் சொல்ல வரும் அட்வைஸ் என்ற கேள்வியைக் கேட்காததற்கு மிக்க நன்றி" என்றார் குறும்பாக.

இந்தக் குறும்புத்தனமும் புத்திசாலித்தனமும்தான் சந்தோஷ் நாராயணனின் அடையாளம்!