வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (06/01/2018)

கடைசி தொடர்பு:09:00 (07/01/2018)

‘அடேய்களா... ரோபோவ வேலை செய்ய விடுங்கடா!’ சென்னை ரோபோ ரெஸ்டாரன்ட் எப்படி இருக்கிறது?

“வாடிக்கையாளர்களுக்கு உணவைப் பரிமாறும் புதிய ரோபோ” - இந்தத் தலைப்பில் எத்தனை வெளிநாட்டுச் செய்திகளை நாம் படித்திருப்போம்! இப்படி சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே இருப்பதாக நாம் படித்த ரோபோக்கள், தற்போது நம்மூருக்கும் வந்துவிட்டன. இந்தியாவில் முதல்முறையாக சென்னை OMR சாலையில் உள்ள செம்மஞ்சேரியில் ரோபோக்கள் பணிபுரியும் ரெஸ்டாரன்ட் தொடங்கப்பட்டுள்ளது. நம்மூர் மக்கள் ரோபோ சர்வர்களை எப்படி டீல் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க ரெஸ்டாரன்ட்டுக்கு ஒரு விசிட் அடித்தோம்.

ரோபோ ரெஸ்டாரன்ட்

உள்ளே நுழைந்ததுமே ஏதோ அடர்ந்த குகைக்குள் செல்வது போன்ற உணர்வு. ரெஸ்டாரன்ட் முதல் தளத்தில் இருக்க, வரவேற்பறை தரை தளத்தில் இருந்தது. எதுக்கு வரவேற்பு எல்லாம் என முடிவு செய்துவிட்டு, நேரடியாக முதல் தளத்துக்குச் சென்றோம். (இதற்கான பலனை பின்னர் அனுபவித்தோம்!) சீன மற்றும் தாய்லாந்து வகை உணவுகளைக் கைகளில் சுமந்தபடி வரிசையாக சென்றுகொண்டிருந்தன ரோபோக்கள். அடையாளத்துக்காக ஒவ்வொரு ரோபோவும், ரிக்ஷாக்காரன் எம்.ஜி.ஆர் போல கழுத்தில் கர்சீஃப் கட்டியிருந்தன. அந்தந்த டேபிளுக்குச் சென்று உணவை எடுத்துக்கொள்ளவும் என்று கிசுகிசுத்தன. 

Robot Restaurant

செல்ஃப் சர்விங் முறைதான் இங்கு பின்பற்றப்படுகிறது. 'இந்த ரோபோவை வச்சுட்டு என்னய்யா பண்றது?' எனக் குழப்பமாக இருந்தால், உதவியாளர்களை அழைத்துக்கொள்ளலாம். அவர்கள் ரோபோக்கள் உணவு பரிமாறுவதற்கு உதவுவார்கள். பரிமாறுதல் முடிந்ததும் ரோபோக்களின் கையைத் தொட்டதும், அது கிளம்பிவிடும். 'சரி..சரி.. ரோபோ எப்படி வேலை செய்யுதுன்னு பார்த்தாச்சு...' சாப்பிடப்போவோம்ன்னு ஒரு டேபிளில் அமர்ந்தோம். டேபிளில் இருப்பது ஒரே ஒரு லைட்டும், டேப்பும் (Tab) மட்டுமே. ஆர்டர் எடுக்க யாரும் இருக்கமாட்டார்கள். உதவியாளர்களை உதவிக்கு அழைத்தால், அவர்கள் டேப்லெட்டை  கையில் எடுத்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். உடனே ஆர்டர் செய்யலாம் என டேப்லெட்டை பார்த்தால், ஆக்சஸ் இல்லை என்று கைவிரித்தது. திரும்பவும் உதவியாளரை அழைத்தோம்.

“என்ன சார்... டேப்லெட் உள்ளேயே போக முடில?" 

“யுவர் நேம் ப்ளீஸ் சார்"

சொன்னோம்.

"கீழே ரெஜிஸ்டர் பண்ணீங்களா?"

"இல்லையே பாஸ்"

"சாரி சார்... கீழே பதிவு பண்ணாதான் டேப்லெட்டை ஆக்சஸ் பண்ணமுடியும்"

(அவ்வ்வ்...)

உடனே கீழே சென்று பதிவு செய்துவிட்டு மீண்டும் டேபிளுக்கு வந்தோம். நம் பெயருடன் வெல்கம் மெசேஜ் ஒன்று டேப்லெட்டில் ஓடியது. பின்னர் மெனுவை தேர்வு செய்து, உணவை ஆர்டர் செய்தோம். அந்த ஆர்டர் வைஃபை மூலம் நேரடியாக கிச்சனுக்குச் சென்றுவிடுமாம். கொஞ்ச நேரத்தில் நாம் ஆர்டர் செய்த உணவுகளுடன் கழுத்தில் ப்ளூகலர் கர்சீஃப் கட்டிய ரோபோ மெல்ல வந்துநின்றது. நாம் அவற்றை எடுத்துவைத்துவிட்டு ரோபோவின் கையைத் தொட்டதும், நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டது. சாப்பிட்டு முடித்ததும் பில்லும் வந்தது. சாப்பிட்டுவிட்டு அப்படியே ரெஸ்டாரன்ட்டை நோட்டம் விட்டோம்.

ரோபோ ரெஸ்டாரன்ட் மெனு

ஊரில் எது புதிதாக வந்தாலும் அதைப் பார்க்க கூட்டம் கூடுமே, அப்படித்தான் இங்கேயும். ரோபோ ரெஸ்டாரன்ட் என்றதும் ஆர்வத்துடன் நிறையபேர் வருகின்றனர். அலைமோதும் கூட்டத்தைப் பார்த்தால், ஏதோ பிக்னிக் ஸ்பாட்டில் நுழைந்தது போன்ற ஒரு ஃபீலிங். சர்வீஸ் செய்யும் ரோபோக்களுடன் செல்ஃபி எடுக்க ஒரு கூட்டமே ரோபோவின் பின்னால் சென்றுகொண்டிருந்தது. நமக்கு உதவி செய்யத்தான் உதவியாளர்களை நியமித்திருக்கிறது ரெஸ்டாரன்ட் நிர்வாகம். ஆனால், ரோபோக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பாதுகாப்பதே அவர்களின் பெரும்பணியாக இருக்கிறது. அந்தளவுக்குப் பாசக்காரப் பசங்களாக இருக்கிறார்கள் நம்மூர் பாய்ஸ். 

ரோபோவில் ஆப்ஜெக்ட் டிடெக்ஷன் சென்சார் பொருத்தியிருப்பதால், ரோபோ செல்லும் பாதையில் ஏதாவது பொருள் இருந்தால் இரண்டு அடி முன்னாலேயே ரோபோ நின்று விடும். இதை செக் செய்து பார்க்கவும் ஒரு கூட்டம் ரோபோ பின்னாடியே சுற்றுகிறது. ஒரு வாடிக்கையாளர் அதீத ஆர்வத்தில் ரோபோவின் மீது கைபோட்டபடியே ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க, ரோபோ சாயும் நிலைக்குச் சென்றுவிட்டது. பின்னர் உதவியாளர் ஒருவர் வந்து தாங்கிப் பிடிக்க அந்த இடமே களேபரம் ஆனது. அட...அதையாவது வேலை செய்யவிடுங்கப்பா...!

ரோபோக்கள்

வெளிநாடுகளில் மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருந்த ரோபோக்களை நம்மூருக்கு அழைத்துவந்தது சூப்பர் விஷயம். வழக்கமான உணவகங்களில் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்துக்காக நிச்சயம் இங்கே ஒரு விசிட் அடிக்கலாம். இதுவரைக்கும் உணவின் சுவைக்காக உணவகங்களுக்குச் சென்றிருப்போம். இங்கே அதைத் தாண்டியும் ஓர் அனுபவம் காத்திருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்