வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (06/01/2018)

கடைசி தொடர்பு:15:05 (06/01/2018)

`வேம்பு பெயர் காரணம்... கினோ ஐ நிலைப்பாடு!’ - தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ குறியீடுகள்

ஃபர்ஸ்ட் லுக், போட்டோ ஷூட், டைட்டில் டீசர் என ஒவ்வொன்றாக வெளியிட்டு வைரல் ஆக்காமல் `சூப்பர் டீலக்ஸ்'  டீசரை ஷார்ப்பாக வெளியிட்டிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.

தமிழ் சினிமா காதலர்கள், தமிழ்நாட்டில் உள்ள உலக சினிமா காதலர்கள் என அத்தனை ஏரியாக்களிலும் கொண்டாடப்படுபவர் தியாகராஜன் குமாரராஜா. `ஆரண்ய காண்டம்' என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். அவரது இரண்டாவது படம்குறித்த அறிவிப்புகள் வெளியானபோதே சினிமா ஆர்வலர்கள் அலெர்ட் ஆனார்கள். மிஷ்கின் கதை எழுதுகிறார், விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில் நடிக்கிறார்கள், ஐந்து குறும்படங்கள் சேர்ந்த மாதிரியான ஆந்தாலஜி படம். படத்தின் தலைப்பு `அநீதிக் கதைகள்' என அப்டேட்கள் தாறுமாறாகக் குவிய ஆரம்பித்தன.

படத்தைப் பற்றி வெளியே கசிந்த முதல் அஃபிஷியல் தகவல் விஜய் சேதுபதி பெண் வேடம் தரித்த போட்டோ. இந்த போட்டோ விஜய் சேதுபதியின் சமூக வலைதளப்பக்கத்தில் பகிரப்பட்டது. அதன் பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி, தியாகராஜன் குமாரராஜா சகிதம் இருக்கும் படம் இணையத்தில் உலவ ஆரம்பித்தது. பி.சி.ஶ்ரீராம் கேமரா, யுவன் மியூசிக் என அதன் பிறகும் தகவல்களை `உண்மைத் தமிழர்கள்' பகிர்ந்தவண்ணமிருந்தார்கள். படத்தின் பெயர் `சூப்பர் டீலக்ஸ்' என அறிவித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தியாகராஜன் குமாரராஜா. இதற்கிடையில் 24 செகண்ட் கால அளவுள்ள தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த பட டீசர் வெளியானது. 

கொலைப் பசியில் காத்திருந்த அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் டீசரைக் கொண்டாடித்தீர்த்தனர். `சூப்பர் டீலக்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசரில், ஒருவரின் கழுத்தை நோக்கி சமந்தா கத்தியைக் கொண்டு செல்வதாக ரிப்பிட் மோடில் இருந்தது டீசர்.

சூப்பர் டீலக்ஸ்

தற்போது படத்தின் தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளன. படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின்,  பகவதி பெருமாள் (பக்ஸ்) நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கூடுதல் திரைக்கதையை நலன் குமரசாமி, மிஷ்கின், நீலன் கே.சேகர் (`அலிபாபா' படத்தின் இயக்குநர்) ஆகியோர் எழுதுகிறார்கள். மிஷ்கின் ஒரு நேர்காணலில், தான் எழுதும் சேப்டரில் தானே  `மதபோதகர்' கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறியிருந்தார். படத்தை பி.எஸ்.வினோத் மற்றும் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்கள். சரி, படத்தின் டீசர் குறித்த தகவல்களுக்கு வருவோம்.

`வேம்பு ஆஃப் சூப்பர் டீலக்ஸ்' என்ற பெயரில் டீசர் வெளியாகியுள்ளது. இதில் `வேம்பு' என்பது சமந்தாவின் பெயரா அல்லது ஆந்தாலஜி படமெனச் சொல்லப்படும் சூப்பர் டீலக்ஸ்-ன் ஒரு பகுதியின் பெயரா என சினிமா ஆர்வலர்களால் ஆராய்ச்சி நடந்துவருகிறது. `ஆரண்ய காண்டம்' படத்தில் கதாபாத்திரத்தின் பெயர்கள் `மிருகங்களின்' பெயர்களாக வைத்திருப்பார். `வேம்பு' என்பது அப்படி எதன் குறியீடு என்பது அடுத்த டீசரில் அல்லது படத்தில் தெரியவரும்.

சூப்பர் டீலக்ஸ்

படம், தியாகராஜன் குமாரராஜாவின் சொந்தத் தயாரிப்பு. தயாரிப்பு நிறுவனத்துக்கு `TDKF' எனப் பெயரிட்டு `Tyler durden and Kino fist'  என எழுதியுள்ளார்கள். Tyler durden என்ற பெயரைக் கேட்டவுடன் உலக சினிமா ஆர்வலர்களுக்கு மூளைக்குள் பல்பு பிரகாசிக்கும். ஆம், `Fight Club' படத்தில் வரும் Brad pitt கதாபாத்திரத்தின் பெயர்தான் அது. Kino Fist என்ற வார்த்தை சினிமா ஆர்வலர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. ரஷ்ய திரைப்பட அறிஞர் `செர்ஜி ஐசென்ஸ்டீன்'  கூறிய பதம் அது. `I do not believe in Kino Eye. I believe in Kino Fist' என்பது ஐசென்ஸ்டீனின் நிலைப்பாடு. ``திரைப்படம் என்பது, கேமரா மூலம் நாட்டில் நடப்பவற்றை அப்படியே பதிவுசெய்வதல்ல. கம்போசிஷன் மற்றும் எடிட்டிங் ஆகியவற்றைக் கொண்டு நிகழும் சம்பவத்தை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பதியவைப்பது" என்கிறார் ஐசென்ஸ்டீன். இதைத்தான் தனது முந்தைய படத்திலும் தியாகராஜன் குமாரராஜாவும் செய்திருப்பார். டீசரில்கூட எடிட்டிங் மூலம் ஒரே ஷாட்டைத் திரும்பத் திரும்பக் காட்டி அதன் முடிவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். 24 செகண்ட் வௌியான டீசரில் இத்தனை தகவல்களை வைத்த இயக்குநர், படத்தில் இன்னும் அமர்க்களப்படுத்தியிருப்பார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்