பிரமிள்... கவிதை உலகின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை நிரப்பிச் சென்ற நட்சத்திரக் காதலன்! நினைவுதினப் பகிர்வு

காலஞ்சென்ற தமிழ்க்கவி பிரமிள் எழுதிய புகழ்பெற்ற கவிதை.பிரமிள்

`சிறகிலிருந்து பிரிந்த 

இறகு ஒன்று

காற்றின் 

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை 

எழுதிச் செல்கிறது!'

- பிரமிள்

`காவியம்' என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பிரமிளின் இந்தக் கவிதை, இன்றும் பித்தம் குறையாமல் நிற்கிறது. பிரமிள், கவிதை உலகின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை நிரப்பிச் சென்ற நட்சத்திரக் காதலன். இன்றுடன் பிரமிள் மறைந்து 21 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்க் கவிதை உலகில் அகமனம் சார்ந்து இயங்கிய கவிஞர்களில் மிக முக்கியமானவர் பிரமிள். தன் ஆழ்மனச் சிறகுகளை, அகண்டு கிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் ஊடாக அவிழ்த்துவிட்டவர். தன் மனம் நுகர்ந்த இந்தப் பேரண்டத்தின் சாரத்தை தன் கவிதைகளில் பதியவைத்தவர். படைப்பாளி, தன் படைப்பின் வழியேதான் இந்தக் கானகத்தில் உள்ள உயிர்களோடு உரையாடுவான்.

பிரமிள் நமக்காக விட்டுச்சென்ற சில கவிதைகளில், பல்லியைப் பற்றிய கவிதை மிகப் பிரபலம். 

பல்லி

`இறக்கத் துடிக்கும் வாலா?

உயிரோடு மீண்ட உடலா?'

பிரமிள், இலங்கையில் உள்ள திரிகோணமலைப் பகுதியில் பிறந்தவர். 1939-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி பிறந்த இவரின் இயற்பெயர் தருமு.சிவராமு. பல்வேறு புனைபெயர்களில் கவிதை, விமர்சனம் எழுதிவந்தார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நடத்திவந்த `எழுத்து' பத்திரிகையில் தன் 20-வது வயதிலேயே எழுதத் தொடங்கினார். சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன் உள்ளிட்டோரால் பாராட்டு பெற்றவர்.

``பிரமிளினுடைய `கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்' என்ற கட்டுரை மிகவும் கவனத்துக்குரிய ஒரு படைப்பு. ஆங்கிலத் தூதரகத்துக்குச் சென்று ஆங்கில நூல்கள் வாசிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தவர். ரெங்கநாதன் தெருவில் மா.அரங்கநாதன் நடத்திவந்த `முன்றில்' புத்தகக் கடைக்கு தினமும் மாலையில் செல்வார். அப்போது அங்கு கூடும் இளம் எழுத்தாளர்கள் அனைவருடனும் இலக்கியக் கூட்டம் நடைபெறும்'' என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியிருந்தார். தமிழ்க் கவிதை உலகின் முன்னோடியாக அடையாளப்படுத்தப்படும் பிரமிள், நல்ல ஓவியரும்கூட. தன் மனச்சித்திரங்களுக்குக் கவிதை வடிவம் கொடுத்த பிரமிள், மனதின் நுட்பமான எண்ணங்களுக்குத் தன் கோடுகளின் மூலம் உயிர்கொடுத்தவர். இவரது ஓவியங்கள் அட்டைப்படங்களாக வெளிவந்துள்ளன. ஓவியத்தைத் தாண்டி களிமண் சிற்பங்கள் செய்வதிலும் ஆர்வம்கொண்டவர். கலை சார்ந்த வாழ்விலேயே மூழ்கிக்கிடந்த பிரமிள், கவிதை, சிறுகதை, நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது `நட்க்ஷத்திரா' நாடகம் அந்தக் காலகட்டத்தில் மிகப் பிரபலம்.

பிரமிள்

வண்ணத்துப்பூச்சியும் கடலும்

`சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன் குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப்பூச்சி.

வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.'

அகவயம் சார்ந்த படிமக் கவிதைகள் பலவற்றை எழுதிய பிரமிள், 'படிமக் கவிஞர்', `ஆன்மி கவிஞர்' என அழைக்கப்பட்டார்.

`கருகித்தான் விறகு

தீயாகும்

அதிராத தந்தி
இசைக்குமா?

ஆனாலும்
அதிர்கிற தந்தியில்
தூசி குந்தாது.

கொசு 
நெருப்பில் மொய்க்காது'

இந்தக் கவிதை, சோர்ந்து கிடக்கிற மனித மனத்தின் சரடுகளில் தன்னம்பிக்கை முடிச்சுபோடும்விதமாக உணரப்படுகிறது. `நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடி' என அழைக்கப்படும் பிரமிள், இலங்கையில் பிறந்திருந்தாலும் தனது படைப்புகள் முழுவதையும் தமிழகத்திலிருந்துதான் வழங்கினார். தமிழகத்தின் இன்றைய முக்கியப் படைப்பாளிகள் பலரும் பிரமிள் மீதான தங்கள் அன்பையும், பிரமிளின் படைப்புகள் தங்களுக்குள் ஏற்படுத்திய உந்துசக்தியைக் குறித்தும் தெரிவித்துள்ளனர். ஒரு படைப்பாளி, தன் படைப்பின் வழியே அடுத்த தலைமுறையினரை உருவாக்கிச் செல்வது காலத்தின் தேவை. அதைச் செவ்வனே செய்த பிரமிளை நினைவுகூருவோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!