வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (07/01/2018)

கடைசி தொடர்பு:11:55 (07/01/2018)

தந்தமின்றி பிறக்கும் ஆப்பிரிக்க யானைகள்... மனிதனுடன் போராட இயற்கை கொடுத்த புதிய ஆயுதம்! #AnimalTrafficking - அத்தியாயம் 6

போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தலுக்கு அடுத்து உலகளவில் அதிகம் கடத்தப்படும் சட்ட விரோத பொருள்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது யானை தந்தமாகும். கடத்தல்காரர்களைப் பொறுத்தவரை யானை தந்தம் என்கிற பெயரே ஒரு போதைப் பொருள்தான். இதற்காக ஆண்டிற்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் யானைகள் கொல்லப்படுகின்றன. உலகம் முழுவதும் வன உயிரினங்கள் தொடர்பான சட்ட விரோதமான கடத்தல் வர்த்தகம்19 பில்லியன் டாலர் அளவுக்கு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஆப்பிரிக்க நாட்டிலிருந்து மரச்சாமான்கள் எனக் குறிப்பிடப்பட்ட கன்டெய்னர் ஒன்று 2014 ஏப்ரல் 30-ம் தேதி துபாயில் உள்ள ஜெபெல் அலி துறைமுகத்திற்கு கப்பலில் வந்தது. அந்த கன்டெய்னரில் இருந்த பெட்டிகளை சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். பெட்டிகளின் உள்ளே ஆப்பிரிக்க நாட்டின் அரியவகை யானை தந்தங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 259 தந்தங்களைக் கைப்பற்றினர்.  

elephant

கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி மலேசியாவிலிருந்து ஹாங்காங் துறைமுகத்திற்கு வந்த கப்பலில் ஒரு கன்டெய்னரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சுமார் 7.2 டன் எடையுள்ள யானை தந்தங்கள் அதில் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இந்த யானை தந்தங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 60 கோடி ரூபாயாகும். "உலகிலேயே ஒரே இடத்தில் இத்தனை தந்தங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது இங்குதான். இதற்கு முன்னர் 2002ம் ஆண்டு, சிங்கப்பூரில் 7.1 டன் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. யானை தந்தங்களை அனுப்பியது யார், யாருக்கு அனுப்பப்பட்டது என்கிற எந்த விவரங்களும் அதில் இல்லை.

2016-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மலேசியாவிலிருந்து சீனாவுக்கு பொருள்களை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலை வியட்நாமில் உள்ள ஹய்போங் துறைமுக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கடல் சிப்பிகள் என எழுதி ஒட்டப்பட்டிருந்த ஒரு கன்டெய்னரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் திறந்து பார்த்தனர். உள்ளே யானை தந்தங்கள் மலை போல் குவிந்து கிடப்பதை பார்த்த அதிகாரிகள் அந்த கன்டெய்னரை பறிமுதல் செய்த சீனாவுக்குக் கடத்தவிருந்த சுமார் 2 ஆயிரம் கிலோ (2 டன்) தந்தங்களையும் கைப்பற்றினர். 2009-ம் ஆண்டு இதே துறைமுகத்தில் தான்சானியா நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 7 டன் யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பித்தக்கது. சிங்கப்பூர், தான்சானியா, மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து கென்யாவிற்கு ‌கடத்தி வரப்பட்ட 40 ஆயிரம் தந்தங்களை கென்யா அரசு பறிமுதல் செய்தது. 2011 ஜூலை 21-ம் தேதி சுமார் 5 டன் எடையுடைய இந்தத் தந்தங்களை ஒரே இடத்தில் அடுக்கி வைத்து, தந்தக் குவியலுக்குக் கென்யா அதிபர் மிவாய் கிபாகி தீ வைத்துக் கொளுத்தினார்.

யானை தந்தங்கள்

Photo Credit: Reuters

உயிரோடு இருக்கிற யானையைக் கொல்வது நமக்கு வேண்டுமானால் துணிவில்லாமல் இருக்கலாம், ஆனால் கடத்தல்காரர்களுக்கு அவை ஜஸ்ட் லைக் தட் சம்பவங்கள்தாம். ஒரு ஜீப்பில் இரண்டு துப்பாக்கிகளோடு வலம் வரும் கும்பலின் இரத்தம் சதை என எல்லாவற்றிலும் தந்தம் என்கிற சொல் வெறியேற்றி இருக்கும். சிக்குகிற எல்லாவற்றையும் கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளுகிறார்கள். இணையதளத்தில் இருக்கிற தந்தம் வெட்டப்படுகிற காட்சிகள் கடத்தல்காரர்கள் எவ்வளவு மூர்க்கத்தனம் கொண்டவர்கள் என்பதை காட்டுகிறது. யானை தந்தங்கள் கடத்தலின் முக்கிய நாடாக மலேசியா இருந்து வருகிறது. பினாங்கு, கிள்ளான், பாசிர் கூடாங் துறைமுகங்கள் உலகம் முழுக்க யானைத் தந்தங்கள் அனுப்பப்படுவதற்கான மிக முக்கியமான வழிகளாக இருக்கின்றன. ஜனவரி 2003-லிருந்து மே 2014 வரை 63,419 கிலோ தந்தங்கள் 66 முறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் மலேசியாவில் மட்டும் 19 முறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆசிய, ஆப்பிரிக்க யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதற்கு மலேசியத் துறைமுகங்கள் முக்கியக் கேந்திரங்களாக திகழ்ந்து வருகின்றன என்ற அதிர்ச்சித் தகவலை ‘டிராபிக்(TRAFFIC) எனப்படும் தென்கிழக்காசிய வன விலங்குகள் சட்டவிரோத வர்த்தக கண்காணிப்புக் குழு தெரிவித்தது. யானைத் தந்தங்களை வாங்குவதும் விற்பதும், பரிமாற்றம் செய்து கொள்வதும் மலேசியாவில்தான் அதிகமாக நடைபெறுவதாகவும் அந்தக் குழு தெரிவித்தது. மலேசியாவில் பறிமுதல் செய்யப்பட்ட யானைத்தந்தங்கள் முறையாக அழிக்கப்படுவதில்லை. கடந்த காலங்களில் பறிமுதல் செய்யட்ட யானைத்தந்தங்கள் காணாமல் போயும் உள்ளன. இது தொடர்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அமைப்புக்கள் கேள்வி எழுப்பிய பொழுது மலேசிய தரப்பால் சரியான பதில்களைக் கொடுக்க முடியவில்லை

வருடந்தோறும் பெருகி வரும் யானைத் தந்தக் கடத்தல் வேலைகள் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படுத்தப்படுகின்றன. சட்ட விரோத யானைத்தந்த கடத்தல்களை முறியடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த அமைப்புக்கள் கடும் சவால்களாக இருந்து வருகின்றன. ஆசியாவில் யானைத் தந்தத்திற்கான கறுப்புச் சந்தையை முடிவுக்குக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் கணிசமான அளவில் பலனைக் கொடுத்துள்ளன என்பதற்கு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வரும் யானை தந்த பறிமுதல்களே தக்க சான்று.

தந்தத்தினால் செய்யப்பட கலைப்பொருட்கள்

Photo Credit: AP

ஆப்பிரிக்காவில் ஆண் யானைகளுக்குத் தந்தங்கள் பெரிதாக இருக்கும் என்பதால், கடந்த காலங்களில் அவையே அதிகம் வேட்டையாடப்பட்டன. இதனால், ஆண் - பெண் யானைகளுக்கான பாலின விகிதம் குறைந்தது. மேலும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் ஆப்பிரிக்காவில் சமீபகாலங்களில் பிறக்கும் யானைக் குட்டிகள் 6% வரை தந்தங்கள் இல்லாமல் பிறப்பதாகச் சொல்லப்படுகிறது. இது, யானைகளுக்கு எதிராக மனிதர்கள் நடத்திய தாக்குதலின் விளைவாக இயற்கையாக விளைந்த ஒரு "பரிணாம வளர்ச்சி" என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதாவது, மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பிக்க யானைகள் தந்தங்கள் இல்லாமல் பிறக்கின்றன. ஆப்பிரிக்க யானை இனம், இன்னும் 15 ஆண்டுகளில் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பன்னாட்டு விலங்குகள் நல அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன. இவற்றில், ஆப்பிரிக்க யானைகள் மிகவும் பலம் பொருந்தியவை. அகன்ற காதுகள், மிக நீளமான தும்பிகைகளுடன் இவை தோற்றமளிக்கும்.தற்போது அதன் தந்தங்களே அந்த யானை இனத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

யானை தந்தம் என்பதை தாண்டி இன்னோர் அதிர்ச்சியூட்டும் ஒரு முக்கிய விஷயம், யானைகளின் தோல் உரித்தெடுக்கப்படுகிறது என்ற செய்திதான். தந்தங்களுக்காக வேட்டையாடிய காலம் போய், அதன் தோலுக்காக அவை அதிகம் வேட்டையாடப்படுகின்றன. குறிப்பாக, மியான்மர் நாட்டில் இது அதிகளவில் நடந்து வருகிறது.  மியான்மரில், கடந்த பத்து மாதங்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடப்பட்டு, தோலுரிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களாகவே "யானைத் தோல்" கள்ளச் சந்தைகளில் புழங்கி வந்தாலும், அது மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. ஆனால், மிகச் சமீபமாக அதன் தேவை அதிகமாகியிருக்கிறது. இதற்கான முழுமையான காரணம் தெரியாவிட்டாலும் கூட, சில காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யானைகளின் தோல், மனிதர்களின் தோல் நோய்களுக்கான சிறந்த மருந்தாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. யானையில் தோலைக் காயவைத்து, ஒரு மண் சட்டியில் போட்டு எரிக்க வேண்டும். பின்னர், அந்தச் சாம்பலை தேங்காய் எண்ணெயோடு சேர்த்து கலக்கி,  தடவினால் தோல் நோய்களுக்குச் சிறந்த மருந்தாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இதை முகத்திற்குத் தடவினால், முகம் பொலிவாகவும், புத்துணர்ச்சியாகவும், தூய்மையாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

மியான்மரின் ரங்கூன் மற்றும் மாண்டலே நகரங்களிலிருந்து தொடங்கும் இந்தக் கடத்தல் பயணம் லஷியோ, மியூஸ் வழியாக சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளை சென்றடையும். இந்த நாடுகளைச் சென்றடைய மொத்தம் 4 பார்டர்களை இந்தக் கடத்தல்காரர்கள் ஏமாற்றி கடக்க வேண்டும். யானைத் தோல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஒரு ஒருங்கிணைந்த கடத்தல் குழுவாகச் செயல்படுகிறார்கள். இந்தக் கும்பலை கட்டுக்குள் கொண்டுவர உலகளவில் பல நாடுகளும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல முயற்சிகளை எடுத்து வந்தாலும் கூட, இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

உலகச் சந்தையில் யானைத் தந்தத்திற்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்குக்கூட தந்தங்கள் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல மதிப்பு உண்டு. ஆகவே யானைகள் இவற்றுக்காகவும், பாரம்பர்ய மருத்துவப் பொருள்களுக்காகவும் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுகின்றன. எல்லா விலங்குகளின் அழிவுக்கும் காரணமாய் இருக்கிற சீனா அரசு யானை அழிவுக்கும் காரணமாகவே இருக்கிறது. ஆனால் இப்போது யானைகள் அழிவில் அக்கறை கொண்ட சீன அரசு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 தேதி தந்தங்கள் விற்பனை செய்வதை அதிகாரபூர்வமாக தடை செய்திருக்கிறது.

அழிக்கப்படும் யானை தந்தங்கள்

Photo Credit: AP

1986-ஆம் வருடம் தந்தங்கள் மற்றும் தந்தங்களிலான பொருள்களை வியாபாரம் செய்வதை இந்திய அரசு தடைசெய்தது. இந்திய வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக வெற்றியடைய தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதைகள் ஆகியவற்றை அமைக்கவேண்டியது கட்டாயமாகிறது. சில இருப்புப்பாதைகள் காடுகள் வழியாகவும் அமைக்கப்படுகின்றன. அப்பாதைகள் யானைகளின் வழித்தடங்களின் ஊடாகச் செல்வதால், அந்தப் பாதைகளைத் தாண்டிப்போகும்போது யானைகள் ரயில்களில் அடிபட்டுப் பரிதாபமாக மரணமடைகின்றன. 1987 முதல் 2010 வரை இந்தியாவில் மொத்தம் 150 யானைகள் ரயில்களில் அடிபட்டு இறந்துபோயுள்ளன. இதில் 2000 முதல் 2010 வரை 100 யானைகள் இறந்துபோயுள்ளன. யானை தந்தங்களின் கடத்தல் குறித்த சம்பவங்களில் இந்தியாவோ அதில் தமிழகமோ விதி விலக்கல்ல. ஒரு வாரத்திற்க்கு தந்தம் கடத்தல் குறித்த மூன்று செய்திகளாவது எங்கிருந்தாவது வந்துகொண்டே இருக்கின்றன. யானை என்கிற ஒரு பெயருக்குப் பின்னால் இருக்கிற அரசியலும் அதற்காக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் பல அத்தியாயங்களைக் கடக்கும். தந்தங்களுக்காகக் கொல்லப்பட்ட யானைகளை போல கொல்லப்பட்ட மனிதர்களும் அநேகம். அவர்கள் குறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்!

முந்தைய அத்தியாயம் படிக்க