வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (08/01/2018)

கடைசி தொடர்பு:13:36 (08/01/2018)

கண்ணியால் கால் இழந்த குட்டியானை... செயற்கைக் கால் அளித்து உதவிய மூவர்!

அது தாய்லாந்து - மியான்மர் எல்லை காட்டுப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த நேரம். போர் நடந்து கொண்டிருந்த பகுதியில் கண்ணிவெடிகள் அதிக எண்ணிக்கையில் புதைக்கப்பட்டிருக்கின்றன. அப்போது பூமியில் புதைக்கப்பட்ட ஒரு கண்ணிவெடி வெடிக்கிறது. கண்ணிவெடிச் சத்தத்திற்கு இடையே ஓர் உயிரின் ஓலக்குரல். அந்த குரலால் காடு முழுவதுமே அதிர்கிறது. நீங்கள் நினைப்பதுபோல கண்ணிவெடியில் சிக்கிய வீரர்களின் குரல்கள் அல்ல அது... மோஷா (mosha) என்கிற ஒற்றை யானையின் பிளிறல் சத்தம். கண்ணிவெடியில் சிக்கி வலது முன்னங்காலை இழந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தது. இச்சம்பவம் நடைபெறும்போது அந்தப் பெண் யானைக்குட்டிக்கு வயது 7 மாதங்கள்தாம். இதனால் பாதிக்கப்பட்டது மோஷா மட்டுமல்ல... அதனுடன் சேர்த்து மொத்தம் 15 யானைகள். 

மோஷா யானை

Photo Credits: Reuters

துவாகவே தாய்லாந்தில் யானைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. தாய்லாந்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையம், 2,000 யானைகள் முதல் 3,000 யானைகள் வரை காட்டுப்பகுதிகளில் வாழ்வதாகச் சொல்கிறது. மோஷாவும் அதனுடன் சேர்ந்த 15 யானைகளும் கால்களை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதில் மோஷா மற்றும் மோட்டோலா யானைகளைத் தவிர மற்ற யானைளின் நிலை பற்றி முழுமையாகத் தெரியவில்லை. மோஷா அந்தக் கால்களுடனே காடுகளில் அலைய ஆரம்பித்தது. ஆனால் மீதமுள்ள மூன்று கால்களுடன் நடந்ததால் நாளுக்கு நாள் மோஷாவின் முதுகெலும்பும், கால் எலும்புகளும் வலுவிழக்கத் தொடங்கின. மோஷா பதிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்குப் பின்னர், ஆசிய யானைகள் நண்பர்கள் குழு நடத்தி வரும் யானைகள் மருத்துவமனையில் மோஷா யானையை வளர்க்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் யானை ஒவ்வொரு முறை எடை கூடும்போதும் எடையைத் தாங்கும் வகையில் கால்கள் மாற்றிப் பொருத்தப்பட்டன. அதன் பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-வது செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. அப்போது மோஷாவின் எடை 2,000 கிலோ. முதல் செயற்கைக் கால் பொருத்தப்பட்டபோது மோஷாவின் எடை 600 கிலோ மட்டுமே இருந்தது. 

மோஷாவிற்கு மருத்துவப் பரிசோதனை செய்து வரும் எலும்பு மருத்துவர், தெர்ட்சாய் ( Therdchai), "யானை கால்கள் இல்லாமல் நடந்தபோது அதன் முதுகெலும்புகள் வளைய ஆரம்பித்தன. அப்படியே இருந்திருந்தால் மோஷா இந்நேரம் இறந்து போயிருக்கும்" என்கிறார். மோஷாவைக் காப்பாற்றியது இவர்கள் மட்டுமல்ல, உலகின் பல மூலைகளில் இருந்தும் நன்கொடைகளைக் குவித்து வரும் நண்பர்களும்தாம்.

மோஷா

Photo Credits: Reuters

மோஷாவிற்கு அடிபட்ட காலகட்டங்களிலிருந்து பாதுகாத்து வரும் பாதுகாவலர் பாலஹதி(Palahdee) பேசும்போது, "ஆரம்பக் காலகட்டங்களில் மோஷாவால் மதிய உணவைக் கூட எடுக்க முடியாது. என்னைப் பார்த்து அழுது கொண்டே இருக்கும். என்னிடம் இருக்கும்போது அவள் அன்பை அதிகமாக வெளிப்படுத்துவாள். அவளை யானைகள் பாதுகாக்கும் மருத்துவமனையில் சேர்த்தேன். நாள் ஆக ஆக எடை கூடிக் கொண்டே போனது. எடை கூடிக்கொண்டே போகப் போக கால்களும் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தன. ஆனால் எதுவும் அவளுக்கு நிரந்தரமான தீர்வைக் கொடுக்கவில்லை. இப்போது பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை கால்கள் எளிதாக நடக்கவும், உணவை எளிதாக எடுத்துக் கொள்ளவும் உதவுகிறது. இப்போது பொருத்தப்பட்டுள்ள கால் சொகுசான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மருத்துவமனையிலும் மோஷாவிடம் அன்பான முறையில் நடந்துகொள்கிறார்கள். அவர்களின் கண்காணிப்பில் முன்பைவிட மோஷா நன்றாக இருக்கிறாள். மேலும் அவளுக்குக் காலில் காயம் முழுமையாக குணமடைந்துள்ளது. இதற்காக நன்கொடைகளை அள்ளிக்கொடுத்த நண்பர்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி" என்கிறார். 

யானை மருத்துவமனை நிறுவனர், மைக் ஸ்பிட்ஸ்(Mike Spits) பேசும்போது, "மோஷா வெறும் கால்களை மட்டும்தான் இழந்திருக்கிறது. அது நீண்ட நாள் நிச்சயமாக வாழும் அதனால்தான் மோஷாவுக்கு உதவி செய்ய வேண்டும் எனத் தீவிரமாக களம் இறங்கினோம். அதற்கான தீர்வுதான் இப்போது மோஷாவுக்குப் பொருத்தப்பட்டுள்ள செயற்கைக்கால். இதுதான் அதற்கு ஒரு நிரந்தரமான எதிர்காலத்தைக் கொடுக்கக் கூடிய வழியாக இருக்கும். மோஷா வசிப்பதுதான் உலகின் முதல் யானை மருத்துவமனையும் கூட..." என்கிறார். 

மோஷா இப்போது வழக்கம்போல நடமாட ஆரம்பிக்கிறது. உணவுகளை எடுத்துக் கொள்கிறது. பாதுகாவலர், மருத்துவர், மருத்துவமனை உரிமையாளர் என அனைவரையும் பார்க்கும்போது அவர்களிடம் அன்பு பாராட்டி கொஞ்சுகிறது. அந்த மூன்றுபேரும் விலங்கு என்பதை மறந்து மோஷாவுடன் இருக்கும் நேரங்களில் மெய்மறந்து போகிறார்கள். விலங்குகளிடம் அன்பு பாராட்டுபவர்களிடம் அவையும் அன்பு பாராட்டும் என்பது எவ்வளவு பெரிய உண்மை. 


டிரெண்டிங் @ விகடன்