வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (08/01/2018)

கடைசி தொடர்பு:11:16 (08/01/2018)

``வாழ்வாதாரம் இல்ல... ஜெயலலிதாம்மா கொடுத்த யூனிஃபார்ம் மட்டும்தான்!”- சோகம் பகிரும் சேவாட்டக் கலைஞர்கள்

காடுகளிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் சிறிது சிறிதாக விலகி வந்த மனிதர்களுக்கு அங்கு அவர்களுக்கு நெருக்கமாக இருந்த உயிரினங்களின் இயல்புகள் மட்டும் அப்படியே தொற்றிக்கொண்டது போலும். மாட்டின் தோலில் உருவாக்கப்பட்ட பறை, மயிலின் தோகையைக் கொண்டு வளைந்து நெளிந்து ஆடும் மயிலாட்டம் போன்றவை அதற்கான உதாரணங்கள். இப்படியான மண்சார்ந்த கலைகள், ஆட்டங்கள் தற்காலத்தில் பரவலாகக் கொண்டுசெல்லப்பட்டாலும் சில கலைகள் பற்றிய அறிமுகம்கூட இன்னும் சரிவர மக்களிடம் சென்று சேராமலே இருக்கின்றன. அண்மையில் சென்னை லயோலா கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மண்ணிசைக் கலைஞர்கள் அடங்கிய 150-க்கும் மேற்பட்ட குழுக்கள் ஒருங்கிணைந்திருந்தார்கள். கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக இரண்டு நாள்கள் நடைபெற்ற வீதி விருதுத் திருவிழாவுக்காக அவர்கள் அங்கே கூடியிருந்தார்கள். ஒவ்வொருவரும் காலில் சலங்கை, கையில் இசைக்கருவி என கல்லூரியை வலம் வந்துகொண்டிருக்க... பிங்க் வண்ண உடையில் கால்களில் சலங்கை, இடுப்பைச் சுற்றி இரண்டுபக்கமும் மயில் தோகைகள், தலையில் முண்டாசுக் கட்டிக்கொண்டு அதன் உச்சியில் ஒரு அசைந்தாடும் மயில்தோகை என மனிதனாக மாறிய வண்ணமயிலாக உலாவிக் கொண்டிருந்தார்கள். 

சேவாட்டம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள பர்கூரைச் சேர்ந்த சேவாட்டக் குழுவினர்கள் அவர்கள். அடுத்ததாக மேடையேறி ஆட இருந்தார்கள். எல்லா கலைகளுக்கும் வரலாறு என்று வழிவழியாகக் கூறப்படும் ஒரு கதை இருப்பதுபோல சேவாட்டத்தின் தோற்றத்துக்கும் ஒரு கதை இருக்கிறது. குழுவினரில் மிக மூத்தவராகத் தென்பட்ட அம்மாசி அதனைக் கூறத் தொடங்கினார், “நாங்க எல்லாம் கிருஷ்ணகிரி பக்கத்துல பர்கூருங்க. எங்கூர் பக்கத்துல மட்டும்தான் இந்த ஆட்டம் உண்டு. ஊர்த் திருவிழாவுக்குப் போன எங்க மக்கள் அங்க மரத்துல மயில் ஒன்னு ஆடிக்கிட்டு இருந்ததைப் பார்த்துட்டு அதோட அசைவ கத்துக்கிட்டு ஆடினாங்க. அப்படி ஆடத் தொடங்கினதுதான் சேவாட்டம். ஜவ்வாது, கிருஷ்ணகிரி பக்கம் மட்டுமே இந்த ஆட்டம் இருக்கறதால மத்த ஆட்டங்க மாதிரி இதைப் பரவலா கொண்டுபோய் சேர்க்க முடியாத போச்சுது. நான் என்னோட ஏழு வயசுலேர்ந்து ஆடிக்கிட்டு இருக்கேன். இதோ இன்னிக்கு என்னோட மகன், என்னோட பேரப்பிள்ளைங்க எல்லாரும் எங்கிட்ட கத்துக்கிட்டு சேவாட்டம் ஆடறாங்க. ஆனா பாருங்க நம்மூர்ல இந்த ஆட்டம் பத்தி அவ்வளவா தெரியாததால எங்களுக்கப்புறம் இந்த ஆட்டத்த காப்பாத்த யாருமில்ல. இதையே முழுசாவும் நம்பியிருக்க முடியாது அதனால் கூலி வேலை செய்துகிட்டு இந்தக் கலையையும் காப்பாத்திட்டு வரோம். ஆந்திராவுல குறிப்பா திருப்பதி கோவில் விழா சமயத்துல எல்லாம் ஆடக் கூப்பிடுவாங்க. நம்மூர்ல நம்ம ஜெயலலிதா அம்மா இருந்தப்போ எங்களை கௌரவம் செஞ்சாங்க. இதோ... இந்த ஆட்டத்துக்கான உடுப்பெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. அவங்களுக்கு அப்புறம் யாரும் எங்களைக் கண்டுக்கிடலை” என்கிறார். 

மேடையில் ஆட்டம் ஆட அழைத்ததும் அம்மாசியினுடைய குழு உற்சாகம் தொற்றிக்கொள்ள மேடையேறுகிறது. வயோதிகத்தால் அதுவரைக் சுருங்கிய கண்களாக இடுங்கிப் பார்த்துக் கொண்டிருந்த அம்மாசியின் கண்கள் ஆர்வத்தில் அகல விரிகின்றன. கையில் கோல் ஏந்திய ஒருவர், புல்லாங்குழல் ஏந்திய ஒருவர், தலையில் மயில் அலகு போன்ற வடிவமைப்பில் கிரீடம் போன்ற ஒன்றைத் தாங்கிய ஒருவர் என ஏறிய குழுவினர், உறுமி மேளம் வாசிப்பவர் நடுவில் நின்று இசைக்க அவரைச் சுற்றி ஆடத் தொடங்குகிறார்கள்.  மயிலுக்குச் சலங்கை கட்டிவிட்டால் என்ன அசைவுகள் கொடுக்குமோ அதுபோல இருந்தது சுற்றி ஆடிய இவர்களது ஆட்டம்.

 

பேச்சுக்கிடையே அம்மாசி சொன்னது சட்டென நினைவில் வந்தது, ‘இதுல ஒன்னும் பெரிசா எங்களுக்கு காசு கிடைச்சிடறதில்ல..ஆனா, இந்த ஆட்டம் எங்களுக்கு உசுரு’ என்றார்.

 

கிராமப்புறக் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என்று தனது கார்ப்பரேட் உலகுக்குப் புறத்தே தள்ளிவைத்து ஒவ்வொரு தமிழர் திருநாளின்போது மட்டும் இந்தக் கலைகள் தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக அரங்கேற்றம் காண்கிறது. மண்ணின் கலைகள் என்கிற பார்வையில் முழுமையானதொரு அரவணைப்பு நமது தமிழ் மண்ணின் இசைக்கும் ஆட்டத்துக்கும் கிடைத்தால் மட்டுமே, இப்படியான அறியப்படாத பல கலைஞர்களின் சுயமரியாதையையும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்