Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு ‛இயல்’ விருது

தொலைந்த வெளிச்சம் 

கார்த்திகை ராத்திரி 
ஏற்றின கடைசி விளக்கை
வைத்து திரும்பும் முன் 
அணைந்துவிடுகின்றது 
முதல் விளக்குகளுள் ஒன்று 
எரிகிறபோது பார்க்காமல் 
எப்போதுமே 
அணைந்த பிறகு தான் 
அதை சற்று
அதிகம் பார்க்கிறோம் 
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தை விட 
அணைந்த பொழுதில் 
தொலைத்த வெளிச்சம் 
பரவுகிறது 
மனதில் பிரகாசமாக.


 - கல்யாண்ஜி


வண்ணதாசன் - இயல் விருது


கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதையும், வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும் எழுதி வரும் வண்ணதாசனுக்கு, 2017-ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 'இயல்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் கனடாவில் நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும். ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய உலகின் ஆளுமைகளுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்  'இயல்' விருது வழங்கி கௌரவித்துவருகிறது. எழுத்தாளர் அம்பை, எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர்.சுகுமாரன் உள்ளிட்டோர் இதற்கு முன் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். 

"சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை"

-கல்யாண்ஜி

வண்ணதாசன் இயற்பெயர் கல்யாணசுந்தரம். 1946-ல் திருநெல்வேலியில் பிறந்தவர். பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்தார். இவருடைய தந்தை தி.க.சிவசங்கரும் எழுத்தாளர். வண்ணதாசன் எழுதிய 'ஒரு சிறு இசை' என்ற கவிதை தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. தன் வாஞ்சையான எழுத்து மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். 'எல்லோர்க்கும் அன்புடன்' என்ற இவரது கடிதங்கள் அடங்கிய தொகுப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதுவரை 15 சிறுகதைத் தொகுப்புகள், 16 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் ஒரு புதினமும் இயற்றியுள்ளார்.

ஓவியம் வரைவதிலும் ஆர்வம் மிக்கவர். மலை முகடுகளிலுள்ள நீரோடையில் மிதக்கும் இலைபோன்ற மென்மையான உணர்வுகளை தன் எழுத்தின் வழியாகக் கடத்த வல்லவர். அன்றாட வாழ்வில் நாம் பார்க்காமல் கடந்தவற்றை தன் எழுத்துகளின் வழியே நமக்கு அறிமுகம் செய்து வைப்பவர். வீட்டின் வாசலுக்கு வெளியே விழுந்து கிடக்கும் பழுத்த இலைகள், பின்புற வாசலில் பூத்துக் குலுங்கும் முல்லை பூ கொடி , ரிடையர்டு ஆன போஸ்ட் மேன் என தன் கதைகளில், கவிதைகளில் எளிமைகளின் அழகை எழுதக் கூடியவர். அவரது 'அகம் புறம்' கட்டுரைத் தொகுப்பிலுள்ள சில வரிகளைப் பார்ப்போம்.

வண்ணதாசன்

"பிரமநாயகம் வருவது இதுதான் முதல் தடவை. வீட்டுக்குள் அவர் வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம்தான் இருக்கும். சரியாகக்கூட சாய்ந்து உட்கார்ந்திருக்கவில்லை. வந்தவுடன் கொடுத்த தண்ணீர், முதல் உபசாரத்தை ஏற்கிற பதற்றத்தில் சிந்தி, அப்படிச் சிந்தின தண்ணீர் முன்சட்டையால் உறிஞ்சப்பட்டுக்கொண்டிருந்தது. கொல்லம் ஓடு உறிஞ்சுவது மாதிரி, செங்கல் கலரில் இருந்த சட்டை அற்புதமாக உலர்கிறபோதே, அவர் சிரித்தார். ஏதோ கேட்கப் போவதுபோல், அந்த அறையையும் தாண்டி உள்ளே பார்த்தார். எதையும் பார்க்காதது போன்றும் அல்லது எல்லாவற்றையும் பார்த்துவிட்டது போன்றும் சிரிப்பு இருந்தது. தலையைக் குனிந்து பிரமு அப்படிச் சிரிப்பது வடக்குவளவுத் தாத்தாவை ஞாபகப்படுத்தியது".

சதா துயரங்களில் அல்லல் படும் மனித மனதுக்கு அதிராத சொற்கள் மூலம்  ஆறுதல் கொடுப்பவர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் வண்ணதாசன் தமிழ்ச் சிறுகதை மற்றும் கவிதை உலகில் தவிர்க்கமுடியாதவர். தமிழின் மிக முக்கியமான படைப்பாளிக்கு விருது கிடைப்பது, அவரது இலக்கிய பணிக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.

வாழ்த்துகள் கவிஞரே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ