வெளியிடப்பட்ட நேரம்: 08:36 (09/01/2018)

கடைசி தொடர்பு:09:46 (09/01/2018)

அடர்த்தியான கறுப்புக் கோடு... கோல்டன் க்ளோப் விருது நிகழ்வில் கவனம் ஈர்த்த டிரெஸ் கோடு!

75-வது கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழா, ஜனவரி 7-ம் தேதி கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. இது, மற்ற விழாக்களைவிட சற்று வித்தியாசமாக நடைபெற்றது. சிவப்புக் கம்பள விரிப்பில் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து வந்த ஹாலிவுட் நடிகைகளின் அணிவகுப்பு, பிரமிப்பை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான விருதுகள் வழங்கும் இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகைகளின், நிலம் தழுவப் படர்ந்திருக்கும் ஃப்லோயி (Flowy) ஆடைகள் முதல் ஷார்ட் டிரெஸ் வரை அனைத்தும் கறுப்பு நிறமே! `டைம்ஸ் அப்' எனும் கேம்பைனின் டிரெஸ் கோடுதான் இந்தக் கருநிற ஆடைகள். அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வியை எதிர்த்து நடந்த போராட்டங்களும், #MeToo #TimesUp உள்ளிட்ட கேம்பைன்களும் உலகம் அறிந்ததே. இதைத் தொடர்ந்து கோல்டன் குளோப் விருதுகள் விழாவில், ஏஞ்ஜலீனா ஜோலி, எம்மா வாட்சன், சாரா ஜெஸ்ஸிகா பார்க்கர் முதலிய முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கருநிற உடைகள் அணிந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

கோல்டன் க்ளோப் விருதுகள்

மெரில் ஸ்ட்ரீப், எம்மா வாட்சன், கேல் கடோட் ஆகியோர் ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை, பெண் சுதந்திரம், சமத்துவம் போன்ற சமூகப் பிரச்னைகளுக்குக் குரல்கொடுத்து வருபவர்கள். இவர்களைப்போல் மேலும் சில நடிகைகள், தன்னார்வம்கொண்டு சேர்ந்த அமைப்புதான் `டைம்ஸ் அப்'. ``இன்று, பெண்கள் அனைவரும் அடர்த்தியான கறுப்பு கோடுபோல் காட்சியளிக்கிறோம். அனைவரும் ஒன்றாக இணைந்திருப்பது ஊக்கமளிக்கிறது" என்று மெரில் ஸ்ட்ரீப் தன் கருத்தைப் பதிவிட்டார்.

கருங்கடல்போல் இந்த விழா காட்சியளித்தாலும், ஒவ்வொருவரின் ஸ்டைலும் தனிப்பட்ட மாஸ் லுக். திரண்ட அழகிகளின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் இதோ...

Meryl Streep

ஆஃப் ஷோல்டர், முழு நீளக்கை, நிலம் தொடும் ஃப்லோயி டிரெஸ். இதற்கு மேட்சாக சிறிய பீட் (Bead) வைத்த காதணி, பெரிய ஃபிரேம் போட்ட கண்கண்ணாடி, கைக்கு அடக்கமாக ஒரு க்ளட்ச். இதுதான் எட்டு முறை கோல்டன் குளோப் விருதைத் தன்வசமாக்கிக்கொண்ட மெரில் ஸ்ட்ரீப்பின் உடை. 68 வயதானாலும் மிடுக்கான தோற்றத்தில் வசீகரித்தார்.

Emma Watson

`ஹாரி பாட்டரில்' ஹெர்மாயினியாக வாழ்ந்த எம்மா வாட்சன், வித்தியாசமான ஸ்லீவ் மற்றும் காலர்களைக்கொண்ட பீக்கபூ ஸ்லிட் டிரெஸ்ஸை உடுத்தியிருந்தார். வேறுபட்ட ஹேர்ஸ்டைலுடன் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார் எம்மா.

Gal Gadot

பல இளைஞர்களின் மனதில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் `வொண்டர் வுமன்' கேல் கடோட், ஃபுல் ஃப்ரில் டிரெஸ் (Full Frill Dress) அணிந்திருந்தார். அதனுடன் கடோட்டின் சிக்னேச்சர் ஸ்டைல் கிராப் ப்ளேசர் அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். டார்க் ரெட் லிப்ஸ்டிக் மற்றும் டேங்க்லர் காதணி வொண்டர் வுமனுக்கு ஏற்ற ஃபினிஷ்.

Vaiola Davis

`டிரிப்பிள் கிரவுன் ஆஃப் ஆக்டிங்' (Triple Crown of Acting) என மகுடம் சூட்டப்பட்ட ஒரே கறுப்பின நடிகை வயோலா டேவிஸ், அவரின் பாரம்பர்ய ஆப்பிரிக்க ஹேர்ஸ்டைலில் தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மைக்கேல் கோர்ஸின் கைவண்ணத்தில் உருவான வெல்வெட் முழுநீள பார்ட்டி டிரெஸ், அதை மெருகேற்றும் வகையில் முத்துமாலை, காதணி மற்றும் கறுப்பு க்ளட்ச் இவற்றுடன் மிளிரும் புன்னகை வயோலாவின் யுனிக் ஸ்டைல்.

Angelina Jolie

ஆண்களின் கனவுக்கன்னி, பெண்களின் ரோல்மாடல், சமூக சேவகி, மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் தாய் எனப் பன்முகங்களைக்கொண்டிருக்கும் ஏஞ்சலீனா ஜோலியின் கேப் ஃபுல் டிரெஸ் க்ளாசிக் டச். ஃபெதர் கஃப்களைக் (Feather Cuff) கொண்டிருக்கும் இந்த டிரெஸ்ஸில் தேவதைபோல் திகழ்ந்தார்.

Mragot Robbie

`The Wolf of Wallstreet', `Suicide Squad', `தி லெஜெண்ட் ஆஃப் டார்ஸான்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் மார்கட் ராபி. ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், சில்வர் நிற எம்ப்ராய்டரி பேட்டர்னில் பிளங்கிங் (Plunging) கழுத்துடைய டிரெஸ்ஸில் ஃபேஷன் அடையாளத்தைப் பதித்தார். அதிகமான அணிகலன்கள் ஏதுமின்றி மிக எளிமையாகக் கலந்துகொண்டார் ராபி.

Nicole Kidman

`Batman Forever'ல் கலக்கிய நிக்கோல் கிட்மேன், சின்னத்திரையின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். ஹய் நெக்லைன் டாப், அதில் ஒட்டப்பட்ட க்ரிஸ்டல் பீட் (Bead), வித்தியாசமான ஸ்லீவ் இவை அனைத்தும் கிட்மேனுக்கே வடிவமைக்கப்பட்டதுபோல் இருந்தன.

Oprah Winfrey

இந்த விழாவின் நாயகி ஓப்ரா வின்ஃப்ரே, ஆஃப் ஷோல்டர் முழுநீள டிரெஸ்ஸில் மிளிர்ந்தார். கோல்டன் குளோப் 75-ம் ஆண்டின் `வாழ்நாள் சாதனையாளர்' விருதுக்குச் சொந்தக்காரரான வின்ஃப்ரே, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழாவில் பதிவுசெய்த உரையாடல் பலருக்கும் ஊக்கமளித்தது. ``இனிவரும் நாள்களில் `#MeToo' என்ற பதிவு இல்லாமல்போகும் காலம் வரும்'' என்று கூறி அனைவரின் அன்பையும் மரியாதையையும் பெற்றார்.

மொத்தத்தில், இது மெளனமாக நடந்த போராட்டக்களமாகவும், செலிபிரிட்டிகளின் கோலாகல விழாவாகவும் இருந்தது. `போல்டு அண்ட் பியூட்டிஃபுல்' அரங்கம்.


டிரெண்டிங் @ விகடன்