'இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை!' துருவக்கரடிகளின் துயரம் சொல்லும் புகைப்படம் | polar bears are fighting for their own survival

வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (09/01/2018)

கடைசி தொடர்பு:14:37 (09/01/2018)

'இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை!' துருவக்கரடிகளின் துயரம் சொல்லும் புகைப்படம்

காலநிலை மாற்றத்தையும் துருவக்கரடிகளின் கடைசி காலத்தையும் இதைத் தவிர வேறு எந்த முறையிலும் சொல்லிவிட முடியாது. உடல் மாறி, உருவம் மாறி, இடம் மாறி, வாழ்க்கை மாறி என எல்லாமே மாறிப்போய் கடைசியில் மறைந்தே போகிற கரடிகள் பற்றிய புகைப்படங்கள் மனதை உலுக்குகின்றன.

பால் நிக்கலன் சீ லீகஸி என்னும் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான பால் நிக்கலன் 2014-ம் ஆண்டு நார்வே நாட்டிலுள்ள ஸ்வால்பார்ட் கடற்கரை ஓரத்தில் இறந்த நிலையில் கிடந்த இரண்டு போலார் கரடிகளின்  உடல்களை புகைப்படம் எடுக்கிறார். அந்த புகைப்படங்களையும் கரடிகள் குறித்த தகவல்களையும் துருவக்கரடிகள்குறித்து ஆராய்ச்சி செய்கிறவர்களிடம் கொடுக்கிறார். “கரடிகள் உணவில்லாமல் பட்டினியால் இறந்திருக்கலாம்” என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

துருவக்கரடி

Photo Credit: Sealegacy / Caters News

ஆர்டிக் பனிப் பிரதேசங்களில் துருவக் கரடிகளுக்கு என்னதான் நடக்கிறது என்பதை அறிய வேண்டுமென்பதை முடிவு செய்கிறவர் தன்னுடைய சீ லீகஸி அமைப்பினரோடு சேர்ந்து துருவக்கரடிகள்குறித்த ஆவணப்படம் எடுக்க முடிவு செய்கிறார். பல இடங்களுக்குப் பயணித்து துருவக்கரடிகள்குறித்த காட்சிகளைப் பதிவு செய்கிறார். கடந்த வருடம் சர்வதேச துருவக்கரடிகள் தினத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறந்துபோன ஒரு துருவக்கரடியின் புகைப்படத்தைப் பதிவிட்டு “இந்த நாளில் நீங்கள் துருவக்கரடியின் அழகான புகைப்படத்தை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், உண்மையில் துருவக்கரடிகள் அப்படியான சூழ்நிலையில் இல்லை. மாறி வரும் காலநிலை மாற்றத்தால் கரடிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றன. காலநிலை மாற்றத்திற்கான காரணிகளை உடனே கண்டறிய வேண்டும்" எனப் பதிவிடுகிறார்.

ஆவணப்படுத்துவதின் ஒரு பகுதியாக  2017 டிசம்பர் 5-ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பால் நிக்கலன் துருவக்கரடிகுறித்த ஒரு காணொளியை வெளியிடுகிறார். ``பஃபின்  தீவில் இந்த துருவக்கரடியை படமெடுக்கும்பொழுது கனத்த இதயத்தோடு எடுக்க நேர்ந்தது. எலும்பும் தோலுமாக இருக்கிற இந்த துருவக்கரடி வயதானது இல்லை. கைவிடப்பட்ட இனுயிட் முகாமில்  உணவு தேடி அலைந்து கொண்டிருக்கிறது. அடுத்த சில நாள்களில் இது இறந்து விடும். இன்னும் 100 ஆண்டுகளில் துருவக்கரடிகள் முற்றிலும் அழிந்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் உலகத்திலுள்ள 25000 துருவக்கரடிகளும் இந்தக் கரடியைப் போலவே இறக்கும் என பால் நிக்கலன் பதிவிட்டிருக்கிறார். காலநிலை மாற்றத்தின் விளைவை உலகுக்கு இதைவிட வேறு எந்த வகையிலும் உணர்த்திவிட முடியாது. இயற்கையின் அழிவில் இது ஒரு தொடக்கம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

Polar bears

Photo Credit: Ashley Cooper / Global Warming Images

2015-ம் வருடம் ஆகஸ்ட் 20 அன்று கெர்ஸ்டின் லங்கன் பெர்கர் ஒரு ஜெர்மன் புகைப்படக்காரர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் துருவக்கரடிகள்குறித்த ஒரு  புகைப்படத்தை வெளியிட்டார்.  நார்வேயின் வடக்கே உள்ள ஆர்டிக் பெருங்கடலில் உள்ள ஸ்வால்பார்ட் என்ற தீவுப் பகுதியில் எழுந்து நடக்க முடியாமல் இருக்கிற உடல் மெலிந்த ஒரு துருவக்கரடி பற்றிய புகைப்படம் அது. "கரடி இன்னும் சில நாள்களுக்கு மேல் உயிர் பிழைக்காது என்று என்னோடு பயணித்த எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தது" கடல் பனிக்கட்டி உருகுதல் மற்றும் உணவு குறைவு ஆகியவற்றின் விளைவாக கரடிகளுக்கு இப்படியான, பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளின் சாத்தியக்கூறுகளையும் அவர் தெரிவித்திருந்தார்.

துருவக்கரடி

Photo Credit: Kerstin Langenberger / Facebook

பருவநிலை மாற்றம் வேகமாக நிகழ்வதால், வன விலங்குகள் தங்கள் இயற்கை வாழிடங்களை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்படுகிறது. இது  துருவப்பகுதிகளில் வாழும் பனிக்கரடிகளுக்கும் பொருந்தும். துருவப்பகுதிகளில் மனிதக் குடியேற்றம் அதிகரித்திருப்பதாலும், பனி உருகுவதாலும் பனிக் கரடிகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வருவதும், தாக்குவதும் அதிகரித்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கனடா, கிரீன்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுகளில் கடந்த இரு நுாற்றாண்டுகளில் நிகழ்ந்த பனிக்கரடி தாக்குதல்களின் எண்ணிக்கையை விஞ்ஞானிகள் ஒப்பிட்டனர். இதில், சராசரியாக, 10 ஆண்டுகளுக்கு எட்டு அல்லது ஒன்பது பனிக் கரடித் தாக்குதல்கள் நிகழ்ந்துவந்தன. ஆனால், கடந்த 2010 முதல் 2014க்குள் மட்டும், 15 தாக்குதல்கள் நிகழந்துள்ளன. எனவே, 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பருவநிலை மாற்றம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பனி உருகி கடல்மட்டம் உயர்வதால் துருவக்கரடிகளுக்கு முக்கிய உணவான சீல்கள்  கிடைப்பதில்லை. சீல்கள் கோடையில் வேகமாக வளர்ந்து போதுமான கலோரிகளைக் கொண்டிருக்கும். பனி உருகும்போது, ​ சீல்களின் எண்ணிக்கை குறைகிறது.  

Polar bears

Photo Credit: Jenny E.Ross

சீல்களின்  எண்ணிக்கை குறைந்தால் என்ன நிகழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக 2011-ம் ஆண்டு ஜென்னி ரோஸ் என்னும் புகைப்படக்காரர் அதிர்ச்சி தரும் சில படங்களைக் வெளியிட்டார். அதில் துருவக்கரடி இன்னொரு துருவக்கரடியைக் கொன்று உணவாக உட்கொள்ளும் காட்சி பதிவாகி இருந்தது. இதற்கு முன்பாக வரலாற்றிலும் சரி; இயற்கையிலும் சரி இப்படி ஒரு மோசமான நிகழ்வு நிகழ்ந்ததே இல்லை என்கிறார் ஜென்னி ரோஸ்.  இயற்கை மோசமான ஒரு பாதைக்கு செல்கிறதாக அப்போது ஆய்வாளர்கள் கூறினார்கள். பனிக்கரடிக்கு இந்தப் பரிதாப நிலை ஏன் வந்தது எனும் கேள்வி ஒவ்வொருவருக்குள்ளும் எழும்.  இதற்கான பதில் எளிதானது. ஆனால், வேதனைக்குரியது!


டிரெண்டிங் @ விகடன்