`மத்தவங்களுக்குத்தானே பிரச்னை... நமக்கென்ன?’ - மனோபாவம் சரியா? நீதிக்கதை #MotivationStory | Caring about others is important in life

வெளியிடப்பட்ட நேரம்: 07:31 (09/01/2018)

கடைசி தொடர்பு:08:23 (09/01/2018)

`மத்தவங்களுக்குத்தானே பிரச்னை... நமக்கென்ன?’ - மனோபாவம் சரியா? நீதிக்கதை #MotivationStory

கதை

`மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்பது சேவை செய்வது, பரிவு காட்டுவது, மற்றவர்களுக்கு உதவுவது’ என்கிறார் ஜெர்மானிய தத்துவவியலாளர், எழுத்தாளர், மருத்துவர் ஆல்பர்ட் ஸ்க்விட்ஸர் (Albert Schweitzer). ஆனால், உண்மை வேறாக இருக்கிறது. ஒருவருக்கு ஒரு பிரச்னை. அது நம்மை பாதிக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நாம், `நமக்குப் பிரச்னை இல்லை’ என்று கொஞ்சம் நிம்மதியடைவோம். இது உளவியல். அவருக்கு ஆலோசனை சொல்வோம். முடிந்தால் உதவுவோம். பக்கத்து வீட்டில் பற்றிய தீ நம் வீட்டுக்கும் பரவும் என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் நினைப்பதோ, உணர்வதோ இல்லை. அடுத்தவரின் பிரச்னை நம்மையும் பாதிக்கத்தான் செய்யும். அதை வெகு எளிமையாக உணர்த்தும் நாட்டுப்புறக் கதை இது. இன்றைய வாட்ஸ்அப், ட்விட்டர் காலத்தில்கூடப் பொருந்தக்கூடிய பல நீதிக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள் உலகெங்கும் விரவிக்கிடக்கின்றன. இங்கிலாந்தில் காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் இந்த நாட்டுப்புறக் கதை அந்த உண்மையை எளிமையாக உணர்த்துகிறது. 

எலி - கதை

அது ஓர் எலி. அந்த விவசாயியின் வீட்டில் ரொம்ப காலமாக வசித்துவருகிறது. அன்றைக்கு இரவு விவசாயியும் அவர் மனைவியும் கடைத்தெருவுக்குப் போய்விட்டு வந்திருந்தார்கள். பையைத் திறந்து ஒன்றை எடுத்தார்கள். `அது என்ன உணவு’ என்று நாக்கைச் சப்புக்கொட்டியபடி எலி, சுவரில் இருந்த ஓர் ஓட்டையின் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தது. அவர்கள் பையிலிருந்து எடுத்த பொருளைப் பார்த்ததும் அரண்டுபோனது. அது ஓர் எலிப்பொறி. தன்னைக் கொல்வதற்கு அவர்கள் திட்டம்போட்டிருக்கிறார்கள் என்பது எலிக்குப் புரிந்துவிட்டது.

உடனே பண்ணைக்குள் ஓடியது எலி. ``ஏய்... இந்த வீட்டுக்கு ஒரு எலிப்பொறி வந்திருக்கு’’ என்று சத்தமாகச் சொன்னது. இதை பண்ணையிலிருந்த ஒரு கோழி கேட்டது. ``மிஸ்டர் எலி! அது உனக்குத்தான் கல்லறை. அதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை’’ என்றது.

எலி ஓடியது. பண்ணையிலிருந்த வெள்ளைப் பன்றியிடம் போய் நின்றது. ``இந்த வீட்டுக்கு ஒரு எலிப்பொறி வந்திருக்கு’’ என்றது. பன்றி பரிவோடு சொன்னது... ``நல்லது. உனக்காக நான் பிரார்த்தனை செய்றேன். அதைத் தவிர என்னால வேற ஒண்ணும் செய்ய முடியாது.’’

எலி மீண்டும் பண்ணையின் வேறொரு திசையில் ஓடியது. அங்கிருந்த பண்ணை மாட்டிடம் ``நம்ம வீட்டுக்கு ஒரு எலிப்பொறி வந்திருக்கு’’ என்று சொன்னது. ``அப்பிடியா? ரொம்ப நல்லது. உனக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன். அந்த எலிப்பொறியால என் மூக்கைக்கூட ஒண்ணும் செய்ய முடியாது’’ என்று சொல்லிச் சிரித்தது.

எலி சோகத்தோடு தன் இருப்பிடம் திரும்பியது. இந்தப் பிரச்னை தனக்கு மட்டும்தானா? மற்றவர்களுக்கு அதைப் பற்றி அக்கறையே இல்லையா? கவலை எலியை வாட்டியது. அன்று இரவு அந்த எலிப்பொறியிலிருந்து எழுந்த சத்தம் அந்த மொத்தப் பண்ணை வீட்டையும் அதிரவைத்தது. விவசாயியின் மனைவி எலிப்பொறியில் மாட்டியிருக்கும் எலியைப் பார்ப்பதற்காக ஓடினாள். இருட்டில் அவளுக்குத் தெரியவில்லை... எலிப்பொறியில் மாட்டியிருந்தது ஒரு பாம்பின் வால் என்பது. அவள் எலிப்பொறியின் அருகில் போனதும், பாம்பு அவளைக் கொத்திவிட்டது. ஓடிவந்த விவசாயி, பாம்பை அடித்துப்போட்டுவிட்டு, மனைவியைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். 

பாம்பு - கதை

சிகிச்சை முடிந்து மறுநாள் விவசாயியின் மனைவி வீடு திரும்பினாள், ஆனால், அவளுக்குக் கடுமையான காய்ச்சலிருந்தது. அடுத்த நாள் நலம் விசாரிக்க வந்தார்கள் ஊர்க்காரர்கள். அவர்களில் ஒருவர் சொன்னார்... ``கோழியடிச்சு, சூப்வெச்சுக் குடுப்பா... ஜூரம் ஓடிப் போயிரும்.’’ விவசாயி தன் பண்ணையில் வளர்த்துவந்த அந்தக் கோழியைப் பிடித்து, அடித்து, சூப் செய்து மனைவிக்குக் கொடுத்தார். ஆனாலும் அவர் மனைவிக்கு காய்ச்சல் குறையவில்லை.

விவசாயியின் வீட்டுக்கு நலம் விசாரிக்க வருபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே போனது. ஒருநாள் விருந்தினர்களுக்கு சமைப்பதற்காக, பண்ணையில் இருந்த பன்றியைப் பிடித்து, அதை அடித்து விருந்தாக்கினார் விவசாயி.

அந்த துரதிர்ஷ்டம்பிடித்த விவசாயியின் மனைவி பிழைக்கவில்லை. இறந்து போனாள். இறுதிச் சடங்குக்கு ஊரே திரண்டு வந்தது. வந்தவர்களுக்கு விருந்துவைக்க வேண்டுமே... விவசாயி, பண்ணையிலிருந்த மாட்டை அடித்து, சமைத்து விருந்து படைத்தார். அந்த விருந்தில் ஊரே சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அதை அந்த எலி சுவர் ஓட்டையிலிருந்து வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது.

***

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close