’’என் பரிந்துரை இந்த 5 புத்தகங்கள்!’’ - எஸ்.ராமகிருஷ்ணன் #ChennaiBookFair

``நான் வாசித்த எல்லாவற்றையும் சேர்த்த ஒரு பகுதியே நான்" - தியோடர் ரூஸ்வெல்ட். புத்தகங்கள், மனிதகுலத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவருபவை. ஒரு புத்தகத்தை நாம் படிப்பதன் மூலம் நாம் பார்க்காத, உணராத விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். பெரும் சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் இவர்கள் எல்லோரையும் ஏதாவது ஒரு புத்தகம் அவர்களின் இலக்கை நோக்கி உந்தித் தள்ளியிருக்கும். வாழ்வில் பெருந்தோல்வியிலிருந்து மீண்ட பலருக்கும் ஒரு புத்தகம் உடன் இருந்திருக்கும். நம் அறையில் நம்முடனே இருக்கும் நண்பன்தான் புத்தகம். நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து படிப்பது ஒரு கலை. சென்னையில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியையொட்டி  தமிழின் முக்கியமான எழுத்தாளர்களிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்களையும் கேட்டிருந்தோம். வாருங்கள் வாசிப்போம்.

புத்தகங்கள்எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழின் மிக முக்கியமான கதைசொல்லி. மனித மனங்களின் அன்பை, துயரை, பரிதவிப்பை தன் எழுத்துகளின் வழியே கடத்தும் தேசாந்திரி. இந்தியா முழுவதும் சுற்றியலைந்து தான் பெற்ற அனுபவங்களை, பரவசத்தை வாசகனுக்குக் கடத்துவதில் வல்லவர். வாசகர்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கிவருபவரைச் சந்தித்தோம்.

ஒருவன் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்தோம். அதற்கான அவரது பதில்...

``வாழ்க்கை நம் ஒவ்வொருவரையும் குறிப்பிட்ட ஒரு சூழலில் குறிப்பிட்ட கால, இனம், குடும்பத்துக்குள் வாழ மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால், புத்தகங்கள் ஒருவனை எல்லா காலங்களுக்குள் சென்று வரவும், பல்வேறு மனிதர்களை, நிலவெளியை, அனுபவங்களை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. அந்த வகையில் புத்தகங்களே உண்மையான கால இயந்திரம். புத்தகங்களை வாசிப்பதன் வழியே உலகைத் தெரிந்துகொள்வதுடன் நம்மைப் பற்றியும் அறிந்துகொள்கிறோம். நம்மிடம் உருவாகும் மாற்றங்கள் சமூகத்திலும் எதிரொலிக்கும் என்பதே நிஜம்.

`நீங்கள் என்ன புத்தகம் வாசிக்கிறீர்கள் எனக் கூறுங்கள், நீங்கள் யார் எனச் சொல்லிவிடுவேன்' என்று எப்போதும் கூறுவேன். அது உண்மை. புத்தகங்கள் ஒரு மனிதனின் அகத்தை வெளிப்படுத்திக் காட்டக்கூடியவை. சொற்கள், வெறும் அச்சிடப்பட்ட வார்த்தைகள் அல்ல. அவை நம் ஒவ்வொருவருக்குமான வாழ்க்கை வழிகாட்டி. ஆகவே, நிறைய வாசியுங்கள். வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்களை வாசிக்கவையுங்கள். அதுவே உங்கள் வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் அவசியம்"  என்றார். 

எஸ்.ரா பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள்:

1) புதுமைப்பித்தன் சிறுகதைகள்:

புதுமைப்பித்தன், தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியர். எளியவர்களின் வாழ்வை தன் எழுத்துகளின் வழியே சொன்னவர். 1948-ம் ஆண்டு புதுமைப்பித்தன் மறைந்தாலும் அவரது எழுத்துகளோ இன்று வரையிலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவருகின்றன. 

2) கு.அழகிரிசாமியின் சிறுகதைகள்: 

தமிழில் குழந்தைகளின் உலகம் சார்ந்த கதைகள் எழுதியவர் கு.அழகிரிசாமி. `இருவர் கண்ட ஒரே கனவு' சிறுகதை மிகவும் பிரபலம். 

3) தி.ஜானகிராமன் சிறுகதைகள்:

`தி.ஜா' என அழைக்கப்படும் தி.ஜானகிராமன், மனித மனதின் உறவு சார்ந்த, உணர்வுநிலை சார்ந்த கதைகளை எழுதியவர்.

4) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன் : (நாவல்)

தமிழ் இலக்கிய உலகில் மிகவும் கொண்டாடப்பட்ட விமர்சிக்கப்பட்ட ஆளுமை ஜெயகாந்தன். தான் எழுதுவதை நிறுத்திக்கொண்ட பிறகும் தொடர்ந்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். இவரது நாவல்களில் மிக முக்கியமானதாக பலராலும் பரிந்துரை செய்யப்படும் நாவல் `ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்'. 

5) வாடிவாசல் - சி.சு.செல்லப்பா: (நாவல்) முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல். சி.சு.செல்லப்பா தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர். `எழுத்து' என்ற சிறுபத்திரிகையை நடத்தி தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமான முன்னெடுப்பைச் செய்தவர்.

இந்த ஐந்து புத்தகங்களையும் வாசகர்களுக்குப் பரிந்துரை செய்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!