வெளியிடப்பட்ட நேரம்: 07:49 (10/01/2018)

கடைசி தொடர்பு:07:49 (10/01/2018)

கடவுளிடமிருந்து கடிதம்... ‘உதவும் உள்ளமே உயர்வானது’ - உணர்த்தும் கதை! #FeelGoodStory

தன்னம்பிக்கை கதை

பிறருக்குக் கொடுக்க என்ன இருக்கிறதோ, அது மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது’ என்று சொல்கிறார் பிரபல சிலி எழுத்தாளர் இஸபெல் அலெண்டே (Isabel Allende). `எதைக் கொண்டு வந்தோம், கொண்டு போக...’ என்று தத்துவமெல்லாம் பேசினாலும், படித்தாலும்கூட சக மனிதர்கள்பால் அக்கறையுள்ளவர்கள் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறார்கள். கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறவர்களுக்குத்தான் அந்த மனம் வாய்க்கும். உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பல கோடி மனிதர்கள் வாழும் உலகில் அவர்களைத்தான் இயற்கை நேசிக்கிறது. அவர்களைத்தான் தேவதைகள் தேடிப்போய் வாழ்த்திவிட்டு வருகிறார்கள். இந்த அருமையான உண்மையை ஓர் எளிய கதை தெளிவாகச் சொல்கிறது. 

அது, அமெரிக்காவிலுள்ள ஒரு சிறு நகரம். அந்தப் பெண்மணியின் பெயர் ரோஸி! கஷ்டப்படுகிற மனுஷி. பொருத்தமான, நல்ல வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுகொண்டிருந்தார். ஒரு காலைப் பொழுதில் வெளியே போய்விட்டு வீடு திரும்பினார். வாசலில் இருந்த லெட்டர் பாக்ஸில் ஒரு கடித உறை கிடந்தது. எடுத்துப் பிரித்துப் பார்த்தார். கடித உறையில் ரோஸியின் பெயர் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டாம்ப்போ, போஸ்ட் ஆஃபிஸ் முத்திரையோ, அனுப்பியவர் முகவரியோ இல்லை. 

கடிதம்

ரோஸி கடிதத்தை எடுத்துப் பிரித்தார். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது... `பிரியத்துக்குரிய ரோஸி... இன்று மாலையில் உன் வீட்டுப் பக்கம்தான் வருகிறேன். உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எப்போதும் அன்புடன்...’ என்று எழுதப்பட்டிருந்தது. அதற்குக் கீழே கையெழுத்துப் போடுமிடத்தில் இருந்த பெயரைப் பார்த்துதான் அதிர்ந்துபோனார் ரோஸி. `ஜீஸஸ்’ என்று எழுதியிருந்தது. பொதுவாகவே இப்படி ஓர் அனாமதேயக் கடிதம் வந்தால் நம்மில் பலர் என்ன செய்வோம்? `யாரோ கேலிக்காக எழுதியிருக்கிறார்கள்’ என்றோ, `இது என்ன பைத்தியக்காரத்தனமான விளையாட்டு?’ என்றோ நினைத்துக்கொண்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவோம். ஆனால், ரோஸி அப்படியில்லை.  

`ஐயய்யோ... இந்த நேரம் பார்த்து இயேசு நம்மைப் பார்க்க வருகிறாரே... அவருக்குக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே..!’ என்று நினைத்தார். விருந்தினர்கள் வந்தால் கொடுப்பதற்கு எதுவும் இல்லாத சமையலறை அவர் நினைவுக்கு வந்தது. அவசரமாக தன் ஹேண்ட் பேக்கைத் திறந்து பார்த்தார். அதில் ஐந்தே ஐந்து டாலர் பணம் இருந்தது. `இதுவாவது இருக்கிறதே...’ என்று பெருமூச்சுவிட்டுக்கொண்டார் ரோஸி. 

கையில் டாலர் பணம்

வீட்டுக் கதவைப் பூட்டினார். கையிலிருக்கும் பணத்தைக்கொண்டு என்ன வாங்கலாம் என்று யோசித்தபடியே நடந்தார். மார்க்கெட்டில் அவர் வைத்திருந்த பணத்தில் ஒரு பிரெட் பாக்கெட், சிறிது பால், கொஞ்சம் வான்கோழி இறைச்சி மட்டுமே வாங்க முடிந்தது. ரோஸியிடம் மீதமிருந்தது சில சென்ட் பணம் மட்டுமே. விருந்தினராக வருபவர் கடவுள். விருந்து வைக்க மிகக் குறைவான பொருள்கள். ஆனால், நிறைந்த மனத்தோடு வீடு திரும்பினார் ரோஸி. 

இயேசு எப்படியிருப்பார், அவரிடம் என்ன பேசலாம் என்றெல்லாம் யோசித்தபடி நடந்த ரோஸியை ஒரு குரல் தடுத்தது. ``மேடம்... எங்களுக்கு உதவி செய்ய முடியுமா?’’ 

ரோஸி திரும்பிப் பார்த்தார். சாலையோரமாக ஓர் ஆணும் அவர் மனைவியும் நின்றுகொண்டிருந்தார்கள். அழுக்காகிப் போய் கிழிந்திருக்கும் உடை, எண்ணெய் காணாத தலை. பார்க்கவே பரிதாபமாக இருந்தார்கள் அவர்கள். 

“மேடம்... எனக்கு வேலையில்லை. நானும் என் மனைவியும் தெருவுலதான் கிடக்கோம். ரொம்பக் குளிரா இருக்கு, அதைவிட ரொம்பப் பசியா இருக்கு. உங்களால முடிஞ்ச உதவியை எங்களுக்கு செய்ங்களேம்மா...’’ 

“ஐயா... எனக்கும் உங்களுக்கு உதவணும்னுதான் ஆசையா இருக்கு. ஆனா, நானும் உங்களை மாதிரி ஏழை. என்கிட்ட இப்போ இருக்குறது இந்த ரொட்டியும், கொஞ்சம் வான்கோழி இறைச்சியும், பாலும்தான். ஆனா, இன்னிக்கி சாயந்திரம் ஒரு முக்கியமான விருந்தாளி எங்க வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காரு. அவருக்காகவெச்சிருக்கறதை எப்படி உங்களுக்குக் கொடுப்பேன் சொல்லுங்க...’’ 

பிரெட்

“பரவாயில்லை மேடம். எனக்கு உங்க நிலைமை புரியுது. ரொம்ப தேங்க்ஸ்’’ என்று சொன்ன அவர், தன் மனைவியை அழைத்துக்கொண்டு பக்கத்திலிருந்த ஒரு குறுகலான தெருவை நோக்கி நடந்தார். அவர் அப்படிச் சொன்னது ரோஸிக்கு இதயத்தில் லேசாக வலியை உண்டாக்கியது. “ஐயா... கொஞ்சம் நில்லுங்க...’’ என்றார். 

இருவரும் நின்றார்கள். “இந்தாங்க இந்த சாப்பாட்டை நீங்க ரெண்டுபேரும் சாப்பிடுங்க. வர்ற விருந்தாளிக்கு நான் வேற ஏதாவது குடுத்துக்குறேன்’’ என்று சொல்லி தன் கையிலிருந்ததையெல்லாம் அவரிடம் கொடுத்தார் ரோஸி. 

“ரொம்ப நன்றிங்கம்மா’’ என்று சொன்னபடி அவர் ரோஸி கொடுத்த உணவை வாங்கிக்கொண்டார். அப்போதுதான் ரோஸி கவனித்தார்... அந்தப் பெண் குளிரில் வெகுவாக நடுங்கிக்கொண்டிருந்ததை. உடனே தன் மேல் கோட்டைக் கழற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்து, அணிந்துகொள்ளச் சொன்னார். “வீட்ல நான் இன்னொரு கோட்வெச்சிருக்கேன். அதை நான் போட்டுக்குறேன்’’ என்று சொல்லிச் சிரித்தார். 

பிறகு நிறைந்த மனதுடன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார் ரோஸி. குளிரில் லேசாக உடல் நடுங்கியது. `இயேசு வந்தால் அவருக்கு என்ன கொடுப்பது, வீட்டில் வேறு என்ன இருக்கிறது, எதை விற்கலாம்?’ என்று யோசித்தபடி நடந்தார். வீட்டு வாசலில் இருந்த லெட்டர் பாக்ஸில் இன்னொரு கடிதம் இருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் படித்தார் ரோஸி. ‘அன்புள்ள ரோஸி, உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நீ அளித்த அருமையான உணவுக்கும் கோட்டுக்கும் என் நன்றி. - ஜீஸஸ்’ என்று அதில் எழுதியிருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்