Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செடான்... எஸ்.யூ.வி... ஹேட்ச்பேக்... பெண்களுக்குப் பிடித்த கார் எது தெரியுமா?

ஆண்கள் எப்போதும் ஆண்களாக மட்டுமே சிந்திப்பார்கள். கார் வாங்கும் விஷயத்திலும் அது உண்மைதான் போல... Premon Asia எனும் நுகர்வோர் அமைப்பு, சமீபத்தில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கார் வைத்துள்ள பெண்களும், வீட்டுக்கு எனப் பொதுவாக கார் இருந்தாலும், தனக்கென கார் வேண்டும் என்று நினைக்கும் பெண்களும், தன்னைச் சார்ந்த பெண்ணுக்கு கார் பரிசாகக் கொடுக்க நினைக்கும் ஆண்களையும் மையமாக வைத்து, இந்தியாவில் உள்ள 28 நகரங்களில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், பெண்களின் மனநிலையையும் அவர்கள் காரில் எதை விரும்புகின்றனர் என்பதையும் சொல்கிறது.

கார்

பெண்கள் அனைவரும் ஆல்ட்டோ 800, ஃபோக்ஸ்வாகன் பீட்டில் போன்ற அழகான சோப்பு டப்பா போன்ற கார்களையே விரும்புவார்கள் என்றும், அதிலும் சிவப்பு, பிங்க் என குறிப்பிட்ட சில வண்ணங்கள் கிடைத்தால், நிச்சயம் வாங்கி விடுவார்கள் என நம்பப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போதும், பெண்கள் காரின் நிறத்தில் கவனம் செலுத்துவதே இல்லை என்று சொல்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வில் 16 சதவிகித பெண்கள் மட்டுமே, ஒரு குறிப்பிட்ட நிறத்துக்காக காரை வாங்கியதாகச் சொல்கிறார்கள். பெண்களின் கார் தேர்வை பெரிதும் ஈர்ப்பது காரின் பிராண்ட்தான். தயாரிப்பாளரின் பிராண்ட் இமேஜை பார்த்துத்தான் பெண்கள் காரை தேர்வு செய்கிறார்களாம். வீட்டில் பயன்படுத்தும் குக்கரை வாங்கும்போதுகூட குறிப்பிட்ட கம்பெனி குக்கர்தான் வேண்டும் என்று கேட்கும் பெண்கள், காரை மட்டும் பார்த்த உடனே தேர்வு செய்துவிடுவார்களா என்ன? 

பிராண்ட் மட்டும் போதுமா? அடுத்து, பெண்கள் ஆராய்வது காரின் ஸ்டைல். தெருவில் காரை ஓட்டிச் சென்றால், நம்மை நான்கு பேராவது திரும்பிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை கார் வாங்கும் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதற்காகவே ஸ்டைலான கார்தான், பெண்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கிறது. கூடிய விரைவில் சாமுத்திரிகா லட்சணங்கள் கொண்ட கார் வந்தாலும்கூட ஆச்சர்யம் இல்லை. 

பிராண்ட் மற்றும் ஸ்டைலில் அதிக ஈடுபாடு செலுத்தும் பெண்கள் - பட்ஜெட், மைலேஜ், குறைவான டர்னிங் ரேடியஸ் போன்ற நடைமுறை தேவைகளில் போதுமான கவனத்தை செலுத்துவதில்லை. ஆனால், பெண்களுக்காக கார் வாங்கும் ஆண்கள், இந்த நடைமுறை தேவைகளில் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. பெண்களுக்காக கார் வாங்கும் முடிவில் உள்ள ஆண்களிடம் கேட்டபோது, 80 சதவிகித ஆண்கள் பட்ஜெட்டைப் பொறுத்துத்தான் காரைத் தேர்வு செய்வதாகவும், 63 சதவிகித ஆண்கள் கார் வாங்கிய பிறகு அதற்கான பயன்பாட்டுச் செலவு குறைவாக இருக்குமா என்று கணக்கிட்டு, தங்களுக்கான காரை தேர்வு செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள். 

கார்

பெண்களுக்காக ஆண்கள் காரை தேர்வு செய்யும்போது, குறைந்த தூரம் பயணிக்கவும் சுலபமாகப் பயணிக்கவும் மட்டுமே கார் தேவை எனும் மனநிலையில் இருப்பதால், பெரும்பாலும் விலை குறைந்த வேரியன்டையே தேர்வு செய்கிறார்கள். ஆனால் பெண்கள், தாங்கள்; கார் வாங்கும்போது, இந்த ஆரம்ப வேரியன்ட்களைக் கண்டுகொள்வதே இல்லை. அதிகச் சிறப்பம்சங்கள் கொண்ட டாப் வேரியன்ட் அல்லது மிட் வேரியன்ட் காரையே தேர்வு செய்கிறார்கள். மேலும், இந்த ஆய்வின்போது பெண்கள், காரின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற விஷயங்களில் அதிகம் செலவு செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளனர். 

ஒரு காரை வாங்கும்போது பெண்களின் முக்கியமான தேவைகளாக இருப்பது, பாதுகாப்பு வசதிகள் மற்றும் சொகுசு. இதற்காக அதிகம் செலவு செய்வதற்குக்கூட அவர்கள் தயங்குவதில்லை. செக்யூரிட்டி அலாரம் சிஸ்டம், ரோடு அசிஸ்ட் சர்வீஸ், பார்க்கிங் கேமரா மற்றும் ஆட்டோமேட்டிக் டோர் லாக்கிங் சிஸ்டம்... இவையெல்லாம் பெண்கள் கூடுதலாகச் செலவு செய்யும் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவை. சர்வீஸின்போது பிக்அப்-ட்ராப் வசதி, கார் சர்வீஸ் எந்த அளவில் முடிந்திருக்கிறது என்பதைப் பார்க்க மொபைல் ஆப் போன்றவற்றுக்கும் புதிய காரின் தேர்வில் முக்கியத்துவம் உள்ளது. மேலும், பெண்கள் டிராஃபிக் சிக்னலில் காத்திருக்கும் நேரம்கூட வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ போன் செய்வது, ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களை விரும்புவதால், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சாட்டிலைட் நேவிகேஷன் போன்றவை பெண்களின் தேர்வு பட்டியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கார்

ஆண்கள் கார் வாங்கும்போது சமூக வலைதளங்களையும், ஆட்டோமொபைல் பத்திரிகைகளையும், அது தொடர்பான இணையதளங்களையும் அதிகம் வாசித்துவிட்டு காரை முடிவுசெய்கிறார்கள். ஆனால், பெண்கள் செவி வழி செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல்கிறது இந்த ஆய்வு. கார் வாங்கும் முன்பு இணையதளத்தையோ, சமூக வலைதளங்களையோ பார்க்காமல் நண்பரிடம், உறவினரிடம் அல்லது வாங்க நினைக்கும் காரை வைத்திருக்கும் ஒருவரிடம் விசாரித்துவிட்டுத்தான் முடிவு செய்கிறார்களாம் பெண்கள்.

இந்தியாவில் தற்போது SUV-களின் விற்பனை வளர்ந்து வரும் நிலையில், ஆய்வில் பங்கேற்றவர்களில் 13 சதவிகித பெண்கள் SUV வைத்துள்ளதாகவும், 21 சதவிகித பெண்கள் புதிதாக SUV வாங்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள். பைக்குக்கு ராயல் என்ஃபீல்டு எப்படியோ, அப்படியே காரை பொறுத்தவரை, பெண்களைக் கடினமானவர்களாக SUV காண்பிப்பதால், SUV மேல் பெண்களுக்கு எப்போதுமே ஒரு கண் உள்ளது. பெண்கள் சுதந்திரமாக இருக்க நினைக்கிறார்கள்; தாங்கள் யாரையும் சார்ந்து வாழக் கூடாது எனும் மனநிலை, எல்லாப் பெண்களுக்குமே உள்ளது. இக்காரணத்திற்காகவே பெண்கள் காரோ, பைக்கோ அல்லது ஸ்கூட்டரோ வாங்க நினைக்கிறார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement