வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (10/01/2018)

கடைசி தொடர்பு:19:13 (10/01/2018)

சுற்றுலாப் பயணிகளைப் பரவசப்படுத்தும் நாட்டிய விழா... மாமல்லபுரக் கொண்டாட்டம்!

சென்னை மக்களின் ஒருநாள் பொழுதுபோக்குப் பயணப் பட்டியலில் முதல் இடம் வகிப்பது, கிழக்கு கடற்கரைச் சாலை. சாய்பாபா கோயில், வி.ஜி.பி., முட்டுக்காடு படகுத்துறை, எம்.ஜி.எம்., மாயாஜால், முதலைப் பண்ணை, திருவிடந்தைப் பெருமாள் கோயில், கடற்கரை ரிசார்ட்டுகள், மாமல்லபுரம்... இப்படி ஒரு நாளில் பொழுதைக் கழிக்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. அதில் பெரும்பாலான சென்னைவாசிகளின் தேர்வு மாமல்லபுரம்! புலிக்குகை, அர்ஜுனன் தபசு, கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், லைட் ஹவுஸ் இப்படி மாமல்லபுரம் முழுக்கவே பல்லவர்களின் வரலாற்று வியப்பை ஏற்படுத்தும் பரவச அனுபவங்கள் பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத படைப்புகள் அவை. கூடுதலான ஒரு பொழுதுபோக்கு என்றால், அது நாட்டிய விழாதான். மாலை 5.30 மணிக்குத் தொடங்கும் நாட்டிய விழாவில் நடனங்கள், பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள் கண்களைக் கவரும். இதமான கடற்கரைக் காற்று, பச்சைப்பசேலென புல்தரை, அதனுடன் இசையும் நடனமும் பார்ப்பவர்களின் மனதைக் குதூகலப்படுத்தும். நமது விருப்பம்போல் ஒய்யாரமாக ஓர் இடத்தில் குடும்பமாக அமர்ந்து ரசிக்கலாம்.

மாமல்லபுரம்

ஆரம்பகாலத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக `பொங்கல் சுற்றுலா விழா’வாகத் தொடங்கப்பட்டது. அப்போது பொங்கல் தினங்களில் மூன்று நாள்கள் மட்டுமே இந்தக் கலை நிகழ்ச்சி நடைபெறும். தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினரே இந்த நிகழ்ச்சியை நடத்திவந்தனர். அவர்களே இதில் பங்குபெற்றனர். அதைத் தொடர்ந்து, 1992-ம் ஆண்டு முதல் இந்த விழா, `மாமல்லபுரம் நாட்டிய விழா’வாக மாற்றப்பட்டது. அதை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடத்திவந்தார்கள்.

நாட்டிய விழா

டிசம்பர் 25-ம் தேதியிலிருந்து ஜனவரி 25-ம் தேதி வரை ஒரு மாதம் தொடர்ந்து நடைபெற்றது. அதில் பரதநாட்டியம் பிரதானமாகவும், குச்சுப்புடி, ஒடிசி போன்ற நடனங்களும் நடைபெற்றன. வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற வார இறுதியில் மட்டுமே இந்த விழா நடைபெற்றுவந்தது. தமிழக நாட்டுப்புறக் கலைகளும் இதில் இடம்பெற வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியதையடுத்து, தமிழக நாட்டுப்புறக் கலைகளும் இதில் இடம்பெற்றன. இதனால் வெளிநாட்டுப் பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மாமல்லபுரம் நாட்டிய விழா.

மாமல்லபுரம்

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டு, 2010-ம் ஆண்டிலிருந்து `இந்திய நாட்டிய விழா’வாகக் கொண்டாடப்படுகிறது. டிசம்பரில் தொடங்கும் இந்த விழா, தொடர்ச்சியாக ஒரு மாதம் நடைபெறும். கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதால், அர்ஜுனன் தபசு அருகே நடைபெற்றுவந்த இந்த விழா, கடற்கரைக் கோயில் பகுதிக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து நடத்தப்படுகிறது.

மாமல்லபுரம்

மாலை 5.30-மணிக்குத் தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறும் இந்த விழாவில், தினமும் மூன்றுவிதமான வெவ்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. தற்போது இந்தியச் சுற்றுலா அமைச்சகம் மற்றும் தமிழகச் சுற்றுலாத் துறையும் இணைந்து இந்திய நாட்டிய விழாவை நடத்திவருகின்றன. அதில் குஜராத், மணிப்பூர், கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் நடனங்களும் நாட்டுப்புறக் கலைகளும் இடம்பெறுகின்றன. நாட்டிய விழாவைப் பார்க்க வருபவர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிப்பதில்லை.

மாமல்லபுரம்

2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட `ஒன்றே பாரதம்... ஒப்பிலா பாரதம்’ என்ற திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு, காஷ்மீர் மாநிலத்துடன் 2017-2018-ம் ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் அடிப்படையில் காஷ்மீரி நடனங்களான டோக்ரி, காஷ்மீரி, லடாக்கி, தாம்பாலி, பாக் நாக்மா, பவுறாரி, கோஜ்ரி, அரன், கீத்ரு, சஜ்ஜா உள்ளிட்ட நடனக் கலை நிகழ்ச்சிகளும் இதில் நடைபெறுகின்றன. டிசம்பர் 22-ம் தேதி தொடங்கிய நாட்டிய விழா, ஜனவரி 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாலை நேரத்தில் வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு உள்ள சிற்பங்களைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், மாலையில் கடற்கரைப் பகுதியில் நடைபெறும் நாட்டிய விழாவுக்கும் வருகின்றனர். `வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றுடன் தமிழர்களின் வரலாறு, தொன்மை குறித்த நாடகங்களும் இடம்பெறவேண்டும்’ என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க