வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (10/01/2018)

கடைசி தொடர்பு:17:13 (10/01/2018)

பாரம்பர்யக் கலைகளை எழுத்துவடிவில் சேர்க்கும் மாத இதழ்... ‘ஸ்ருதி’ 400-வது பதிப்பு!

இசை, நடனம், நாடகங்கள் சொல்லும் கதைகள் ஏராளம். அப்படிப்பட்ட நம் நாட்டின் பாரம்பர்யக் கலைகளையும் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் `ஸ்ருதி' மாதப் பத்திரிகை, தனது 400-வது பதிப்பை வெற்றிகரமாக வெளியிட்டுக் கொண்டாடியது. சங்கீத கலாநிதி N.ரவிகிரண், நாட்டியக் கலாநிதி ஷாந்தா மற்றும் V.P.தனஞ்செயன் உள்பட பிரபல கலைஞர்கள் முன்னிலையில் புத்தகத்தை வெளியிட்டார் மியூசிக் அகாடமியின் துணைத் தலைவர் சேஷசாயி. டாக்டர் சுதா ராஜா இயக்கத்தில், கர்னாடிக், ஃபோக் உள்ளிட்ட வெவ்வேறு வகையான இசைப் பாணிகளைத் தொடுத்து, வேறுபட்ட கச்சேரியுடன் தொடங்கியது இந்த வெற்றி விழா.

ஸ்ருதி

இசைக் கலைஞரும் ‘ஸ்ருதி' பத்திரிகையின் தலைமை ஆசிரியருமான ஸ்ரீபட்டாபிராமால் நிறுவப்பட்ட `ஸ்ருதி', 1983-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தனது முதல் பதிப்பை வெளியிட்டது. இந்தியாவின் பாரம்பர்யக் கலைகள் அனைத்தையும் எழுத்துவடிவில் சேர்த்துவிடுகிறது இந்த மாத இதழ். நாட்டியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், கலை ஆசிரியர்கள், அறிஞர்கள், நுண்கலை ஆய்வாளர்கள் என அனைவரையும் ஈர்க்கும்வகையில் அமைந்ததுதான் இந்த வெற்றிக்குக் காரணம்.

“கர்னாடக இசையின் ஜாம்பவான் D.K.பட்டம்மாள் மற்றும் இளைய இசைமேதை மாண்டோலின் ஸ்ரீனிவாஸ் இவர்கள் இருவரும்தாம் முதல் பதிப்பின் கவர் பேஜில் இடம்பிடித்தவர்கள். மிகவும் சந்தோஷமான தருணம் அது. இவர்களைப்போல் இசை உலகில் சாதனை செய்துவரும் சின்னக் குழந்தைகளிலிருந்து லெஜெண்ட்ஸ் வரை எல்லோரையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்திவருகிறது `ஸ்ருதி'. உலகெங்கிலும் வியாபித்திருக்கும் இசை, நடனம், நாடகக் கலைஞர்கள் எல்லாருக்கும் மிகப்பெரிய முகவரியாக இருக்கிறது `ஸ்ருதி' "  என, நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார் ஸ்ருதி புத்தகத்தின் தலைமைப் பதிப்பாசிரியர் ராம் நாராயணன்.

Sruti 400

“இசை மற்றும் நடனத்துக்காக எத்தனையோ புத்தகங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் புதுமைகள் நிறைய புகுத்தி, தெளிவாகவும் அழகாகவும் வெளியிடுவதால்தான் இசைப் பதிப்பகத்தில் இன்றும் முதல் இடத்தில் இருக்கிறது `ஸ்ருதி'. கச்சேரி, நடனம், நாடகம் இவை எல்லாம் கவர் செய்வது மட்டுமல்லாமல், பல சாதனையாளர்களின் நேர்முகப் பேட்டிகளை மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், அவர்களின் சிறப்புகள், பெற்ற விருதுகள் பற்றி விளக்கங்களை வெளியிடுவதில் ஸ்ருதி தனித்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்கள் நன்கு அறிவர். தன்னை படிப்படியாக மெருகேற்றிவரும் ஸ்ருதியின் படைப்புகளை தற்போது ஆன்லைனிலும் படிக்கலாம். ஆப் (App) மற்றும் பிளாக் (Blog)லும் அப்டேட்ஸ் தெரிந்துகொள்ளலாம்" என்று வளர்ச்சியின் பாதைகளை விளக்கினார் ஸ்ருதி நிறுவனத்தின் இணைத் தலைவர் ஷங்கர்.

Sruti

“தலைமையாசிரியர் பட்டாபிராமன் அன்றே சொன்னார், ‘ஸ்ருதி நிச்சயமாக ட்ரெண்ட் செட் செய்யும்' என. அது இன்று நிஜமாகிவிட்டது. ஆர்ட் மேகஸீனில் பல புரட்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது `ஸ்ருதி'. திறமையான கலைஞர்கள் மட்டுமல்லாமல், எழுத்தாளர்களின் பங்கும் இருப்பது இந்தப் பத்திரிகைக்கே உரிய ப்ளஸ். விமர்சிக்கும் எழுத்தாளர்களும் கடுமையான விமர்சனங்களாக எழுதாமல், வார்த்தைகளைப் பயன்படுத்தும் விதம் மிகவும் அருமை. என்னுடைய நேர்முகப் பேட்டிதான் ஸ்ருதி-யில் பதிவான முதல் நேர்முகப் பேட்டி எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்கிறேன். 500-வது புத்தகம் வெளியீட்டு விழாவிலும் நாம் நிச்சயம் சந்திப்போம்" என்று வாழ்த்தினார் பாரம்பர்ய நாட்டிய உலகின் கதாநாயகன் தனஞ்செயன்.

Dhananjeyan

தனது டீனேஜிலேயே ‘ஸ்ருதி’யின் முதல் பதிப்பில் இடம்பிடித்த சங்கீத கலாநிதி ரவிகிரண் தனது உரையில், “எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் எல்லாவிதமான மியூசிக், டான்ஸ், டிராமானு கவர் செய்றதுல `ஸ்ருதி'தான் நம்பர் 1. அடுத்த புக் எப்போ வரும்னு எதிர்பார்த்துக்கிட்டே இருப்பேன். அந்த அளவுக்கு ஆர்ட்ஸ் பற்றிய விஷயங்களை எல்லாம் அவ்வளவு அழகா வெளியிடும் ‘ஸ்ருதி’. எது பண்ணணும்னு தெரிஞ்சுக்கிட்டதைவிட எதெல்லாம் பண்ணக் கூடாதுனு தெரிஞ்சுக்கிட்டு, நெகட்டிவ்ஸ் எல்லாம் நீக்கி தரமான புத்தகமா வெளிவருவதுதான் `ஸ்ருதி' '' என்று தனக்குப் பிடித்த பகுதியைக் கூறினார்.


டிரெண்டிங் @ விகடன்