வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (10/01/2018)

கடைசி தொடர்பு:16:24 (10/01/2018)

“நிஜ இசை ரசிகர்கள் கானா, கர்னாடகம்னுலாம் பிரிச்சுப் பாக்க மாட்டாங்க!” ‘கானா’ இசைவாணி #CastelessCollective

கானா பாடல்களுடன் ராக் ராப் இசையைக் கலந்து “ப்யூஷன்”(Fusion)னாக சென்னையில், கடந்த வாரம் நடைபெற்றது 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' இசை நிகழ்ச்சி. 19 கானா பாடகர்கள், கோட் சூட்டுடன் மேடையேறி பின்னிஎடுத்தார்கள். நீலம் பண்பாட்டு மையமும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸூம் இணைந்து நடத்திய இந்தப் பிரமாண்ட நிகழ்வில் இருந்த கானா பாடகர்களில் ஒரே பெண் இசைவாணிதான். கிட்டத்தட்ட 14 வருடங்களாகச் சிறு வயதிலிருந்தே லைட் மியூசிக், கானா என்று மேடைகளில் பாடி வருபவர். அவரிடம் உரையாடினோம்.

கானா

“கானா மீது விருப்பம் எப்போது வந்தது?"

"இசைதான் என் உயிர். இசையை ரசிப்பவர்கள் கானா, க்ளாசிக்ன்னுலாம் பாக்க மாட்டாங்க. எந்த இசையா இருந்தாலும் ரசிப்பாங்க. அப்பா லைட் மியூசிக் பாடுவார். நானும் லைட் மியூசிக் பாடுவேன். கானா பழனியப்பா, உலகநாதன் அப்பா, புண்ணியர்னு கானா பாடகர்கள் எல்லோரும் என் அப்பாவுடைய நண்பர்கள். ஆயிரம் விளக்கு செல்வா நான் பிறக்குறத்துக்கு முன்னாடி இருந்தே பாடியவர். அவங்களோட பாடல்கள் எல்லாம் கேக்கும் போது கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கும்."

"அப்படி கேட்கத் தூண்டுறது எதுன்னு நினைக்குறீங்க?"

"ஒரு வகையான ஆறுதல் கிடைக்கும். சந்தோஷமா இருக்கும்போது கேட்கிற கானா இன்னும் சந்தோஷத்தை பூஸ்ட் பண்ணும். இரங்கல் கானா கேக்கும் போது அவ்வளவு ஆறுதலா இருக்கும். தத்துவப் பாடல்களும் கானாவில் இருக்கு. அதுலாம் கேட்கும்போது கிடைக்கிற அந்த அமைதி அலாதியானது. ரொம்ப கஷ்டப்படுற நேரத்துல அதைக் கேக்கும் போது, மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும். நான் இரங்கல் கானா பாடும்போது, எனக்கும் அந்த ஆறுதல் கிடைக்கும்."

"Casteless Collective -குழுவில் எப்படி இணைந்தீர்கள்?"

"சபேஷ் அண்ணாவை ரொம்ப நாளா தெரியும். அவர் இதுபோல புதுசா ஒண்ணு பண்றோம்.. நீயும் கலந்துக்குறியாமான்னு கேட்டார். நானும் சரின்னு சொன்னேன். வடபழனில கிட்டத்தட்ட ஒரு மாசம் ப்ராக்டிஸ் செஞ்சோம். மொத்தம் இருபது பாடல்கள். இருபதுமே இந்த நிகழ்ச்சிக்காகவே உருவாக்கியவை. இதற்கான வரிகள் லோகு அண்ணா, அறிவு அண்ணா, டாடின்னு ஒரு அண்ணாவ கூப்பிடுவோம்… அவங்களெல்லாம்தான் எழுதினாங்க. பிராக்டிஸ் செய்த நாள்கள் செம்மையா போச்சு.  அங்க இருந்த முக்கால் வாசிப்பேர எனக்கு ஏற்கெனவே தெரியும். 'கானா' பழனியோட பையன் 'கானா' தரணி என்னோட ரொம்ப நாள் ஃப்ரெண்ட். இப்படி நாங்க எல்லாருமே ஒரு குடும்பமாத்தான் இருந்தோம்னே சொல்லலாம்"

கானா

"அந்த கோட்டு சூட்..?"

"நான் கோட் சூட் போட்ருக்கேன். ஆனா, கோட் சூட் போட்டுலாம் கானா பாடினது இல்ல. எனக்கு வேற ஏதாவது ட்ரஸ் கொடுப்பாங்கன்னு நெனச்சேன். பாத்தா எனக்கும் கோட் சூட் கொடுத்துட்டாங்க. ஹேர் ப்ளீச் பண்ணி…  கோட் சூட் போட்டு அந்த ஃபீல் சூப்பரா இருந்துச்சு."

"அந்தக் குழுவில் நீங்கள் மட்டும்தான் பெண்... தயக்கமோ, பயமோ இருந்ததா?

"எனக்கு சின்னத் தயக்கம் இருந்துச்சு. ஆனா… என்னால முடிஞ்ச அளவு ஃபுல் எனர்ஜியைக் காட்டினேன். அவங்க பாராட்டுகள் எனக்கு இருந்த தயக்கத்தைச் சுத்தமா போக்கிடுச்சு. நேர்ல விட, ஸ்டேஜ்ல நல்லா பாடுறன்னு சொன்னாங்க. ரஞ்சித் அண்ணா ‘நல்லா பாடினம்மா'னு பாராட்டினார். சாண்டி அண்ணா, விஜய் டிவி நவீன் அண்ணான்னு எல்லாரும் பாராட்டினதை மறக்கவே முடியாது"

"காலா படத்துல உங்க குழுவில இருந்து சிலர் நடிச்சு இருக்காங்கலாமே?"

"ஆமா. சிலர் நடிச்சிருக்காங்க. ரஞ்சித் அண்ணா ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கும் போது ஒரு சில முறை வந்தாரு. இயல்பாகப் பேசுவாரு. ரஞ்சித் அண்ணா கொடுத்த இந்த வாய்ப்பு ரொம்ப பெருசு."

"Casteless Collectiveவோட நோக்கம் என்ன?"

"இசைக்கும் நமக்கும் சாதி கிடையாது. சாதியற்ற ஒரு சமூகம். சாதியற்ற இசை. எல்லோருமே சமமா இருக்கணும். இதுதான் எங்களோட நோக்கம்."

"அடுத்து என்ன பண்ணப்போறீங்க?"

"எனக்கு இசைல பெரிய ஆளா வரணும்ன்னு ஆசை. Casteless Collective எனக்கான அந்த ஸ்பேஸை வழங்கியிருக்கு. இன்னும் வளரணும்.  வீட்டுச் சூழலால ப்ளஸ் ஒன் வரைதான் படிக்க முடிஞ்சுது. இப்போ படிக்கணுமுன்னு ஆசைப் படுறேன். இந்த வருஷம் பள்ஸ் டூ முடிச்சு கல்லூரி போய்டுவேன்."


டிரெண்டிங் @ விகடன்