வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (11/01/2018)

கடைசி தொடர்பு:10:49 (11/01/2018)

288 கோடி ரூபாய்... இஸ்ரோவின் கடந்தாண்டு கலெக்ஷன் ரிப்போர்ட்!

விண்வெளி ஆராய்ச்சிகள் என்றாலே, சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் அமெரிக்காவின் நாசாதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது அந்த நிலைமையெல்லாம் மாறிவிட்டது. அந்தளவுக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவருகிறது. உலகளவில் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற்ற நாடுகளே செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்ப பலதடவை முயன்று கொண்டிருக்க, இந்தியாவோ முதல் முயற்சியிலேயே மங்கள்யான் மூலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது. இத்தனைக்கும் நாசா இதற்காகச் செய்த செலவை விடவும் நம் விஞ்ஞானிகள் செய்த செலவு மிகமிக குறைவு. 'கிராவிட்டி' படத்திற்காக செய்த செலவை விடவும் இதற்காக செய்த செலவு குறைவு என அப்போது இதனைக் குறிப்பிட்டிருந்தார் பிரதமர் மோடி. இப்படி எல்லா ஏரியாவிலும் இஸ்ரோ தூள் கிளப்பிக்கொண்டிருக்க, பல நாடுகள் தங்கள் செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. 

இஸ்ரோவின் ராக்கெட்

இது போல செயற்கை கோள்களை நம் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு குறிப்பிட்ட தொகையை அந்தந்த நாடுகள் செலுத்த வேண்டியிருக்கும். அந்த வகையில் கடந்த 2016 -17 ஆண்டு மட்டும் இஸ்ரோவுக்குக் கிடைத்த தொகை 288.75 கோடி. 2015-16 (420.9 கோடி) ஆண்டை விட இது குறைவுதான் என்றாலும், 2014 -15ஆம் ஆண்டை விட இது இருமடங்காகும். அல்ஜீரியா, கனடா, ஜெர்மனி, இந்தோனேசியா, இஸ்ரேல், நெதர்லாந்து, கஜகஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் இந்தியாவிலிருந்து இந்திய ராக்கெட்கள் மூலம் கடந்த ஆண்டு ஏவப்பட்டிருக்கின்றன.101 நானோ செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவிய வரலாற்றுச் சாதனையும் இதில் அடங்கும். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏவப்பட்ட ‘கார்ட்டோசாட் 2’ ராக்கெட்டிலும் 14 நாடுகளைச் சேர்ந்த 29 நானோ செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. இதன் மூலம் மட்டும் 46.65 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது ‘ஆண்ட்ரிக்ஸ்’ நிறுவனம். இது இஸ்ரோவின் வணிக உடன்படிக்கைகளைக் கையாளும் ஒரு நிறுவனம். இதில் அமெரிக்காவிற்காகத்தான் அதிக அளவிலான செயற்கைக் கோள்கள் ஏவப்படுகின்றன. அமெரிக்காவின் ‘பிளானட்’ என்ற நிறுவனத்திற்காக மட்டும் 88 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டுள்ளன. கடந்த சில வருடங்களாகவே, இந்தியாதான் குறைந்த செலவில் செயற்கைக் கோள்கள் ஏவ நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முதல் தேர்வாக இருக்கிறது. இஸ்ரோவின் தொழில்நுட்ப வளர்ச்சியும், வெற்றிகளுமே இதற்குக் காரணம். செயற்கைக்கோள்கள் தோல்வியடைவதற்கான வாய்ப்புகளும் இங்கே மிகக்குறைவு. இஸ்ரோ இப்படிப்பட்ட வர்த்தக ரீதியிலான செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை வரும் வருடங்களில் இன்னும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

isro

இந்த வாரம் இஸ்ரோ இன்னொரு மைல்கல்லையும் எட்டவிருக்கிறது. வருகிற வெள்ளிக்கிழமையன்று மொத்தம் 31 செயற்கைக்கோள்களை, இஸ்ரோ விண்வெளியில் நிலைநிறுத்தவிருக்கிறது. இதில் 3 செயற்கைக் கோள்கள் மட்டுமே இந்தியாவுடையது. மீது 28 செயற்கைக்கோள்கள் கனடா, பின்லாந்து, ஃபிரான்ஸ், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் UK-வைச் சேர்ந்தவை. இவற்றின் மொத்த எடை 1,323 கிலோகிராம். இதற்கான கவுன்டவுன் இன்று தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை 9:28 மணிக்கு, பி.எஸ்.எல்.வி C-40 ராக்கெட் இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட இருக்கின்றன. இதில் இந்தியாவின் 100-வது செயற்கைகோளும் அடங்கியிருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்