எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்! #ChennaiBookFair

``வேறு எங்கோ ஓர் அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே" - மார்க் ட்வெய்ன். சென்னை புத்தகக் கண்காட்சி, இன்று தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்வில் மிக முக்கியமான நிகழ்வாக இந்தப் புத்தகக் கண்காட்சியைச் சொல்லலாம். இது, வெறுமனே புத்தகச் சந்தையாக மட்டுமே அல்லாமல் வாசகனையும் படைப்பாளியையும் ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக உள்ளது. நல்ல புத்தகங்கள் ஒருவரைச் சென்றடையும்போது அதன் வழியே அவரைச் சார்ந்தவர்களும் பயனடைவது உறுதி. புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழின் முக்கியமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் குறித்தும் கேட்டிருந்தோம்... வாருங்கள் வாசிப்போம்!

புத்தகங்கள்ச.தமிழ்ச்செல்வன், கரிசல் மண்ணின் வெக்கை தாங்கிய மனங்களின் கதைகளைச் சொன்னவர். இவரது `வெயிலோடு போயி' சிறுகதை, தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றில் ஒன்று. இவரது  `அரசியல் எனக்குப் பிடிக்கும்' என்ற கட்டுரைத் தொகுப்பு, பரவலான வாசகர்களை ஈர்த்தது. எழுத்து மட்டுமன்றி, இயக்கங்கள் சார்ந்தும் இயங்கிவருகிறார்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகச் செயலாற்றிவருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

``ஒருவர் ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்?''

``இந்த வாழ்வை வாசிப்பதற்காகத்தான் புத்தகம் வாசிக்க வேண்டும். நாம் பிறந்ததிலிருந்து நாம் பெற்ற வாழ்வனுபவம் ஒன்றை மட்டும் வைத்து, இந்த உலகையும் நம் சமூகத்தையும் நாம் வாழும் சமகாலத்தையும் புரிந்துகொள்ளப் போராடுகிறோம். வாசிப்பு என்பது, பலருடைய வாழ்வனுபவத்துடனும் பல்வேறு கண்ணோட்டங்களினுடனும் இந்த வாழ்வைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. நான் என்பதற்கு, வெளியில் உள்ள மற்றமைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு நம் வாழ்வைச் செப்பமாக வாழ வாசிப்பு மிகவும் அவசியம். பிற ஜீவராசிகளுக்கு வாசிக்கத் தெரியாது. ஆகவே, அவர்களுக்காகவும் சேர்த்து அவர்களை நீதியுடன் வாழவைப்பதற்காகவும் சேர்த்து நாம் வாசிக்க வேண்டும்'' என்றார்.

``நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள்...''

``1) மார்க்ஸிய மெய்ஞ்ஞானம் - ஜார்ஜ் பொலிட்சர் (தமிழில்: ஆர்.கே.கண்ணன்) என்.சி.பி.ஹெச்

மார்க்ஸியத்தை, இதைவிட எளிமையாகப் புரியவைக்கும் இன்னொரு நூல் இன்று வரை வரவில்லை. மார்க்ஸியத்தின் அடிப்படைகளான இயக்கவியல் பொருள் முதல்வாதத்தையும் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தையும் புரிந்துகொள்ள விழையும் இளம் வாசகர்களுக்கு மிகப் பொருத்தமான நூல்.

2) துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு – ஜாரெட் டைமண்ட் – தமிழில் – ப்ரவாஹன் – பாரதி புத்தகாலயம்

இந்த உலகில் ஒருசில நாடுகள் வளமாகவும் மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் இருக்கக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடிய பயணமாக இந்த நூல் அமைகிறது. மனிதகுலத்தின் 13,000 ஆண்டுகால வரலாற்றின் ஊடாக இந்த நூல் பயணிக்கிறது. மனிதச் சமூகங்களின் நிலையைத் தீர்மானித்த காரணிகள் பலவற்றையும் ஆய்கிற இந்த நூல், புவியியலின் பங்கை அழுத்தமாகப் பேசுகிறது.

3) சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு - முனைவர் தே.வீரராகவன் – தமிழில் – ச.சீ.கண்ணன், புதுவை ஞானம் - அலைகள் வெளியீட்டகம்.

1918-க்கும் 1939-க்கும் இடைப்பட்ட காலத்தில் சென்னை மாநகரத்தில் தொழிற்சங்க இயக்கம் வேரூன்றி கிளை பரப்பிய வரலாற்றைச் சொல்லும் நூல். அத்தோடு நில்லாமல் பாகிஸ்தான் பிரிந்து போயிராத அந்தக்கால இந்தியாவின் தொழிற்சங்க வரலாற்றின் பின்னணியில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பார்வையில்லாதவரான தே.வீர்ராகவன் கடும் உழைப்பைச் செலுத்தி உருவாக்கிய இந்த நுலை அப்படியே மொழிபெயர்க்காமல், மூல ஆவணங்களையும் வாசித்தும் விவரித்தும் தமிழில் வடித்திருக்கிறார் ச.சீ.கண்ணன்.

4) எழுக நீ புலவன் – ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு பதிப்பகம்

பாரதி பற்றி இதுவரை வெளிவராத பல உண்மைகள், தகவல்கள், நிகழ்வுகளின் சேகரமாக விளங்குகிறது இந்த நூல். பாரம்பர்ய வரலாற்றுப் போக்குகளையும் வரலாற்றின் வெளிச்சம்படாத இண்டு இடுக்குகளையும் ஒரே சட்டகத்துக்குள் கையாளும் முயற்சியாக இந்த நூல் அமைகிறது. `நம்ம பாரதியா இப்படி இருந்தான்!' என்று நம்மை அதிர்ச்சியடையவைக்கும் சில நிகழ்வுகள் இந்த நூலில் முதன்முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

5) பெரியார் – சுயமரியாதை சமதர்மம் – எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா – விடியல் பதிப்பகம்

எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா இவர்களின் வாழ்நாள் சாதனையாகப் போற்றப்படும் நூல். தந்தை பெரியாரின் பொதுவாழ்க்கையின் 30 ஆண்டுகால வரலாற்றை இந்த நூல் பேசுகிறது. காங்கிரஸ், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி, பொதுவுடமைக் கட்சி, பார்ப்பனியம் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் கருத்துகளையும் பெரியார் எதிர்கொண்ட முறைகளை இந்த நூல் விரிவாக விளக்குகிறது. அந்தோணியோ கிராம்ஷியின் சிந்தனைகளுடன் பெரியாரின் சிந்தனையைப் பொருத்திப்பார்க்கும் பார்வை நூலின் தனிச்சிறப்பு.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!