வெளியிடப்பட்ட நேரம்: 07:49 (11/01/2018)

கடைசி தொடர்பு:08:44 (11/01/2018)

மகிழ்ச்சி குறையாமல் வாழ்வது எப்படி? பூனை சொன்ன பாடம்! #MotivationStory

மகிழ்ச்சி கதை

ந்த வாழ்க்கையில ஒரே ஒரு மகிழ்ச்சிதான் இருக்கிறது. அது, நேசிப்பது, பிறரால் நேசிக்கப்படுவது’ என்கிறார் ஃபிரெஞ்ச் நாவலாசிரியை ஜார்ஜ் சேண்ட் (George Sand). நம்மை எல்லோரும் விரும்பவேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது, நாம் பிறரை விரும்புவது. அதிலும், பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள்தான் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள். தான், தன்னலம் என்று வாழ்கிறவர்களிடம் சந்தோஷம் நிரந்தரமாகத் தங்குவதில்லை. பிறரைப் பற்றிய யோசனைகூட இல்லாத மனிதர்களிடம் மகிழ்ச்சி நீடித்திருப்பதில்லை. அதைத் தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பிரம்ம சூத்திரமில்லை. கொஞ்சம் விரிவான பார்வை இருந்தாலே போதும், சந்தோஷம் என்கிற அபூர்வ சக்தியை என்றென்றும் நம்முடனேயே வைத்துக்கொள்ளலாம். அது எப்படி என்று விளக்குகிறது இந்தச் சிறிய கதை

அது லண்டனிலுள்ள ஒரு மனநல மருத்துவரின் கிளினிக். அவரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்திருந்தார். அந்த ஊரிலுள்ள அனைவருக்கும் அவரைத் தெரியும். அவர் கணவர் பரம்பரைப் பணக்காரர். சொத்து, நிலம் எதற்கும் குறைவில்லை. மருத்துவர் ஒரு புன்முறுவலோடு அவரை வரவேற்றார். அவருக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தார். பெண்மணி நேரடியாக விஷயத்துக்கு வந்தார்... ``டாக்டர்... எனக்குத் திரும்பிப் பார்க்குறப்போ, என் மொத்த வாழ்க்கையுமே வெறுமையாத் தெரியுது. இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லைங்கிற எண்ணம் தினமும் என்னைப் பாடாகப் படுத்துது...’’

மனநல மருத்துவர் அந்தப் பெண்மணியின் பிரச்னையைப் புரிந்துகொண்டார். ஒரு கணம் யோசித்தார். ``ஒரு நிமிஷம்...’’ என்றவர் காலிங் பெல்லை அடித்தார். உதவியாளரிடம் ``மேரியை வரச் சொல்லுங்க’’ என்று சொல்லியனுப்பினார். 

மகிழ்ச்சியான மனநல மருத்துவர்

சிறிது நேரத்தில், டாக்டர் குறிப்பிட்ட மேரி உள்ளே வந்தார். அவருக்கு எப்படியும் 65 வயதுக்கு மேல் இருக்கலாம் என்பதைத் தோற்றத்தைவைத்தே பணக்காரப் பெண்மணிக்குத் தெரிந்தது. கொஞ்சம் குண்டாக, வாயெல்லாம் சிரிப்பாக உள்ளே நுழைந்திருந்தார் மேரி. டாக்டர், பணக்காரப் பெண்மணியை மேரிக்கு அறிமுகப்படுத்திவைத்தார். பிறகு அவரிடம், ``இவங்க மேரி... நம்ம கிளினிக்கைப் பெருக்குற, துடைக்கிற வேலை பார்க்குறாங்க. மேரி, அவங்களோட வாழ்க்கையில மகிழ்ச்சியைக் கண்டுபிடிச்சாங்கனு சொல்லச் சொல்றேன். கொஞ்சம் கவனமாக் கேளுங்க. அதுக்கு அப்புறம் பேசுவோம்’’ என்றார் டாக்டர். அந்தப் பெண்மணிக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. `நாம் ஒரு டாக்டரிடம் ஆலோசச்னைக்கு வந்தால், அவர் வேறு ஒருவரைக் கூப்பிட்டு எதையோ சொல்லச் சொல்கிறாரே...’ என்றுகூடத் தோன்றியது. ஆனாலும் அமைதியாக `சரி’ என்பது போலத் தலையை அசைத்தார். 

மேரி ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்துகொண்டார். பேச ஆரம்பித்தார்... ``மூணு மாசத்துக்கு முன்னாடி என் கணவர் மலேரியா ஜுரம் வந்து இறந்துபோயிட்டார். அதுக்கும் மூணு மாசத்துக்கு முன்னாடி என் ஒரே மகன் ஒரு விபத்துல இறந்துபோயிட்டான். வாழ்றதுல ஒரு அர்த்தமும் இல்லை; வாழ்க்கையில பிடிப்பே இல்லாமப் போயிடுச்சு. என் கணவர் போனதுக்கப்புறம் என்னால சரியா சாப்பிட முடியலை, தூங்க முடியலை. என் முகத்துலருந்து சிரிப்பு காணாமப் போயிடுச்சு. சமயத்துல செத்துப் போயிடலாமானுகூட தோண ஆரம்பிச்சிடுச்சு. 

அந்த நேரத்துலதான் அது நடந்தது. ஒருநாள் வேலை முடிஞ்சு வீட்டுக்கு நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். பாதி தொலைவு வந்தப்புறம் திரும்பிப் பார்த்தேன். ஒரு பூனைக்குட்டி பின்னாலேயே நடந்து வந்துக்கிட்டு இருக்குறது தெரிஞ்சுது. நான் அதை கவனிக்காத மாதிரி நடக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் தூரம் போனதுக்கு அப்புறம் பார்த்தா, மறுபடியும் அந்தப் பூனைக்குட்டி பின்னாடியே வந்துக்கிட்டு இருந்துச்சு. அது ரொம்ப களைச்சுப் போயிருந்துச்சு. வெளியில குளிர் வேற ரொம்ப அதிகமா இருந்துதா... அது லேசா நடுங்கிக்கிட்டு இருந்துச்சு. சரி அதை வீட்டுக்குத் தூக்கிட்டுப் போலாம்னு முடிவு பண்ணினேன். 

கூடைக்குள் பூனை

வீட்டுக்கு வந்து ஒரு பிளேட்ல கொஞ்சம் பாலை ஊத்தினேன். அவ்வளவுதான் அந்தப் பூனைக்குட்டி வேக வேகமா மொத்தப் பாலையும் நக்கிக் குடிச்சிடுச்சு. அப்புறம் லேசா முறைச்சுப் பார்க்குற மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டே என் கால்கிட்ட வந்து உரசுற மாதிரி நின்னுச்சு. வாலை லேசா காத்துல வீசுற மாதிரி அசைச்சுக்கிட்டே என்னைப் பார்த்தது. பசி தீர்ந்த அதோட திருப்தி எனக்கு நல்லாத் தெரிஞ்சுது. ரொம்ப நாள் கழிச்சு அன்னிக்கித்தான் என் முகத்துல சிரிப்பு வந்தது. 

அதுக்கப்புறம் நான் யோசிச்சேன்... `ஒரு பூனைக்குட்டிக்கு உதவி செஞ்சாலே நமக்கு மகிழ்ச்சியும் சிரிப்பும் வருதே... மத்தவங்களுக்கு நம்மால ஆன உதவிகளைச் செஞ்சா எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும்.’ அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். இன்னிக்கி என்னைவிட நல்லா சாப்பிடுற, நிம்மதியாத் தூங்குற, சந்தோஷமா வாழுற யாருமே கிடையாதுனுதான் நான் நினைக்கிறேன். நான் மத்தவங்களுக்கு உதவி செய்யறதின் மூலமா என் மகிழ்ச்சியைக் கண்டுபிடிச்சேன்.’’ மேரி சொல்லி முடித்தார். 

அந்தப் பணக்காரப் பெண்மணிக்குக் கண்களில் நீர் சுரந்தது. அவருக்குத் தன் வாழ்க்கை ஏன் வெறுமையாகவும், அர்த்தமில்லாததாகவும் இருக்கிறது என்பதும் புரிந்தது. 

*** 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்